தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி சிறுவன்! (1)

புரட்சி சிறுவன்! (1)

புரட்சி சிறுவன்! (1)


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணிக்கம் அணிந்து இருந்த அரைக்கால் சட்டை இடுப்பில் நிற்கவில்லை. நழுவி விடுவது போல் பயமுறுத்திக்கொண்டிருந்தது. வேலை செய்த யார் வீட்டிலோ பழையதை வாங்கி வந்திருந்தாள் அம்மா! ஏதோ ஒரு குண்டு பையனுடையதாக இருக்கலாம். வயிறு முட்டச் சாப்பிட்டாலும் இடுப்பில் நிற்பதில்லை கால்சட்டை.

தொளதொளத்ததை இடக்கையால் மடக்கி பிடித்தபடி நடந்தான். வலக்கையில் செருப்பு தைக்கும் தொழில் கருவிகள் இருந்தன. அன்று உடன் வரவில்லை அப்பா; அவருக்கு சுகமில்லை. இரவெல்லாம் வாந்தியெடுத்து புரண்டு கொண்டிருந்தார்.

மாணிக்கத்துக்கு, 12 வயது; பள்ளியில், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, செருப்பு தைக்கும் தொழிலுக்கு அழைத்து வந்துவிட்டார் அப்பா. மறுத்து கெஞ்சி அழுது பார்த்தான்; எதற்கும் மசியவில்லை. கல்வி பயிற்சி தடைபட்டது.

வேறு வழியின்றி அந்த தொழிலை செய்து வந்தான்.

''என்னடா... அப்பா வரல்லையா...''

குரல் கேட்டு திரும்பினான் மாணிக்கம். பெரிய சாக்கு பையுடன், பின்னால் வந்து கொண்டிருந்தான் நண்பன் முருகன். குப்பைத்தொட்டிகளில் பழைய பொருட்களை தேடி சேகரிப்பது அவன் தொழில்.

''அவருக்கு சுகமில்லை... இரவெல்லாம் ஒரே வாந்தி...''

''வழக்கமா வரும் வாந்தி தானே...'' என்று ஏளனமாக கேட்ட முருகன், ''என் வீட்டிலும் அதே கதை தான்; தினமும் குடித்துவிட்டு தான் வருகிறார் அப்பா. நள்ளிரவு தாண்டியும் ரகளை; அடி வாங்கி சாகிறார் அம்மா...'' என்றபடி கவலையை வெளிப்படுத்தினான்.

வெறுமையுடன் சிரித்தான் மாணிக்கம்.

''சிரிக்கிற விஷயமா...''

''பின் என்ன செய்வதாம்... அழுது புலம்புவதால் ஆகப்போவது என்ன... நம்மைப் போன்ற கையாலாகாதவர்கள், சிரித்துத்தான் துன்பத்தை ஆற்றிக்கொள்ள வேண்டும்...''

''என்னடா பெரிய தத்துவமெல்லாம் பேசுகிறாய்...''

''புதிதாக எதுவும் சொல்லவில்லை; அம்மா, அடிக்கடி புலம்புவதை அவிழ்த்துவிட்டேன்; அவ்வளவு தான்... அது சரி... இப்போ தான் கிளம்பினாயா...''

''ஆலைச் சங்கு ஒலிக்கும் போதே கிளம்பி விட்டேன்...''

''காலியாக தெரிகிறதே சாக்கு. ஒன்றும் கிடைக்கலையா...''

''சாக்கு காலிதான்; இன்னும் குப்பை எதுவும் விழவில்லை; இப்போதெல்லாம் நிறைய பேர் வீட்டு வளாகத்திலே குப்பையைக் கொளுத்திவிடுகின்றனர்...''

''இருக்கும், இருக்கும்... குப்பை பெருகிவருகிறது அல்லவா...''

''சரி வா... நடந்தபடியே பேசலாம்; சாக்கு நிறையக் குப்பை பொருட்களை சேகரித்து போகாவிட்டால் அப்பா திட்டுவார். சில சமயம் அடியும் விழும். தெருவோரம் படுத்து துாங்கி, காலி சாக்குடன் வருவதாக குற்றம் சாட்டி மிதிப்பார்...''

ஆதங்கத்தை வெளிபடுத்தியபடியே நடந்தனர்.

தெரு ஓரம் கிடந்த காகித அட்டை, பிளாஸ்டிக் பை, கண்ணாடி குப்பிகளை எடுத்து, சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டான் முருகன்.

