PUBLISHED ON : நவ 30, 2019

பள்ளி தேர்வு அறை- -
பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி நாள். வினாத்தாளைக் கொடுத்து முடித்தார் கண்காணிப்பாளர். சில மாணவர் முகத்தில் மலர்ச்சியும், பலர் முகத்தில் ஏமாற்றமும் தெரிந்தது.
அருண் முகத்தில் அளவிலா மகிழ்ச்சி; இருக்காதா பின்னே... வினாத்தாளில், எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும். ஆர்வத்துடன், உயிர் நண்பன் சேகரை நோக்கி, புன்னகை தெரிவித்தான்.
அருண், தலைசிறந்த மாணவன்; படிப்பில் முதலிடம் பெற்று வந்தான்; மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறுவான் என நம்பும் அளவு திறமையானவன்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, சக மாணவர்களுக்கும் அவனிடம் மிகுந்த அன்பும், நட்பும் கொண்டிருந்தனர்.
சேகர், அறிவு கூர்மையானவன் என்றாலும், நோயாளி; கவனமாக படித்தான். இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர்.
மாணவர்கள், மும்முரமாக விடை எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென்று, சேகர் பரிதாபமாக அலறினான். தேர்வுஅறையே அதிர்ச்சியுடன் நோக்கியது. கண்காணிப்பாளர் பதட்டத்துடன் ஓடி வந்தார்.
பெரும் குரலில் அழுத சேகர், 'வலது கையை என்னால அசைக்க முடியல; விரல்களை மடக்கி எழுத முடியாம, பெயில் ஆகிடுவேனோ...' என்று கதறினான்.
சமாதானப்படுத்திய கண்காணிப்பாளர், கையை தடவி சரிப்படுத்த முயன்றார்; பலனில்லை.
நண்பனின் பரிதாப நிலையை கண்ட அருண், ஒரு முடிவுடன், 'சேகர் சொல்லும் விடையை எழுதுவதற்கு தயவு செய்து அனுமதிப்பீர்களா... ஒருவருக்கு எழுத இயலாத நிலையில் மற்றொருவர் எழுத்தராக உதவி செய்ய அனுமதிக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்களே...' என்று, கண்காணிப்பாளரிடம் கேட்டான்.
'அது சரி அருண், நீ தேர்வு எழுத வேண்டாமா...'
'நான் எழுதி முடித்துவிட்டேன்...' என்று விடைத்தாளை நீட்டினான்.
'இவ்வளவு சீக்கிரம் எப்படி முழு வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்...'
'எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதவில்லை என்பது உண்மை தான்; தேர்ச்சிக்கு வேண்டிய மதிப்பெண்களை விட, மிக அதிகமாகவே விடையளித்துள்ளேன்...'
'முட்டாள் தானமாகப் பேசாதே அருண்... மாநில அளவில் முதல் மதிப்பெண் என்ற உன் எதிர்பார்ப்பெல்லாம் என்னாவது...'
கண்காணிப்பாளரின் கைகளை பிடித்தபடி, 'நான் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைவதை விட, இருவருமே தேர்ச்சி அடைவது மேல் இல்லையா...' என்றான் அருண்.
'உன் பெற்றோருக்கு இது பெரிய ஏமாற்றத்தை தருமே... பள்ளிக்கும், பெரிய இழப்பு; சரி... உன் விருப்பப்படி ஏற்பாடு செய்கிறேன்...' என்ற கண்காணிப்பாளர், தாமதிக்காமல் தலைமை கண்காணிப்பாளரின் அனுமதியைப் பெற்றார்.
அடுத்த சில நிமிடங்களில், பிரத்யேக கண்காணிப்பாளர் முன், கண்ணீர் மல்க சேகர் கூறிய விடைகளை, அருண் எழுதினான். தேர்வு நேரம் முடிந்தது; அன்புடன் விடை பெற்றனர்.
பெற்றோரிடம், நடந்ததை கூற துணியவில்லை அருண். சற்று நேரத்தில், அங்கு வந்தான் சேகர்; கண்ணீர் மல்க, நடந்த விவரத்தை, அருண் குடும்பத்தாரிடம் கூறி நன்றியை சமர்ப்பித்தான்.
பெரும் அமைதி நிலவியது. திடீரென, அருணை இறுக அணைத்த அவன் அப்பா, முத்தம் கொடுத்து பாராட்டினார். உணர்ச்சி கொந்தளிப்பில், 'நீ எங்களுக்கு கிடைத்த வரம்...' என்று நெகிழ்ந்தார்.
மறுநாள் -
அருணின் தியாகச் செயலை விளக்கி, கடைசி தேர்வை மீண்டும் எழுத, ஒரு வாய்ப்பு வழங்கும்படி, தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதினார் தலைமை கண்காணிப்பாளர். அந்த கடிதத்தை ஏற்று நடத்திய தேர்வில், முதன்மை மதிப்பெண் பெற்றான் அருண். அனைவரும் பாராட்டினர்.
அன்புள்ளங்களே... நட்பின் மகத்துவத்தை இந்த கதையில் படித்திருப்பீர்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்து, நம்பிக்கையுடன் வாழ பழகுங்கள்.
ரங்கராஜன்
