PUBLISHED ON : அக் 07, 2016

சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை ஏமாற்றி, மன்னர் அவனீந்திராவின் மகன் என்று மகேந்திரவர்மரை நம்ப வைத்தான் மொட்டைத்தலையன். ஆனால், மன்னரின் மகள்கள் மூவருக்கும் மொட்டைத் தலையன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இனி-
''எனக்கும் கூட அந்த அழகிய அடிமை வாலிபன், நம் சித்தப்பாவின் மகனாக இருக்கக்கூடாதா, என்று ஆசையாக இருக்கிறது. என்ன செய்வது...'' என்று வேதனைப்பட்டாள் திலகவதி.
''அவரை போட்டால் துவரை விளையுமா என்ன? ராஜ பரம்பரையில் பிறந்தவனாக தெரியவில்லை இந்த மொட்டைத்தலையன். அப்பா அவனை தம் சகோதரர் மகனாக ஏற்றுக்கொள்ளட்டும்; நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம். இப்படி ஒரு மொட்டைத்தலை சகோதரன் நமக்கு வேண்டவே வேண்டாம்!'' என்றாள் திலோத்தமா.
இப்படி ராஜகுமாரிகள் மொட்டைத் தலையனிடம் வெறுப்பை வளர்த்தாலும், தந்தையின் விருப்பத்துக்கு மாறாக நடந்தால், அவர் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று தங்கள் வெறுப்பைக் காட்டாமலிருந்தனர்.
போலி இளவரசன் மொட்டை தலையனுக்கு, தனி அரண்மனை ஒதுக்கப் பட்டது. சகல வசதிகளுடன் உபசாரமும், மரியாதைகளும் தரப்பட்டன.
நிஜமான இளவரசன் இளங்குமரன், குதிரை லாயத்தில் புல்லின்மீது, புண்ணான மனதுடன் கண்ணீர் வடித்தபடி இருந்தான்.
சகோதரன் மகனை, மரகதபுரியின் வருங்கால சக்கரவர்த்தியை கவுரவிப்பதற்காக, பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் மகேந்திரவர்மர். விருந்திலே பல சுவை மிக்க உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மொட்டைத்தலையன், தன் வாழ்நாளில் அப்படிப்பட்ட விருந்தைக் கற்பனை செய்து கூட பார்க்காதவன். வயிறு புடைக்கத் தின்றான்.
கடைசியில், சக்கரவர்த்திக்கும், அரச குமாரிகளுக்கும் விருந்தாளியான மொட்டைத் தலையனுக்கும் மட்டுமே ஒரு பானம் வழங்கப்பட்டது; வேறு யாருக்குமில்லை. ரொம்பவும் அபூர்வமான கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட பானம் அது. அந்தக் கிழங்கு கிடைக்கவே கிடைக்காது. ஆகவே, சக்கரவர்த்தியின் குடும்பத்தார் மட்டுமே அந்த அபூர்வ பானத்தை அருந்துவர்.
''இளவரசே, இப்போது சுவைத்தீர்களே ஒரு பானம், எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார் மகேந்திரவர்மர்.
அந்த பானத்தின் இனிய சுவையிலே, உயரிய மணத்திலே கிறங்கிப் போயிருந்த மொட்டைத் தலையன், அந்த சுகானுபவத்திலிருந்து விடுபட முடியாதவனாக கூறினான்.
''ஆஹா, அற்புதம்! அபாரம்! இப்படியும் ஒரு சுவை உண்டா... மணம் உண்டா... தேவபானம் என்பார்களே அது இதுதானா? பெரியப்பா, இப்பானம் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் பெயர் என்ன?'' என்று கேட்டான் மொட்டைத்தலையன்.
''இதற்குப் பெயரிடும் தகுதி யாருக்குமே கிடையாது. இதை அனுபவிக்கும் பாக்கியமும் எனக்குத் தொடர்ந்து கிடைக்காது. அந்த அபூர்வ கிழங்கு, கரடிக்காடு என்று ஒரு கானகமிருக்கிறது, ஏதோ கண் காணாத தீவில். அந்தத் தீவும், கானகமும் எங்கிருக்கிறதென்று யாருக்குமே தெரியவில்லை. அந்தக் கரடிக் காட்டிலே தேனைப் பாய்ச்சி பயிராக்கப்படுகிறது.
