PUBLISHED ON : ஜூன் 05, 2015

கடலூர் என்ற ஊரில் பழங்காலக் கட்டடம் ஒன்று இருந்தது. அதில் தனவள்ளி என்ற மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்தாள்.
அந்த கட்டடத்திற்குச் சிறிது தொலைவில் சுடுகாடு ஒன்று இருந்தது. அந்த ஊரில் யார் இறந்தாலும் அங்கேதான் எரிப்பர்.
அந்தச் சுடுகாட்டுப் பேய்கள் தனக்குத் தொல்லை தருவதாக அஞ்சினாள் மூதாட்டி.
அவளுடைய தங்கையின் மகன் அஷ்வத் அங்கே வந்தான். அந்தக் கட்டடத்தையும், சுற்றுத் சூழலையும் பார்த்த அவன், ''பெரியம்மா! இந்த இடம் மிக அழகாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. நான் இங்கே சில நாட்கள் தங்கப் போகிறேன்,'' என்றான்.
''நீ எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கே தங்கு. நீ தங்குவது எனக்கும் துணையாக இருக்கும்,'' என்றாள்.
அவனுக்கு எந்தக் குறையும் ஏற்படாத வண்ணம் கவனித்துக் கொண்டாள் தனவள்ளி.
'தன் பெரியம்மா பேய்களுக்கு அஞ்சுகிறாள். அருகில் உள்ள சுடுகாட்டிலிருந்து வந்து தொல்லை தருவதாக நினைக்கிறாள். எப்படியாவது அவளது அச்சத்தைப் போக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான் அஷ்வத்.
மறுநாள் காலையில்-
''பெரியம்மா! நான் இங்கே வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. இன்னும் அந்தச் சுடுகாட்டைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு வருகிறேன்,'' என்று புறப்பட்டான்.
நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்ததோ? பேய்கள் அவனை என்ன செய்ததோ? என்று கவலைப்பட்டாள்.
மாலை நேரம் வீடு திரும்பினான் அவன்.
''அஷ்வத் ! சுடுகாட்டில் பேய்கள் எதையாவது பார்த்தாயா? அவை உன்னை ஒன்றும் செய்யவில்லையா?'' என்று பரபரப்புடன் கேட்டாள் மூதாட்டி.
''நான்கைந்து பேய்களைப் பார்த்தேன். அவற்றுடன் பேசிக் கொண்டு இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை,'' என்றான் அஷ்வத்.
''என்ன நான்கைந்து பேய்களைப் பார்த்தாயா? அவற்றுடன் பேசினாயா? என்ன பேசினாய்?'' என்று கேட்டாள் மூதாட்டி.
''பெரியம்மா! அவற்றிடம் உங்களைப் பற்றித்தான் பேசினேன். அந்தக் கட்டடத்தில் என் பெரியம்மா இருக்கிறார்கள். நீங்கள் ஏன் அவளுக்கு அச்சம் தருகிறீர்கள்? இனி நீங்கள் யாரும் அங்கே செல்லாதீர்கள் என்றேன்,'' என்றான்.
''அதற்கு அந்தப் பேய்கள் என்ன சொல்லின?'' என்று ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.
''எங்களால் முடியாது. நாங்கள் இருப்பதாக அந்தப் பெண்மணி நம்புகிறாள். அப்படி நம்பும் வரை நாங்கள் அங்கே சென்று கொண்டு தான் இருப்போம். எங்களை நம்பாதவர்முன், நாங்கள் செல்வது இல்லை என்றன பேய்கள்,'' என்றான்.
''அஷ்வத்! இனி நான் பேய்களுக்கு அஞ்ச மாட்டேன்!'' என்றாள்.
அதன் பிறகு பேயை பற்றி நினைக்காமல் நிம்மதியாக வாழ்ந்தாள் தனவள்ளி.
***
