sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

குள்ளர் உலகம்!

/

குள்ளர் உலகம்!

குள்ளர் உலகம்!

குள்ளர் உலகம்!


PUBLISHED ON : அக் 03, 2020

Google News

PUBLISHED ON : அக் 03, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னருக்கு, மூன்று மகள்கள். அரண்மனை தோட்டத்தில் ஆடி, பாடி மகிழ்ந்தவர்களிடம், 'தோட்டத்தில், வடக்கு கோடியில் நிற்கும் மாமர பழங்களை மட்டும் சாப்பிட வேண்டாம்...' என எச்சரித்தார் மன்னர்.

மாம்பழ பருவ காலம் வந்தது; அந்த மாமரம் காய்த்து குலுங்கியது. இளவரசியருக்கு, நாக்கில் நீர் சுரந்தது. எச்சரிக்கையை மீறி, பறித்து உண்டனர். அப்போது, பூமி பிளக்க, அதற்குள் விழுந்தனர் இளவரசியர்.

மகள்களை காணாது தவித்தார் மன்னர். நாடெங்கும் வீரர்களை அனுப்பி தேடினார். பலன் இல்லை.

'மகள்களை கண்டுபிடிப்பவரை நாட்டின் மன்னராக முடிசூட்டுவேன்...' என, பறை சாற்றினார்.

இதை ஏற்றனர் மூன்று சகோதரர்கள். இளவரசியரை தேடி புறப்பட்டனர். நீண்ட பயணத்தில் பெரிய கோட்டையை அடைந்தனர். அங்கிருந்த அரண்மனை, ஆடம்பரமாக காணப்பட்டது. பெரிய அறை நடுவே, சுவையான உணவுப் பண்டங்கள் அணிவகுத்திருந்தன. அவை வாசனை வீசின.

மனித சஞ்சாரமே இல்லை. உணவை வயிறார உண்டனர் சகோதரர்கள். பயணக் களைப்பு நீங்கியது.

ஒவ்வொரு நாளும், மூவரில் ஒருவர், அரண்மனையில் தங்க வேண்டியது; மற்ற இருவரும், இளவரசியரை தேட வேண்டியது என முடிவானது.

அன்று -

மூத்தவன், கோட்டையில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். நண்பகலில் அங்கு வந்தான் வினோத குள்ளன். பக்குவப்படுத்திய இறைச்சியை கத்தியால் துண்டு செய்து கொடுத்தான். ஒரு துண்டு தவறி தரையில் விழுந்தது. அதை எடுத்து தரும்படி கேட்டான் குள்ளன்.

'நீ தானே கவனக்குறைவாக போட்டாய். நீயே எடுத்துக் கொள்...' என அலட்சியமாக கூறினான் மூத்த சகோதரன். பணிவுடன் எடுக்க குனிந்த குள்ளனை எட்டி உதைத்து, 'வேலைக்காரன் யார், எஜமான் யார் என்பதை, இந்த உதை உனக்கு உணர்த்தும்...' என்று கொக்கரித்தான்.

பொறுமையுடன் வெளியேறினான் குள்ளன்.

அடுத்த நாள் -

இரண்டாவது சகோதரன் ஓய்வெடுத்தான். அன்றும் இறைச்சியுடன் வந்து உபசரித்த குள்ளனை, அகம்பாவத்துடன் உதாசீனப்படுத்தி உதைத்தான்.

மூன்றாம் நாள், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் இளையவன். இறைச்சியுடன் வந்த குள்ளனை வரவேற்று, 'உண்ண உணவும், தங்க இடமும் கொடுத்து, பணிவிடை செய்யும் உனக்கு, என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்...' என்றான்.

மகிழ்ந்த குள்ளன், தரமான உணவை அளித்து, 'பாதாள உலகம் இது... நீ தேடி வந்த இளவரசியர் இருக்கும் இடம் எனக்கு தெரியும்...' என்றான்.

'எங்கே இருக்கின்றனர்...'

'கோட்டை அருகே மலை உச்சியில் உள்ள கிணற்றுக்குள் தான் உள்ளனர்...'

'அங்கு போக வழி சொல்...'

'கிணற்றின் அடியில் மூன்று அறைகள் உள்ளன; இளவரசியர் அங்குதான் சிறை வைக்கப்பட்டுள்ளனர்; கொடிய மிருகம் காவல் புரிகிறது. மறக்காமல், உடைவாளுடன் போ. அதன் தலையை வெட்டினால் வெற்றியடைவாய்...'

'சரி... என் சகோதரர்களுடன் போகிறேன்...'

