தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குள்ளா... குள்ளா!

குள்ளா... குள்ளா!

குள்ளா... குள்ளா!


PUBLISHED ON : ஜூன் 14, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் கருங்குழி என்ற ஊரில் பொன்னன் என்ற இளைஞன் இருந்தான். வறுமையில் வாடிய அவன், பிழைப்பு தேடிப் பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டான். நீண்ட தொலைவு நடந்ததால் களைப்படைந்தான். ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கத் தொடங்கினான். யாரோ பேசும் குரல் கேட்டு அவனுக்கு விழிப்பு வந்தது. நாலா பக்கமும் பார்த்தான். யாரும் இல்லை.

தூங்க முயன்ற அவனுக்கு, மீண்டும் பேச்சுக் குரல் கேட்டது. கூர்ந்து கவனித்தான். அருகிலிருந்த பாறையிலிருந்து அந்தக் குரல் வருவது தெரிந்தது. பாறையின் அருகே சென்ற அவன், அதில் காதை வைத்துக் கொண்டான்.

''இளைஞனே! இந்தப் பாறைக்குள் இருநூறு ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டுள்ளேன். நீ சுவாதி நட்சத்திரத்தில் விடிகாலையில் பிறந்தவன். உன்னால்தான் என்னைக் காப்பாற்ற முடியும். என் மீது இரக்கம் காட்டு,'' என்று கெஞ்சியது அந்தக் குரல்.

''நீங்கள் யார்? உங்களை விடுவிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் பொன்னன்.

''நான் யார் என்பதை வெளியே வந்ததும் சொல்கிறேன். உன் அருகே துளசிச் செடிகள் உள்ளன. இதன் இலைகளைப் பறி. அந்த இலைகளின் சாற்றை இந்தப் பாறையின் மீது தடவு.

பிறகு உன் கட்டை விரலைக் கீறி ஒரு சொட்டு ரத்தத்தை இந்தப் பாறையில் விழ வை. என் சிறைக் கதவு திறந்து விடும். நான் விடுதலையாகி விடுவேன்,'' என்றது அந்தக் குரல்.

'அப்படிச் செய்வதா? வேண்டாமா?' என்று குழம்பினான் பொன்னன்.

'நல்லதோ கெட்டதோ எது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். துன்பத்தில் உள்ள ஒருவனைக் காப்பாற்றுவதே நம் கடமை' என்ற முடிவுக்கு வந்தான்.

துளசிச் சாற்றை அந்தப் பாறையின் மேல் தடவினான். தன் கட்டை விரலைக் கத்தியால் கீறினான். ஒரு சொட்டு ரத்தம் அந்தப் பாறையின் மேல் விழுந்தது.

உடனே அந்தப் பாறை இரண்டாகப் பிளந்தது. ஓரடி உயரமே உள்ள குள்ளன் ஒருவன் வெளியே வந்தான். மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்த அவன் பொன்னனின் கழுத்தில் தாவி ஏறினான். அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

குள்ளனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் பொன்னன்.

''நீங்கள் யார்? இந்தப் பாறைக்குள் எப்படிச் சிறைபட்டீர்கள்?'' என்று கேட்டான்.

''இளைஞனே! நான் ஒரு மந்திரவாதி. எனக்குத் தெரியாத மந்திரங்களே இல்லை. எல்லாருக்கும் நல்லதே செய்தேன். பேய், பிசாசுகளிடம் சிக்கிய பலரை விடுவித்தேன்.

''இதனால் தீய மந்திரவாதிகள் என் மீது பொறாமை கொண்டனர். அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. வட நாட்டிலிருந்து கொடிய மந்திரவாதி ஒருவனை அழைத்து வந்தனர். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

''நான் குடித்துவிட்டு மயக்கத்தில் இருந்தேன். அந்தக் கொடியவன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான். என் மந்திரப் புத்தகங்களை எல்லாம் எரித்து விட்டான். என்னையும் இந்தப் பாறைக்குள் சிறை வைத்துவிட்டான்.

''என் எதிரிகள் இப்போது மிகுந்த வலிமையுடன் இருக்கின்றனர். அவர்களை வெல்ல நீதான், எனக்கு உதவி செய்ய வேண்டும்.

''நான் விரும்பும் எந்த வடிவத்தையும் என்னால் பெற முடியும். ஈயாக மாறி உன் சட்டைப் பைக்குள் இருக்கிறேன். நான் தப்பித்து விட்டதை என் எதிரிகள் அறியக் கூடாது. எது சொல்வதாக இருந்தாலும் உன் காதருகே வந்து சொல்கிறேன். நாம் இப்போது இங்கே தூங்கலாம். பொழுது விடிந்ததும் புறப்படலாம்,'' என்றான் அந்தக் குள்ளன்.