''அதை அப்படிப் பயிர் செய்வது யார் தெரியுமா? அக்காட்டில் வாழும் ஒரு பயங்கரக் கரடி. அதன் பாதுகாப்பிலுள்ள அக்கிழங்குகளை யாராலும் எடுத்துவர முடியாது. முதலில் அந்தத் தீவு எங்கிருக்கிறது என்று தெரிந்தாலல்லவா தேன் கிழங்குக்கு ஆசைப்பட முடியுமா?''
''அது சரி, உங்களுக்கு இது எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்டான் மொட்டைத் தலையன்.
''யாரோ ஒரு முனிவர், இந்தத் தேன் கிழங்கை எனக்களித்து இந்த விவரத்தைக் கூறினார். எத்தனை நாளானாலும் கெடாத அபூர்வக் கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனாலும், இது குறைந்து வருகிறது. தேன் கிழங்கு இனி கிடைக்கப் போவதில்லை. இந்தப் பானம் இன்னும் சில நாளில் நமக்கும் கனவாகப் போக வேண்டியது தான்,'' என்றார் சக்கரவர்த்தி மகேந்திரவர்மர்.
''கவலைப்படாதீர்கள்! அந்தக் கரடிக்காட்டு தீவு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, தேன் கிழங்கை வண்டி வண்டியாகக் கொண்டு வந்து குவிக்கிறேன்,'' என்று ஜம்பம் பேசினான் மொட்டைத்தலையன்.
தம்பி மகனின் வீராப்புப் பேச்சில் வியந்து போனார் மரகதபுரியின் மகாராஜா.
''மகனே, உன் தகப்பனார் என்னை நம்பி உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார். நீ இது போன்ற அபாயமான காரியங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. தேன் கிழங்கு பானம் இல்லாவிட்டால் போகிறது. வேறு எவ்வளவோ அபூர்வமான பானங்கள் உள்ளன சுவைத்து மகிழ!'' என்றார்.
''பெரியப்பா, என்னைப் பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். எத்தனை உயர்ந்த பானமிருந்தாலும், இந்தத் தேன்கிழங்குப் பானத்துக்கு ஈடாகாது என்பதை நீங்களே கூறி இருக்கிறீர்கள். அது கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஏக்கம் உங்களிடமுள்ளது என்பதையும் நான் அறிவேன்.
''உங்கள் குறையைப் போக்க வேண்டியது என் கடமையல்லவா? தவிர, இதுபோன்ற சின்னக் காரியத்தைச் செய்ய நான் போவேனா? பின், உங்களுடைய மதிப்பு என்னாகும். நான் இடும் கட்டளையை நிறைவேற்ற என் அடிமை இருக்கிறான். 'கரடிக் காட்டைத் தேடிப்போய், தேன் கிழங்கைக் கொண்டு வா' என்று ஆணையிட்டால், செய்து முடிப்பான்!'' என்றான் கொடியவனான மொட்டைத் தலையன்.
''குமரா! இது இன்னும் மோசம். உன் பணியாளனுக்கு இந்தப் பக்கத்திலுள்ள எந்த இடமும் தெரியாது. தவிர, அவன் சாதுவாக, அனுபவமில்லாத இளைஞனாக தோன்றுகிறான். அந்த நல்லவனை நீ இழப்பதை நான் விரும்பவில்லை...'' என்றார்.
''நீங்கள் நினைக்கிறபடி அந்த அடிமைப் பயல் அப்படியொன்றும் அபூர்வமானவனல்ல. அவன் மதிப்பு எனக்குத் தெரியும். அவன் திறமைசாலி; தேன் கிழங்கை குவிக்கக் செய்கிறேன் பாருங்கள்...!'' என்று கூறி பணியாளர்களை அழைத்து, அடிமையை அழைத்து வரும்படி கூறினான்.
