PUBLISHED ON : டிச 02, 2011

இந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரனும், ரத்தினபுரி அரசன் மயூரத்வஜனும் ஒரே சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்யத் தீர்மானித்தனர். ஆனால், ஒருவர் தீர்மானித்தது மற்றவருக்கு தெரியாது. அஸ்வமேதயாகம் செய்யபட்டத்து குதிரையை தகுந்த காவலோடு நாடு சுற்ற அனுப்புவார்கள். அதை யாராவது கட்டிப் போட்டால், அவர்கள் ஜெயித்த பிறகே குதிரையின் பயணம் தொடரும்.
யுதிஷ்டிரரின் குதிரைக்கு கிருஷ்ணரும், அர்ஜூனனும், காவலாகச் சென்றனர். மயூரத்வஜன் தன் குதிரைக்குத் துணையாக தன் மகன் தாம்ரத்னவஜனை அனுப்பி வைத்தான்.
மயூரத்வஜன் ஸ்ரீகிருஷ்ண பகவானிடம் அதிக பிரேமை கொண்டிருந்தவன். இருதரப்பினரும் இடையில் சந்தித்து ஒருவர் குதிரையை ஒருவர் பிடிக்க முற்பட பெரும் சண்டை நடந்தது. அர்ஜூனனை மயங்கி விழச் செய்தார்.
தாம்ரத்வஜன் இரு குதிரைகளோடு நாடு திரும்பினான். நடந்ததை அறிந்த மயூரத்வஜன் வருத்தப்பட்டான்.
''மகனே! கண்ணன், அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய்... நைவேத்ய பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு வந்த நாய் போலானோமே! இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறோம்,'' என நொந்து கொண்டான்.
மயக்கம் தீர்ந்த அர்ஜூனனோ கொதித்துப் போயிருந்தான்.
''அர்ஜூனனை ஒருவன் வெல்லவதா? நான் நாகலோகத்தை ஜெயித்தவன்... கண்ணனின் உறவினர். எனக்காக இந்த கதி!'' என்று பொருமினான்.
''பொறுமையாக இரு. நாம் ரத்தினபுரி செல்வோம். ஆனால், ஒரு நிபந்தனை. அங்கே என்ன நடந்தாலும் நீ வாயே திறக்கக் கூடாது. எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது,'' என்றார்.
அர்ஜூனனும் அதற்கு சம்மத்தித்தான்.
கண்ணனையும், அர்ஜூனனையும் கண்டதும் மகிழ்ச்சியோடு விரைந்து வந்து வரவேற்றார் மயூரத்வஜன்.
''தவறு நடந்துவிட்டது. பெரிய மனது பண்ணி எங்களைப் பொருத்தருள வேண்டும்,'' என்று பணிவுடன் வணங்கி குதிரையை அழைத்துவரச் செய்து ஒப்படைத்தான்.
''அபராதத்தை சும்மா மன்னிக்க முடியும்? பரிகாரம் செய்ய வேண்டும்,'' என்றார் கண்ணன்.
''என்ன பரிகாரமானாலும் செய்கிறேன் சொல்லுங்கள்,'' என்று வேண்டினான் மயூரத்வஜன்.
''தவறு செய்த உன் மகனை மனப்பூர்வமக நீயும், உன் மனைவியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை எனக்குத் தானமாகத் தரவேண்டும். உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும், கண்ணீர் சிந்தினாலும் தானத்தை ஏற்க மாட்டேன்,'' என்றார் கண்ணபிரான்.
''கண்ணா! என்னிடம் இருப்பதைக் கேட்டதற்காக ஆனந்தப்படுகிறேன். எங்களுக்கு பரிபூர்ண சம்மதம். ஒருவன் தலையில் விதித்தப்படிதான் வாழ வேண்டும். ஒரு விநாடி கூட அதிகமாக வாழ முடியாது என்பதை நானும் அறிந்தவன்தான்! ஒவ்வொரு சூரியோதயமும் இதை உணர்த்துகிறது. உனக்கு தானம் செய்ய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,'' என்றார் மயூரத்வஜன்.
தாம்ரத்வஜன் தைல ஸ்நானம் செய்து வந்தான். கிழக்குப் பார்த்து மனைப் பலகையில் அமர்ந்தான். மனைவி ஆடாதபடி மகன் உடலைப் பிடித்துக் கொள்ள மயூரத்வஜன் கத்தியால் பிள்ளையை அறுக்கத் தொடங்கினான்.
தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது.
''நிறுத்துங்கள். இந்த தானத்தை நான் ஏற்பதற்கில்லை,'' என்றார் கிருஷ்ணர்.
மயூரத்வஜன் பதறியபடி, ''ஏன் ஸ்வாமி! மூவரில் யார் என்ன குற்றம் செய்தோம்?'' என வினயமாகக் கேட்டான்.
''அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான். அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தைத் தரும்,'' என்றார் கிருஷ்ணர்.
''இதென்னா கொடுமை? கண்ணன் ஏன் இப்படி இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறார்?'' என அர்ஜூனன் புழுங்கினான்.
''பரந்தாமா, பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். கண்ணீர் வழிவது என் இடது கண்ணில். நீங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை. ஒரே உடம்பாயிருந்தும் இடது பக்கம் நான் தானம் போக அறுகதையற்று போனேனே என அழுகிறது. க்ஷத்ரியனை ரத்தமும், கத்தியும் பயப்படுத்தாது. இருகைகளும் இணைந்து தான் தெய்வத்தை வணங்குகின்றன. அப்படி இருக்கும்போது நான் எந்த விதத்தில் தாழ்வு ஆனேன் என வருந்திக் கண்ணீர் விட்டது என் இடது கண்,'' என விளக்கம் அளித்தான் தாம்ரத்வஜன்.
கண்ணன் கடைக்கண்ணால் அர்ஜூனனைப் பார்த்தார். அந்தப் பார்வையில் , ''பார்த்தாயா! இப்படிப்பட்ட தேக சமர்ப்பணத்தைச் செய்த இவன் உன்னை வெற்றி கொண்டது பொருத்தமானது தானே? உன் அகந்தை அழிந்ததா?'' என்ற கேள்விகளைப் படித்தான் அர்ஜூனன்.
''மன்னா! தாம்ரத்வஜா! செயற்கரிய செயலைச் செய்து பெரியவர்களாய் உயர்ந்து நிற்கிறீர்கள்! நான் உங்கள் முன் சிறுமைப்பட்டு நிற்கிறேன்,'' என்றான் அர்ஜூனன்.
''அப்படியெல்லாமொன்றுமில்லை,'' என்று மயூரத்வஜன் அடக்கமாகச் சொல்ல கண்ணன் அருளால் தாம்ரத்வஜன் பூரண தேஜஸோடு மீள, விருந்துண்டு விடை பெற்றனர்.
மயூரத்வஜன் அஸ்வமேத யாகம் நடத்துவதைக் கைவிட்டான். அர்ஜூனன் அவர்களை இந்திரப்பிரஸ்தத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான்.
***
