PUBLISHED ON : அக் 11, 2019

வேலுார் மாவட்டம், காட்பாடி, தொன்போஸ்கோ பள்ளியில், 2014ல், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி அலுவலகத்துக்கு அழைத்த கணிப்பொறி ஆசிரியர் தாமஸ், 'அரசு உதவித்தொகை வந்திருக்கு... நோட்ல, உன் பெயர் எழுதி, கையெழுத்துப் போடு...' என்றார்.
மிகவும் பவ்யமாக, 'ஐயா, கொஞ்சம் பேனா கொடுங்கள்...' என்றேன்.
கடும் கோபத்துடன், 'படிக்கிற பையன் பாக்கெட்ல பேனா இல்லாம இருக்கலாமா... அலுவலக அறைக்கு வரும் போதாவது, பேனா கொண்டு போகணுமேங்கிற அறிவு இல்லையா...' என்று கடிந்தார். அத்துடன், பேனாவை எடுத்து வந்து, கையெழுத்திட சொன்னார்.
அன்று முதல், சட்டைப் பையில் பேனா வைத்துக் கொள்வதை, வழக்கமாக்கினேன்.
கல்லுாரியில், 2016ல் சேர்ந்தேன்; முதல் பட்டதாரி உதவித்தொகை பெற்ற போது, சட்டையில் வைத்திருந்த பேனாவால் கையெழுத்திட்டேன்.
அதை கவனித்த அதிகாரி, 'உதவித் தொகை வாங்க வர பாதி பேருக்கு, நாங்க தான் பேனா தரணும்... எங்க காலத்துல பேனா வெச்சிருக்கிறவங்கள பெருசா மதிச்சாங்க... இப்பலாம், படிக்கிறவன் பேனா வெச்சுக்குறதில்ல...' என்று கூறி, என்னை பாராட்டினார்.
அந்த ஆசிரியர், கடிந்து கொள்ளாதிருந்தால், இந்த பாராட்டு கிடைத்திருக்காது; பேனாவை பயன்படுத்தும் போதெல்லாம், அவரை நினைவில் கொள்கிறேன்.
- பி.விஜய் பிரசாத், வேலுார்.
