PUBLISHED ON : ஜூன் 21, 2013

ஒரு நகரத்தின் சற்று தொலைவில் இருந்த குட்டை ஒன்றில் சில மீன்கள் வசித்து வந்தன. அந்த மீன்களிடம் காகமும், எலியும் நட்புடன் பழகி வந்தன. காகமும் எலியும் குட்டையின் கரையில் அமர்ந்து மீன்களோடு பல கதைகள் பேசிக் கொண்டிருக்கும். யாரேனும் மீன்களுக்குத் தொல்லை தந்தால், காகம் அவர் களைக் கொத்தி விரட்டி விடும்.
மீன்களின் கூட்டத்தில் மெர்சி என்ற மீன் மட்டும் தங்க நிறத்துடன் அழகாக இருந்தது. தன் அழகைப் பற்றி எப்போதும் கர்வம் கொண்டு திரிந்த அது, அழகற்ற தோற்றத்துடன் இருந்த காகத்தையும், எலியையும் வெறுத்தது.
'மிகவும் அழகான நான் அழகில்லாத காகத்திடமும், எலியிடமும் பழகினால் எனக்கு அவமானம் அல்லவா?' என்று நினைத்தது.
அது மற்ற மீன்களிடம், ''அவற்றுடன் நட்பு கொள்ள வேண்டாம்!'' என்று கூறியது.
மற்ற மீன்கள் மெர்சியின் பேச்சுக்கு செவி சாய்க்க வில்லை. எனவே, மெர்சி மீன் மட்டும் காகத்தையும், எலி யையும் கண்டால், குட்டையின் அடியில் சென்று மறைந்து கொள்ளும்.
ஒருநாள் காகம் இரைதேட சென்றிருந்தது. அவ்வேளையில் அந்த குட்டைக்கு சில சிறுவர்கள் வந்தனர். அவர்கள் கையில் ஒரு சிறிய வலை இருந்தது. அச்சிறுவர்கள் குட்டையிலிருந்த தங்க மீனைப் பார்த்து விட்டனர். தங்கள் வலையைக் கொண்டு அதைப் பிடித்து, ஒரு நீர் நிரம்பிய குவளையில் போட்டு எடுத்துச் சென்றனர். அதைக் கண்ட மற்ற மீன்கள் எல்லாம் மனம் வருந்தின. மெர்சி மீனும் தான் சிறுவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதை நினைத்து அழுதது.
சற்று நேரத்தில் காகம் திரும்பி வந்ததும், மீன்கள் மெர்சிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் கூறின. உடனே காகமும், சிறுவர்கள் சென்ற திசையில் பறந்து சென்றது. சிறுவர்கள் மெர்சி மீனைக் கொண்டு செல்வதைப் பார்த்தது. காகம் அவர்கள் பின்னாலேயே, அவர்கள் அறியாதபடி பறந்து சென்றது. சிறுவர்கள் தங்கள் வீட்டின் முன் அறையில் இருந்த ஒரு கண்ணாடித் தொட்டியில் தங்க மீனைப் போட்டனர். பாவம் மெர்சி தங்க மீன், கண்ணாடித் தொட்டியில் அகப்பட்டுக் கொண்டது.
மெர்சி மீனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு காகம் வருந்தியது. அது குட்டைக்குத் திரும்பிச் சென்று மெர்சியைப் பற்றி மற்ற மீன்களிடமும், எலியிடமும் கூறியது.
அதைக் கேட்ட மற்ற மீன்கள் காகத்திடம், ''நண்பரே! எப்படியேனும் மெர்சியைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்?'' என்று வேண்டின.
எலியும், காகத்திற்கு உதவி செய்வதாகக் கூறியது.
அதன்படி மறுநாள் காகமும், எலியும் சிறுவர்களின் வீட்டை நோக்கிச் சென்றன. காகம் அருகிலிருந்த ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டது. அவ்வீட்டின் கிணற்றடியில் ஒரு வாளியும், அதில் சிறிது நீரும் இருந்தது. அதைக் கண்ட எலி யாரும் அறியாதபடி வீட்டிற்குள் சென்று ஒருபழைய பிளாஸ்டிக் குவளை ஒன்றைக் கவ்விக் கொண்டு வந்தது. குவளையில் வாளியிலுள்ள நீரை எடுத்துக் கொண்டு கிணற்றடியில் காத்திருந்தது.
காகம் சற்றும் தாமதிக்காமல், ஜன்னல் வழியாக வீட்டினுள் பறந்து சென்று, மீன் தொட்டியின் மீது அமர்ந்து மெர்சியிடம் தன் திட்டத்தைக் கூறி, மெர்சியை தன் வாயில் கவ்விய படி பறந்து வந்து எலியின் கையி லிருந்த நீர் நிரம்பிய குவளையில் போட்டது. யாரும் கவனிக்குமுன் அந்த குவளையை வாயில் கவ்விக் கொண்ட காகம், நேராக குட்டைக்கு வந்து சேர்ந்தது. குவளையை குட்டைக் குள் காகம் சாய்க்க, மெர்சி மீன் அதிலிருந்து குட்டைக்குள் தாவியது. காகம் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் எலியும் அங்கு வந்து சேர்ந்தது.
உடனே மற்ற மீன்கள் மெர்சியிடம், ''பார்த்தாயா... நீ உன் அழகைக் குறித்து கர்வம் கொண்டிருந்தாய். அந்த அழகே உனக்கு சிறுவர்களிடமிருந்து ஆபத்தைக் கொண்டு வந்தது. ஆனால், நம் நண்பர்களான காகமும், எலியும் கறுப்பாக இருக்கின்றனர் என்று அவர்களை வெறுத்தாய். ஆனால், இன்று அவர்கள் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கின்றனர். இனியேனும் அழகை நினைத்து கர்வம் கொள்ளாமல் காகத்திடமும், எலியிடமும் நன்றியோடும், நட்போடும் நடந்து கொள்!'' என்று கூறின.
மெர்சி தங்க மீனும் தன் கர்வம் நீங்கி காகத்திடமும், எலியிடமும் நட்பு கொள்ள ஆரம்பித்தது.
***
