தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏமாற்றம்!

ஏமாற்றம்!

ஏமாற்றம்!


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரீன்லாந்து நாட்டில் வசித்து வந்தான் தமார்தாஸ்; வசதியானவன். வெகுநாளுக்குப்பின், மகன் பிறந்ததால் மகிழ்ந்து அண்டை, அயலாருக்கு விருந்தளித்தான்.

உறவினர்கள், விலை உயர்ந்த பரிசுகள் கொடுத்தனர்.

அவனது அண்டை வீட்டுக்காரன் ஏழை! பரிசாக விளைந்த பட்டாணியை சிறிய பையில் எடுத்து வந்தான். அதைக்கண்டு, 'உன் பட்டாணியை எடுத்துக் கொண்டு, நரகத்திற்குப் போ... அங்கு, பிசாசுகள் பட்டாணிக்காக காத்திருக்கின்றன; அவற்றுக்கு உபயோகமாக இருக்கும்...' என்று கோபத்துடன் கூறினான்.

'நரகத்தை, எங்கு தேடுவேன்...' என்றான், அப்பாவி ஏழை.

'சூரியன் மறையும் திசை நோக்கிச் செல், விரைவில் நரகத்தை அடைவாய்...' என்றான் தமார்தாஸ்.

மிகவும் வருத்தத்துடன், நரகம் நோக்கி நடந்தான் ஏழை. காட்டின் ஓரத்திற்கு வந்தான். எதிரே வந்த வயதானவர் பிச்சை கேட்டார். மனங்கனிந்து பட்டாணியைக் கொடுத்தான்.

'நரகத்திற்கு ஏன் போகிகிறாய்...' என்றார் பிச்சைக்காரர்.

பக்கத்து வீட்டில் பணக்காரனுடன் ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தான். கடினப்பாதையில் நடப்பதை சொன்னான்.

ஏழைக்கு மூன்று கற்களைக் கொடுத்த பிச்சைக்காரர், 'இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்... வீட்டை அடைந்தவுடன், ஒரு கல்லை தானியக் குதிருக்குள் போட்டு விடு. மீதமுள்ள, கற்களை மற்ற இரு குதிர்களுக்குள் போடு. காலையில் என்ன நடக்கிறது என்று பார்...' என்றார், பிச்சைக்காரர்.

அது போல செய்தான் ஏழை.

மறுநாள் காலை, தானியக் குதிர்களை திறந்தான். முதல் குதிரில் வெள்ளியும், இரண்டாவதில், தங்கமும், மூன்றாவதில், கோதுமையும் நிறைந்திருந்தன.

ஏழை குடும்பம் மகிழ்ச்சியடைந்தது. தங்கம், வெள்ளி, கோதுமையை அளக்க விரும்பி, பக்கத்து வீட்டு தமார்தாசிடம் தராசு வாங்கி வர, மகளை அனுப்பினான் ஏழை.

அந்த சிறுமி, 'எங்க வீட்டில், ஏராளம் தங்கக்காசுகள் உள்ளன; அவற்றை அளக்க, தராசை இரவல் தாருங்கள்...' என்றாள்.

மிகவும் பொறாமையுடன், 'உன் அப்பன் யாரையாவது ஏமாற்றி, உமியைக் கொண்டு வந்திருப்பான்...' என்று தராசை கொடுத்து சிரித்தான் தமார்தாஸ்.

தங்கக்காசுகளை அளந்தான் ஏழை. தராசு பிளவில், ஒரு தங்க நாணயம் சிக்கியது. தராசை திரும்ப கொடுத்தபோது அதைக் கண்டான் தமார்தாஸ். அதிர்ச்சியுடன் ஏழை வீட்டுக்கு வந்தான்.

மிகுந்த பொறாமையுடன், 'தங்கக்காசுகள் எல்லாம் நரகத்திலா கிடைத்தது. உண்மையைச் சொல்; உன்னை அனுப்பியது நான்தானே...' என்றான்.

புன்னகையுடன், 'நரகத்தை நோக்கி நடந்தேன். பட்டாணி கையில் இல்லாமலிருந்தால் இச்செல்வத்தை அடைந்திருக்க முடியாது...' என்றான் ஏழை.

முழு விவரத்தையும் கேட்டு அறியும் பொறுமையின்றி அலைபாய்ந்தான் தமார்தாஸ். பொறாமையுடன் வீடு திரும்பி, மனைவியிடம் தின்பண்டம் தயாரிக்கச் சொன்னான். அவற்றை மூட்டையாக கட்டியவன், 'நரகத்திலிருந்து அதிக செல்வம் கொண்டு வருவேன்...' எனக்கூறி புறப்பட்டான்.

வழியில் தின்பண்டத்தை வயிறு முட்டத் தின்றான். எதிரில் வந்த முதியவர், பசியுடன் இருப்பதாக கூறினார். ஏளனமாக சிரித்தபடி, 'எதுவும் இல்லை...' என்றான் தமார்தாஸ்.

'சிறு ரொட்டி துண்டாவது தாருங்கள்...' என்று கெஞ்சினார் முதியவர்.

'எதுவும் இல்லை; என் தின்பண்டங்களையும் தர முடியாது...'

வெக வேகமாக நடந்தான்.

'நீங்கள் வெகுதுாரம் போகிறீரா...'

'அதைப் பற்றி உனக்கு என்ன கவலை... மற்றவர் விஷயத்தில் தலையிடாதே...'

கோபமாக கூறி பயணத்தைத் தொடர்ந்தான் தமார்தாஸ்.

மீண்டும் அவன் வீடு திரும்பவேயில்லை.

குட்டீஸ்... பொறாமை மனதில் இருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us