பொன்னன் அங்கேயே படுத்துத் தூங்கினான். பொழுது விடிந்தது. மந்திரவாதிக் குள்ளனை எங்கும் காணவில்லை.

'நடந்தது எல்லாம் கனவோ' என்று நினைத்தான் பொன்னன்.

அப்போது அந்த வழியாக மூன்று பேர் வந்தனர்.

அவன் காதருகே, ''அவர்கள் மூவரையும் வரவேற்று இனிமையாகப் பேசு. அவர்களை உன்னுடன் உணவு உண்ண அழை. அப்படியே அவர்கள் எங்கே போகின்றனர். என்பதையும் விசாரி,'' என்ற குரல் கேட்டது.

'இரவு நடந்தது கனவு அல்ல. மந்திரவாதிக் குள்ளன் தான் பேசுகிறான்' என்பது அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் மூவரையும் வரவேற்றான் பொன்னன்.

''நண்பர்களே! நீங்கள் என்னுடன் உணவு உண்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்,'' என்று வற்புறுத்தினான் பொன்னன்.

அவர்கள் மூவரும் அவனுடன் அமர்ந்து உண்டனர்.

''நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டான் பொன்னன்.

''நாங்கள் தலை நகரத்திற்குச் செல்கிறோம். சில நாட்களுக்கு முன், இளவரசி ஆற்றில் நீராடச் சென்றாள். இடுப்பளவு ஆழமே தண்ணீர் இருந்தது. அதில், மூழ்கிய இளவரசி திரும்ப வரவே இல்லை. அவளுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. மகளை இழந்த சோகத்தில் அரசர் உள்ளார். இளவரசியை யார் கண்டுபிடித்து அழைத்து வந்தாலும் சரி. அவளை அவருக்கே திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.

''பலர் அவளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசி எங்களில் யாருக்காவது கிடைக்க மாட்டாளா? அந்த எண்ணத்தில்தான் நாங்கள் மூவரும் செல்கிறோம்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

''நீயும் அவர்களுடன் வருவதாகச் சொல். அந்த இளவரசி உனக்குத்தான். நான் உனக்கு உதவி செய்கிறேன்,'' என்ற குரல் அவனுக்குக் கேட்டது.

''வேலை தேடித்தான் நானும் புறப்பட்டேன். உங்களுடன் நானும் வருகிறேனே,'' என்றான் பொன்னன்.

அவர்கள் நால்வரும் அங்கிருந்து புறப்பட்டனர். கிழிந்து போன தொப்பி ஒன்று வழியில் கிடந்தது.

''அந்தத் தொப்பியை எடுத்துக் கொள். அது உனக்குப் பயன்படும்,'' என்ற குரல் பொன்னனுக்குக் கேட்டது.

அந்தத் தொப்பியை எடுத்தான். அதைத் தன் தலையில் அணிந்து கொண்டான் பொன்னன்.

'எதற்கும் பயன்படாத கிழிந்த தொப்பி இது. இதை எதற்காக எடுத்துத் தலையில் அணிந்து கொண்டான்' என்று அவர்கள் மூவரும் குழம்பினர்.

நண்பகல் நேரம் வந்தது. களைப்படைந்த அவர்கள் நால்வரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.

''தொப்பியைப் பார்த்து நால்வருக்கும் உணவு பரிமாறு என்று சொல்,'' என்ற குரல் பொன்னனுக்குக் கேட்டது.

'குள்ளன் சொன்னது போல நடப்போம்' என்று நினைத்தான் பொன்னன்.

''தொப்பியே! எங்களுக்கு உணவு பரிமாறு,'' என்றான்.

'இதைக் கேட்ட மூவரும் இவனுக்கு என்ன பைத்தியமா? இப்படிப் பேசுகிறானே' என்று அவனைத் திகைப்புடன் பார்த்தனர்.

அந்த மந்திரத் தொப்பியிலிருந்து நிறைய பாத்திரங்கள் வெளியே வந்தன. பல வகையான உணவுப் பொருள்கள் அவற்றில் இருந்தன.

அவர்கள் நால்வரும் உணவைச் சுவைத்து உண்டனர். சாப்பிட்டு முடித்ததும், பாத்திரங்கள் மறைந்தன.

'மந்திரத் தொப்பியைத் தாங்கள் எடுக்கவில்லையே' என்று மூவரும் வருந்தினர்.

அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் தலை நகரத்தை அடைந்தனர்.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us