PUBLISHED ON : டிச 28, 2019

பண்புகளில் தலைசிறந்தது அன்பு பாராட்டுதல். ஒருவர் செய்த நன்மையையோ, அவரது நற்குணத்தையோ புகழ்ந்து பேசுவது தான் அன்பு பாராட்டு.
சமூகத்தில் இது போன்ற நற்பண்பு குறைந்து கொண்டே வருகிறது. ஒருவர் செய்த தீமைகளையோ, கெட்ட பழக்கங்களையோ கண்டுப்பிடித்து குறை சொல்லவே பலரும் விரும்புகின்றனர். நற்குணத்தின் சிறப்பு பற்றி பேசுவதேயில்லை.
குறைகள் கண்ணுக்கு தெரியும் அளவு, நிறைகள் புலப்படுவதில்லை. இன்று உறவினர், நண்பர்களுக்குள் வரும் சண்டைக்கு காரணமே, அன்பு பாராட்டுதலை மறந்தது தான்.
பெற்றோருக்குள் வரும் சண்டையை எடுத்துக்கொள்ளுங்கள். கணவர் பல நன்மைகளை, குடும்பத்துக்கு செய்திருப்பார். கேட்டதை எல்லாம் வாங்கி தந்திருப்பார். அதை பற்றி ஒருநாளும் பெருமையாக பேச மாட்டார் மனைவி.
'என்னதான் இருந்தாலும், என் அப்பா வீடு போல வருமா...' என்ற வாசகத்தையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பர். என்றோ ஒருநாள் கணவர் செய்த தவறை, வாழ்க்கை முழுக்க சுட்டிக்காட்டிக் கொண்டேயிருப்பர்.
இதே தவறை, கணவரும் செய்வார். வேண்டிய பணிவிடைகளை பார்த்து பார்த்து செய்தாலும், நிறைவு அடைந்து மனைவியை பாராட்டுவதில்லை. குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பர்.
ஆணோ, பெண்ணோ, சிறு சிறு பாராட்டுக்களையே விரும்புகின்றனர். அதுவும் எதிர்பாலினத்திடம் இருந்தே எதிர்பார்ப்பர். ஆண், பெண்ணை பாராட்டுவதிலும், பெண், ஆணை பாராட்டுவதிலும் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை.
ஆனால் இன்றைய நிலை வேறாக உள்ளது. 'பெண்னை நம்பாதே' என்று ஆணும், 'ஆணை நம்பாதே' என்று பெண்ணும், எதிர் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.
பின் எப்படி ஆண், பெண்ணிடையே சமத்துவ புரிதல் உண்டாகும். வெறுப்புணர்வு, வன்மம் போன்ற குப்பையே மனதில் குவியும். இது வன்மமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களாக, வன்முறையாக வெளிப்படும்.
ஒருவர் தீமையே செய்பவராக கூட இருக்கலாம். ஆனால், என்றோ அவரை அறியாமலேயே ஒரு நற்செயலை செய்திருப்பார். போற்றும் படியான நற்குணம் ஒன்று நிச்சயம் இருக்கும்.
அதை கண்டுபிடித்து பாராட்டுவதன் மூலம், நன்மைகள் விளையும். அதுவரை, தீமை மட்டுமே செய்துவந்தவரின் மனம், நன்மையின் பக்கம் திரும்பும்.
நன்மை செய்ய ஒருவரை துாண்டுவதே நம் செயல்கள் தான். அன்புபாராட்டல் என்ற பண்பின் மூலம், முட்களை பூக்களாக மாற்றலாம்; கல்லையும் கரைக்கலாம்.
இந்த நற்பண்பை கடைபிடித்தால், நீதிமன்றத்திற்கு வேலை இருக்காது; காவல் நிலையங்கள் வெறிச்சோடிவிடும். ரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை தாயார் செய்வதை நிறுத்திவிடலாம்.
செல்லங்களே... நோய்நொடி இன்றி, மகிழ்ச்சியாக வாழ அன்பை பாராட்டி பழகுங்கள்.
- கோகுல மணிகண்டன்