''கிளம்பி நீண்ட நேரம் ஆகிவிட்டது என்றாயே... இன்னும் இந்தப் பக்கமாகவேயா சுற்றிக் கொண்டிருக்கிறாய்...''

''ஆமாம்; சில வீடுகளில் குப்பையை அதிகாலையில் கொட்ட மாட்டர். அதனால், 9:00 மணி வரை சுற்றிவிட்டு, வேறுபகுதிக்குப் போவேன். அது சரி... உன் இடம் வந்து விட்டது. போய் குந்து...''

விடை பெற்றான் முருகன்.

சாலையோரம் மரத்தடியில் உட்கார்ந்தான் மாணிக்கம். பையைத் திறந்து, தொழிற்கருவிகளை முன்னால் பரப்பினான்.

தெருவில் நடந்த கால்களில் காலணிகளை கவனித்தான். கொஞ்சம் நைந்துபோனது மாதிரி காலணி அணிந்திருப்பவரைக் கண்டால், 'ஐயா... இன்னும் சிறிதுநேரத்தில் அறுந்து விடும்போல் இருக்கிறதே உங்க செருப்பு... தைத்து கொடுக்கட்டுமா...' என்று பணிவாக கேட்பான்.

'மாலை திரும்பும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணுவோரும், 'இவன் சொல்வதும் சரிதானே... செருப்பு வார் அறுந்து விட்டால் என்ன செய்வது' என்ற ஞானம் ஏற்பட்டு, உடனே கழற்றிக் கொடுப்பர்.

இது அப்பாவிடம் கற்ற பாடம்.

அன்று எவரும் அவன் பக்கம் திரும்பவில்லை. பளபளவென மெருகு ஏறிய காலணி அணிந்தபடி தான் கடந்து சென்றன கால்கள். இது ஏமாற்றத்தை அளித்தது.

மாணிக்கம், தனியாக தொழிலுக்கு வருவது முதல் முறை இல்லை; இருந்தாலும், வழக்கமான வரும்படியுடன் போகாவிட்டால் அப்பாவிடம் அடி வாங்க வேண்டியிருக்கும்.

அவனுக்கு கவலையாக இருந்தது.

காலையில் வழக்கமாக குடிக்கும் கஞ்சி கூட அன்று கிடைக்கவில்லை. மதியத்துக்குள், சம்பாதிக்க முடிந்தால், ஏதாவது வாங்கி தின்று பசியாறலாம் என எண்ணினான்.

கால்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் மனமோ, அற்பத்தனமான வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

அப்பா குடிகாரர்; நோயாளியான அம்மா, அக்கம்பக்கம் வீடுகளில் பற்றுப்பாத்திரம் துலக்கிச் சம்பாதித்தாள். அவள் கொண்டு வரும் பணத்தையும், பிடுங்கி போய் விடுவார் அப்பா. அவர் கேட்கிறபோதெல்லாம் காசு கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அடி, உதைதான் கிடைக்கும். காசு இல்லை என்று கையை விரிக்க கூடாது. வேலை செய்யும் வீட்டு எஜமானியிடம் கடன் வாங்கியாவது கொடுத்தாக வேண்டும்.

அப்பாவின் இரும்புகைகளில் சிக்கி, அம்மா அடி வாங்கும் போதெல்லாம் அவன் மனம் பயத்தில் தவிக்கும். பயத்தை தாண்டி ஆத்திரம் வரும். குறுக்கே பாய்ந்து தடுக்க மனம் பரபரக்கும். எதுவுமே செய்ய முடியாமல் பலவீனமாக நிற்பான். சுவரில் சாய்ந்து விரல் சூப்பியபடி கண் கலங்குவான். செய்ய முடிந்தது அது மட்டும் தான்.

'சீக்கிரம் பெரியவனாகி அம்மாவை எங்கேயாவது அழைத்து போய் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். சம்பாதித்து மூன்று வேளையும் வயிறார சோறு போட வேண்டும். தங்கையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்.

ஆனால், படித்து முடித்து வேலையை தேடிக் கொள்ள இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதுவரையிலும் நரகம் தானா' என யோசிப்பது அவன் வழக்கம்!

இப்படி யோசித்தது கடந்த ஏப்ரல் மாதம் வரை தான். பின், அந்த யோசனைக்கு பொருள் இல்லாமல் போயிற்று. காரணம், அவன் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டார் அப்பா.

பள்ளியில் படிக்க முடியாமல் போனது பற்றி வருந்தி பெருமூச்சு விட்டான் மாணிக்கம்.

- தொடரும்...

ஜோதிர்லதா கிரிஜா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us