தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நண்பா... நண்பா...!

நண்பா... நண்பா...!

நண்பா... நண்பா...!


PUBLISHED ON : ஜூலை 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது ஒரு காடு. ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவைகளால் நிறைந்து விளங்கியது. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஓடியும், நடந்தும், பறந்தும், ஊர்ந்தும் திரிந்து கொண்டிருந்தன. அனைத்தும் தங்கள் இனத்தவருடன் கூடியும், குலாவியும், நட்பு கொண்டும் மகிழ்ந்திருந்தன.

அங்கே ஓர் ஆலமரத்தின் கீழே ஏராளமான இலைகள் விழுந்து கிடந்தன. அவைகள் காய்ந்த சருகு இலை. அதன் அருகில் ஒரு களிமண் கட்டியும் கிடந்தது. அவைகளுக்கு இடையில் நட்பு மலர்ந்தது. சில நாட்களில் நட்பு இறுக்கம் அடைந்தது.

ஒருநாள் ஆலிலைச் சருகும், களிமண் கட்டியும் பேசிக் கொண்டிருந்தன.

''நாம் இருவரும் நல்ல நண்பர்களாய் இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறோம். இந்த மரத்தடியுடன் நம் வாழ்க்கை முடிந்து போகலாமா? கூடாது... வெளி உலகத்துக்குச் சென்று பார்த்து வருவோமா?'' என்று ஆலிலைச் சருகு கேட்டது.

சருகு பேசியதை, களிமண் கட்டி கவனமாய்க் கேட்டது. ஒரே இடத்தில் பல நாட்கள் இருப்பதை களிமண் கட்டியும் விரும்பவில்லை. எனவே, சருகு சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டது.

''அப்படியானால் நாம் இருவரும் வெளி உலகச் சுற்றுப்பயணம் சென்று வருவோம்,'' என்று இரண்டும் சுற்றுப் பயணம் புறப்படத் தயாராயின.

ஆலிலைச் சருகும், களிமண் கட்டியும் சுற்றுப் பயணம் சென்று கொண்டிருந்தன. இருவரும் மகிழ்ச்சியாய் உரையாடியபடி நடந்து சென்றன. சூரியன் அனலைப் பொழிந்து கொண்டிருந்தது. தாங்க முடியாத வெப்பம். சில மணி நேரத்தில் மேகங்கள் கூடின. மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றின.

ஓரிரு மழைத்துளிகள் பூமியில் விழுந்தன. களிமண் கட்டி பயந்தது. ஆலிலைச் சருகு உடனே செயல்பட்டது. அது களிமண் கட்டியை மூடி மறைத்துக் கொண்டது. மண் கட்டியின் மேல் மழை நீர் விழாதபடி அது பாதுகாத்தது. மழை நின்றதும் நண்பர்கள் இருவரும் சில காலம் அங்கே தங்கினர்.

நண்பர்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினர். காட்டில் உள்ள அதிசயங்களைப் பார்த்தபடி அவர்கள் நடந்தனர். நீண்ட தொலைவு பயணம் செய்தவர்கள் களைப்படைந்தனர். ஓரிடத்தில் தங்கி ஓய்வு எடுத்த பின் மீண்டும் தொடர்ந்து நடந்தனர்.தென்றலாய் வீசிய காற்று, சில நிமிடங்களில் மாற்றம் அடைந்து, புயல் போல் வடிவம் எடுத்து, புழுதி பறத்திக் கொண்டு ஓடி வந்தது.

காற்று எழும்பி வருவதைக் கண்ட சருகு அச்சம் கொண்டது. களிமண் கட்டி விரைந்து செயலாற்றியது. அது ஆலிலைச் சருகின்மேல் அப்படியே ஜம்மென அமர்ந்து கொண்டது. வேகமாக வீசிய காற்றால், களிமண் கட்டியை அசைக்க முடியவில்லை. ஆலிலைச் சருகு தப்பித்துக் கொண்டது.

களிமண் கட்டியும், ஆலிலைச் சருகும் ஒருவரை ஒருவர் நன்றியுடன் பார்த்தன. அவர்கள் நட்பு மேலும், வளர்ச்சி அடைந்தது. அங்கே பல நாள் ஓய்வு எடுத்தன.

பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கின. நெருக்கமும், இறுக்கமும் கொண்ட அவர்கள் நட்பு வானத்து நிலவு போல் முழு வளர்ச்சி அடைந்தது.

சில நாட்கள் சென்றன-

வெளி உலகத்தைப் பார்த்து வரும் பயணத்தை அவை மீண்டும் தொடங்கின. ஓரிடத்தில் நெருங்கியதும் அவை மிகவும் அச்சம் அடைந்தன. ஏனென்றால், ஒரே நேரத்தில் அங்கு காற்றும் வீசியது; மழையும் பெய்தது. மழை நீரில் களிமண் கட்டி கரைந்து உலகை விட்டு மறைந்தது.

ஆலிலைச் சருகு வருந்தி அழுதது. தன் நண்பனின் பிரிவை அதனால் தாங்க முடியவில்லை. திடீரென காற்றின் வேகம் அதிகரித்தது. அது ஆலிலைச் சருகை அப்படியே தூக்கிச் சென்றது. சில வினாடிகள் சென்றதும், காற்றின் வேகம் குறைந்தது. அது சருகை கருங்கல் சல்லிக் குவியலின் மேல் வீசி எறிந்தது. சருகு பொத்தென விழுந்தது.

ஒரு கருங்கல் சல்லி, சருகின் மேல் இரக்கப்பட்டு, ''ஆலிலைச் சருகே, உங்கள் நட்பில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், என்னைப்போல் உறுதியானவரிடம், நீ நட்பு கொண்டிருந்தால் உனக்கு எந்தக் கவலையும் இல்லை. நாம் எந்தவிதப் பயமும் இல்லாமல் சுற்றுப் பயணம் செல்லலாம்,'' என்று சொன்னது.

ஆலிலைச் சருகோ நண்பனுக் காகக் கண்ணீர் வடித்து அழுதது. மீண்டும் கருங்கல் சல்லி அதைத் தேற்றியது. ''நல்ல நண்பர்களும் கூட எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவ முடியாமல் போகலாம். உன் நோக்கம் நல்லதாகவே இருந்தது. ஆனால், மழை நீரில் களிமண் கட்டி கரைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீ கலங்காதே,'' என்றது.

ஆலிலைச் சருகு தன் துக்கத்தை மறந்தது. கருங்கல்லுடன் நட்பைத் தொடங்கியது.

உயிர் நண்பர்களை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் வரும்போது மிகவும் நொந்து போய் கலங்காதீங்க.... பிரிவு என்பது இயற்கை. மனதை தேற்றிக் கொண்டு புது நண்பர்களுடன் நட்பு பாராட்டுங்கள் குட்டீஸ்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us