இளவரசன் இளங்குமரன், போலி இளவரசன் முன் வந்து தலை குனிந்து நின்றான்.
''நீ இப்போதே புறப்பட வேண்டும் கரடிக் காட்டுக்கு. அங்கு கரடி அரசனின் கட்டுக்காவலில் உள்ள தேன் கிழங்குகளை நிறையக் கொண்டு வர வேண்டும். புரிந்ததா? தப்பியோடிவிடலாம் என்று சூழ்ச்சி ஏதாவது செய்தால் உன்னைத் தொலைந்து விடுவேன் ஜாக்கிரதை!'' என்றும் எச்சரித்தான் வஞ்சகன்.
''கரடிக்காடு எங்கிருக்கிறது என்று...'' தயங்கினான் இளங்குமரன்.
''எங்கிருக்கிறதென்று நீதான் கண்டுபிடித்துப் போக வேண்டும். உன்னைக் குதிரையில் ஏற்றி அங்கு கொண்டு விடுவேன் என்று எதிர்பார்த்தாயா? அடிமுட்டாளே... ஓடு! உன் தொத்தல் குதிரையில் ஏறிப் போய் விரைவில் தேன் கிழங்குகளோடு திரும்பி வா...'' என்று விரட்டினான் கொடியவன்.
விதியை நொந்தபடி குதிரை லாயத்துக்கு வந்தான். அவனது மாயக் குதிரை மின்னல் வீரன் எலும்பும் தோலுமாக, ஒரு மூலையில் நின்றிருந்தது. அதன் காலடியில் போய்ச் சோர்ந்து உட்கார்ந்தான்.
''நண்பனே, என் நிலையைப் பார்த்தாயா? தந்தையின் புத்திமதிப்படி நடந்திருந்தால் எனக்கு இக்கதி வந்திருக்குமா? முகத்திலும், தலையிலும் முடியில்லாத மனிதர்களை நம்பாதே என்று குறிப்பிட்டுக் கூறினாரே... நான் அதை அலட்சியப்படுத்தி, கொடியவனின் சூழ்ச்சியில் விழுந்துவிட்டேன்.
''இப்போது வேலைக்காரனுக்கு வேலைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்பா பேச்சை கேட்காததற்குக் கிடைத்த தண்டனை தான் இது,'' என்று கண்ணீர் வடித்தான் இளவரசன் இளங்குமரன்.
''இளவரசே! துன்பம் வரும் வேளைகளில் தீரமுடன் அதை எதிர்நோக்கி வெற்றி பெறுபவனே வீரன். நீங்கள் வீரனாக விளங்க வேண்டும்; மனம் தளரக்கூடாது; நம்பிக்கை இழக்கக்கூடாது; என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தப் போதே உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
''அந்த வேஷக்காரனை விரட்டியடிப்பது ஒரு பெரிய விஷயமல்ல. ஒரு வினாடியில் அந்த மொட்டைத்தலையனின் குட்டை உடைக்க என்னால் முடியும். ஆனால், அப்படிச் செய்ய முடியாதபடி எனக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. யார் தடை விதித்தது, ஏன் என்று கேட்காதீர்கள்.
''ஆனால், உங்கள் கஷ்டங்களுக்குக் கைகொடுத்து உதவ வேண்டும் என்றும், கட்டளை இடப்பட்டிருக்கிறேன். ஆகவே, கவலைப்படாதீர்கள். எத்தகைய துன்பமானாலும் துடைத்து எறிவோம். என் மீது ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். இந்தச் சோதனையிலிருந்து விடுபட உங்களை எங்கு அழைத்துப் போக வேண்டும் என்பதை நான் அறிவேன்!'' என்றது மின்னல் வீரன்.
அருமைத் தோழன் மின்னல் வீரனின் ஆறுதலான வார்த்தைகளால், தைரியமடைந்த இளவரசன், அதன் மீது ஏறி உட்கார்ந்தான்.
- தொடரும்...
