PUBLISHED ON : டிச 28, 2019

ஆலங்கட்டி மழை அறிவோம். மீன் மழையை நம்ப முடிகிறதா... நம்பித்தான் ஆக வேண்டும். சில இடங்களில் மழை பெய்யும் போது, மீன்களும் சேர்ந்து விழுந்துள்ளன. பல நாடுகளில், இந்த மீன் மழை பெய்துள்ளது.
முதலாம் நுாற்றாண்டில் வாழ்ந்த இயற்கையியல் அறிஞர் பிளினி, புயல் மழை பற்றியும், அதில் விழுந்த மீன் மற்றும் தவளைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மழையின் போது, சாதாக் கெண்டை, மிர்கால் கெண்டை, கெழுத்தி, சாளை, பைக், பெர்ச், ஸ்டிக்கிள், ஜெல்லி என பல வகையான மீன்கள் விழுந்துள்ளன.
நன்னீர் பகுதிகளில் நன்னீர் மீன் மழை பெய்துள்ளது; கடல் மீன் மழையும் பெய்துள்ளது.
நீர்வள வாய்ப்புகளே இல்லாத பகுதிகளிலும், நன்னீர் அல்லது கடல் மீன் மழை பெய்துள்ளது. எந்த வகை மீன்கள் எங்கே, எப்போது பெய்யும் என்பதை காற்றே தீர்மானிக்கிறது.
மீன் மழையில் இறந்தும், அழுகிய நிலையிலும் மீன்கள் விழுகின்றன; சில தலையில்லாமல் விழுகின்றன. சில உயிரோடும் விழுகின்றன.
சுழல் காற்று வீசும் போது, தரையில் கிடக்கும், இலை, தழைகளையும், சருகுகளையும் மேலே இழுத்துச் செல்வதை பார்த்திருப்பீர்கள். அதேபோல், குளத்தில் சுழல் காற்று வீசும் போது, அங்குள்ள மீன்களையும் சேர்த்து, அள்ளிச்சென்று விடும்.
மேகம் குளிர்ந்து மழை பெய்யும் போது, அந்த மீன்கள், மழைநீரோடு விழுகின்றன.
