தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஷிபம் ஹத்ரமவுட் மண் நகரம்!

ஷிபம் ஹத்ரமவுட் மண் நகரம்!

ஷிபம் ஹத்ரமவுட் மண் நகரம்!


PUBLISHED ON : பிப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் இங்கே காணப் போவது கனவு போன்ற ஒரு மாய உலகத்தை அல்ல. 'ஷிபம் ஹத்ரமவுட் மண் நகரம்' என்ற கற்பனைக்கும் எட்டாத ஒரு உண்மையைத் தான்.

கற்களால் அல்லாமல் வெறும் மண்ணால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமான ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம் 'ஷிபம்.' சுமார் ஏழாயிரம் பேரே வசிக்கும் இந்த நகரம் ஹத்ரமவுட் நாட்டின் ரம்லத் அல்சபைடன் பாலைவனத்தில் அமைந்துள்ளது.

பல அடுக்கு மாடி கட்டடங்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதியான இந்த நகரம் வாடி பகுதி யில் பல நூறு மீட்டர் உயர மான இடத்தில் பாறைகளி னாலான குன்றுப் பகுதியில் செவ்வக வடிவில் நன்கு திட்டமிடப்பட்ட பாதுகாப்பு அரணுடன் கூடிய தெருக்களையும், சதுக்கங்களையும் கொண்டு அமைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேறிய மக்கள் பதினாராம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அழிந்து போக, அவ்விடத்தில் தற்போது அவர்களின் சந்ததியினர் குடியேறியுள்ளனர். ஷிபம் நகர் 1982ம் ஆண்டு 'யுனெஸ்கோ' நிறுவனத்தில் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னிகரற்ற வித்தியாசமான கட்டடக் கலைச் சிறப்புக்காக புகழ்பெற்றது.

இங்குள்ள நூற்றுக்கணக்கான அடுக்கு மாடி வீடுகள் சுடாத மண்ணால் கட்டப்பட்டவை. இவை ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளுடன் ஐந்து முதல் பதினேழு தளங்கள் வரை கொண்டன.

இந்நகரம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இங்குள்ள பெரும்பான்மை வீடுகள் பதினாறாம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு பின்னரே அமைந்தவை தான்.

ஆயினும் கி.பி.தொள்ளாயிரத்து நான்கில் கட்டப்பட்ட வெள்ளிக் கிழமை மசூதி, கி.பி.ஆயிரத்து இருநூற்றி இருபதில் எழுப்பப்பட்ட கோட்டை போன்ற மிகப் பழைய வீடுகளும், மிக பிரம்மாண்டமான கட்டடங்களும் இன்றும் இங்கு உள்ளன.

இவை போன்ற பழைய கட்டடங்களில் களிமண்ணால் எழுப்பப்பட்ட மசூதிகள், சுல்தான்களின் இரண்டு அரண்மனைகள், வரலாற்று சிறப்புப் பெற்ற இரண்டடுக்கு கட்டடங்கள் போன்ற ஐநூறு அமைப்புகளும் அடங்கும்.

உலகிலேயே புராதனமான, வானளாவிய கட்டடங்களின் நகரம் என்று அழைப்படும் ஷிபம் மிகப் பழமையானதும் சிறந்ததுமான நகரத் திட்டமிடலுக்கு எடுத்துக்காட்டாக கருதப் படுகிறது. இங்கே செங்குத்தான கட்டுமானத் தத்துவத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட நூறடிக்கும் மேல் உயரமான பல மண் கட்டடங் கள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

மண் கட்டடங்கள் மழை, காற்று ஆகியவற்றில் எளிதில் அரிப்புக்கும், பாதிப்புக்கும் உள்ளாகும் என்பதை கருத்தில் கொண்டு சுவர்களின் மீது அடுக்கடுக்காக மண் பூசப்பட்டு நன்கு பராமரிக்கப் படுகின்றன.

இந்த கட்டடங்களின் நேர்த்தி அவற்றின் அமைப்பு இங்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள், உபயோகிக்கப்பட்ட தொழில் நுட்பம் ஆகியவை பண்டைய அராபிய மற்றும் இஸ்லாமிய கலாசாரத்துக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

இந்த இடத்தைச் சுற்றியுள்ள பாசனபூமி அந்த நாள் முதல் இந்த நாள் வரை திடீர் திடீர் என்று இங்கு ஏற்படும் வெள்ள நீர் விவசாயத்திற்கு உபயோகப் படுத்தப்படுகிறது.

இவ்வாறு வெள்ள நீர் பாசன விவசாயம், மண் உற்பத்தி, மண் கட்டடங்களின் கட்டுமானம் என எல்லாம் இணைந்த பொருளாதார முறை இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதகுலமே பெருமை கொள்ளும் ஒரு படைப்பாக விளங்கும் இந்த ஷிபம் நகரம் போன்ற வரலாற்றுச் சின்னங்களை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது நமது கடமையாகும்.

சாரதா விஸ்வநாதன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us