PUBLISHED ON : நவ 25, 2023

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, கருமலை ஸ்ரீவரதராஜா துவக்கப்பள்ளியில், 1951ல், 1ம் வகுப்பு படித்தேன். ஆசிரியராக இருந்த அப்துல்லா பள்ளி வளாகத்தில் நின்ற புளியமர நிழலில் அமர வைத்து பாடம் நடத்துவார்.
இயற்கையை ரசித்தபடி மகிழ்ச்சியாக கற்றோம். தரையில் மணலை பரப்பி, 'அ... ஆ...' என தமிழ் எழுத்துக்களை அச்சு பிசகாமல், தெளிவாக எழுதி காட்டுவார். விரலை பிடித்து அதன் மீது பதிய வைத்தபடி மென்மையாக கற்பிப்பார். பின், புளியம் விதையை பற்றி எழுதும் பயிற்சியையும் தந்தார்.
அதில் கவனம் செலுத்தி, ஆரம்ப கல்வியை சிறப்பாக முடித்தேன். பின், துவரங்குறிச்சி அரசு பள்ளியில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றேன். தமிழக அரசு பணிக்கு தகுதி தேர்வு எழுதி வேலையில் சேர்ந்தேன்.
என் வயது, 77; இந்து சமய அறநிலையத் துறையில், கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றபோது, அந்த பள்ளி வளாகத்தில் உலாவி, நினைவுகளை அசைபோட்டேன். விரல் பிடித்து கற்பித்த அந்த ஆசிரியரின் நினைவை போற்றுகிறேன்.
- என்.திருமலை, சென்னை.
தொடர்புக்கு: 98410 46814