'நீ மட்டும் தனியாக செல். உன் சகோதரர்கள் ஏமாற்றி விடுவர். கவனமாக செயல்படு...'

அறிவுரைத்து மறைந்தான் குள்ளன்.

மாலையில் திரும்பிய சகோதரர்கள், 'பகல் பொழுதை எப்படி கழித்தாய்...' என்று தம்பியைக் கேட்டனர்.

நடந்ததை விபரமாக கூறினான். மூவரும் மலை உச்சிக்கு சென்றனர்.

கிணற்றில் இறங்குவது யார் என, சீட்டுக் குலுக்கிப் போட்டனர். முதலில், மூத்தவன், அடுத்து, இரண்டாமவன், கடைசியாக இளையவன் என, முறை வந்தது.

இறங்க வசதியாக ஒரு கூடையும், உறுதிமிக்க கயிறும் எடுத்து போயிருந்தனர். கூடைக்குள் ஒருவர் அமர, மற்ற இருவரும் கயிற்றை பலமாக பிடித்து கிணற்றில் இறக்கினர்.

இறங்கியவன், கையில் ஒரு எச்சரிக்கை மணியை வைத்திருந்தான்; அபாயம் ஏற்படும் போது, மணியை ஒலித்தால், கூடையை கட்டிய கயிற்றை மேலே இழுத்து காப்பற்றுவர் சகோதரர்கள். இப்படி உடன்பாடு செய்திருந்தனர்.

மூத்தவன், கிணற்றுக்குள் இறங்கியதும், ராட்சத மிருகத்தைக் கண்டான். உடனே, எச்சரிக்கை மணியை பலமாக அடித்தான். மூச்சு வாங்க, வியர்க்க விறுவிறுக்க வெளியேறியவன் பயத்தால் நடுங்கினான்.

இரண்டாம் சகோதரனும் அலறியபடியே வெளியே வந்தான்.

கடைசியாக, இளையவன் முறை வந்தது. கிணற்றடியில் கூடை இறங்கியதும் குதித்தான். அங்கிருந்த அறைகளை நோட்டமிட்டபடி முன்னேறினான்.

ஒன்றில் குறட்டை ஒலி கேட்டது. ஓசைப்படாமல் திறந்தான். துாங்கி கொண்டிருந்தது கொடிய மிருகம்; கத்தியால் ஒரே வீச்சு... அதன் தலையை சீவி, இளவரசியரை விடுவித்து கூடையில் ஏற்றினான். எச்சரிக்கை மணியை ஒலித்தான். வரிசையாக இளவரசியரை கூடையில் ஏற்றி அனுப்பினான்.

கடைசியாக, இளையவன் போக வேண்டும்; கிணற்றடிக்கு வந்தது கூடை. குள்ளனின் எச்சரிக்கை நினைவுக்கு வர, பெரிய கல்லை கூடைக்குள் வைத்து, இழுக்க சமிக்ஞை செய்தான். நகர்ந்த கூடை பாதிவழியில் வந்தபோது, கயிற்றை துண்டித்தனர் சகோதரர்கள். விழுந்து உடைந்து நொறுங்கியது கூடை.

இளையவன் எதிர்பார்த்தது போல் நடந்தது.

தம்பியை ஒழித்து விட்டதாக மகிழ்ந்து, இளவரசியரை மிரட்டி அழைத்து சென்றனர் மூத்த சகோதரர்கள்.

கிணற்றடியில் நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான் இளையவன். சுவரின் மாடத்தில், புல்லாங்குழல் இருந்தது. அதை இனிமையாக இசைத்தான். அடுத்த வினாடி, 'மள... மள...' என, குள்ளர்கள் அவன் முன் குதித்தனர். உதவ முன் வந்தனர்.

அவர்கள் உதவியால் மேலே வந்தவன், நன்றி தெரிவித்து அரண்மனைக்கு நடந்தான். அங்கு, தன் சகோதரர்களுக்கு முடிசூட்டு விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.

அரண்மனைக்குள் புகுந்தான் இளையவன். எதிர்பாராமல் அவனைக் கண்டதும் மகிழ்ந்தனர் இளவரசியர். மன்னருக்கு உண்மை தெரிந்தது.

மூத்த சகோதரர்களை கைது செய்து, பாதாள சிறையில் தள்ளினார். இளைய சகோதரனுக்கு முடி சூட்டப்பட்டது.

செல்லங்களே... துணிச்சலுடன் சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

வாண்டுமாமா






      Dinamalar
      Follow us