தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மென்மையான இளவரசிகள்!

மென்மையான இளவரசிகள்!

மென்மையான இளவரசிகள்!


PUBLISHED ON : பிப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் தில்லைபுரம் என்ற நாடு மிகுந்த செல்வம் மிகுந்த நாடாக விளங்கியது. அந்நாட்டை அழகுவேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.

அவருக்கு தாரிகா, தன்ஷிகா, தனுஜா என்று மூன்று மனைவியர் இருந்தனர். அவர்கள் மூவருமே அழகும், நற்பண்புகளும் நிறைந்தவர்களாக விளங்கினர்.

அவர்கள் மூவர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார் அழகுவேந்தன். அவர்களைத் தனித்தனி மாளிகையில் தங்க வைத்தார். எந்தக் குறையும் ஏற்படாமல், கவனித்துக் கொண்டார்.

இனிய இளவேனிற் காலம் வந்தது. எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. குயில்கள் இன்னிசை எழுப்பின.

தாரிகாவின் மாளிகைக்குச் சென்றார் அழகுவேந்தன். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

''தாரிகா! இந்த மாலைப் பொழுது எவ்வளவு இனிமையாக உள்ளது. நாம் இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே பூஞ்சோலையில் உலாவி வரலாம் வா,'' என்று அழைத்து சென்றார்.

இருவரும் பூஞ்சோலையில் மெல்ல நடந்து சென்றனர்.

தாரிகாவிடம் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அழகுவேந்தனிடம் ஏற்பட்டது. வெடுக்கென்று தாரிகாவின் கையைப் பிடித்து இழுத்தார். அந்த அதிர்ச்சியில் அவள் உடல் குலுங்கியது. அவள் தலையில் சூடியிருந்த சாமந்தி மலர் நழுவி அவள் காலின் மேல் விழுந்தது.

மென்மையான அவளால் மலர் விழுந்ததை தாங்க முடியவில்லை.

'ஆ'வென்று அலறி அப்படியே மயங்கி விழுந்தாள்.

எதிர்பாராதது நடந்ததைக் கண்ட அரசர் திகைத்தார்.

உடனே, அரண்மனைக்கு வைத்தியர் வந்தார்.

மலர் விழுந்ததால் அரசியின் காலில் ஏற்பட்டிருந்த காயத்தைப் பார்த்தார். அதில் மருந்து தடவி காலிற்கு கட்டுப் போட்டார் வைத்தியர்.

''அரசே! அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை. சிறிது நேரத்தில் அரசியின் மயக்கம் தெளிந்து விடும்,'' என்றார்.

அரசியின் மயக்கம் தெளிவதற்காகப் பணிப் பெண்கள் விசிறிக் கொண்டிருந்தனர்.

அவளின் மயக்கம் தெளியவில்லை. அவள் தூங்கி எழட்டும் என்று எண்ணிய அரசர், இரண்டாவது மனைவி தன்ஷிகாவின் மாளிகைக்குச் சென்றார்.

அங்கே அரசரும், தன்ஷிகாவும் மாளிகையின் மேல் தளத்தில் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே தூங்கி விட்டனர்.

வானத்தில் முழு நிலவு எழுந்தது. அதன் ஒளி எங்கும் பரவியது. நன்கு போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள் தன்ஷிகா. அவளுடைய உள்ளங்கை மட்டும் போர்வைக்கு வெளியே இருந்தது. நிலவொளி அவள் கையில் பட்டது.

''ஆ! ஐயோ! என்ன செய்வேன்! தீப்பிடித்தது போல என் கை எரிகிறதே. வலி தாங்க முடியவில்லை,'' என்று அலறியபடியே எழுந்தாள் அவள்.

அரசியின் அலறல் கேட்டு அரசனும் விழித்துக் கொண்டார்.

அவள் உள்ளங்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நெருப்பு பட்டதைப் போல அவள் கையில் கொப்புளங்கள் இருந்தன. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை.

''எப்படி இந்தத் தீக்காயங்கள் ஏற்பட்டன?'' என்று கேட்டார்.

துடிதுடித்தப்படியே அவள், ''நிலவொளி பட்டதால் இந்தக் காயங்கள் ஏற்பட்டன,'' என்றாள்.

அங்கு வந்த பணிப் பெண்கள் அவள் கையில் சந்தனத்தைப் பூசினர்.

மருத்துவரை அழைத்து வர ஒரு பணிப் பெண் ஓடினாள்.

என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி நின்றார் அரசர்.

தன்ஷிகாவிற்கும், தாரிகாவிற்கும் ஏற்பட்ட துன்பத்தைக் கேள்விப்பட்டாள் தனுஜா.

அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல நினைத்தாள்.

தன் மாளிகையை விட்டு வெளியே வந்தாள் அவள்.

அருகிலிருந்த யார் வீட்டிலோ உலக்கையால் இடித்துக் கொண்டிருந்தனர். அந்த ஓசை தனுஜாவுக்கு கேட்டது.

''ஆ! ஐயோ! செத்தேன்!'' என்று வலி தாங்க முடியாமல் அலறினாள் அவள். கையை உதறினாள்.

பணிப்பெண்கள் அவளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றாள்.

இதை அறிந்த அரசர் பரபரப்புடன் தனுஜாவின் மாளிகைக்குள் வந்தார். அவளுடைய கையைப் பார்த்தார்.

தாமரை மலரில் கருவண்டு இருப்பதைப் போலவே அவள் கைகள் கன்றிப் போயிருந்தன.

அன்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்துப் பார்த்தார் அரசர்.

மனைவியர் மூவருமே மென்மையானவர்களாக உள்ளார்களே... 'இவர்களில் யார் மிகவும் மென்மையானவர்?' என்று சிந்தித்தார்.

அவரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

உலக்கை ஒலி கேட்டுக் கைகள் கன்றிப் போன தனுஜாவே மிகவும் மென்மையானவள். மற்ற இருவரும் அவளுக்கு ஒப்பாக மாட்டார்கள்.

சாமந்திப் பூ விழுந்ததாலும், நிலவொளி பட்டதாலும் தொடர்பு கொண்டதன் காரணமாகவே தாரிகாவுக்குக் காயமும், தன்ஷிகாவுக்கு கொப்புளங்களும் ஏற்பட்டன. ஆனால், தொடர்பு இல்லாமல் ஓசை கேட்டே தனுஜாவுக்கு கைகள் கன்றிப் போயின. இதனால், தனுஜாவே மிகவும் மென்மையானவள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us