PUBLISHED ON : ஜூன் 21, 2013

ஒருசமயம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவை கூடியிருந்தது. மக்களின் நிலை பற்றிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் எழுந்து சொன்னார், ''அரசே! விஜய நகரத்தின் மக்கள் மிகவும் வசதியாக உள்ளனர். ஆகவே, நாம் கொஞ்சம் வரியைக் கூட்டினால் மக்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு எதுவும் வந்து விடாது... ஆனால், அரசாங்கக் கருவூலம் ரொம்பவும் நிரம்பி விடும்,'' என்றார்.
அரசர் அதுபற்றி அவையினரிடம் கேட்டார். எல்லாரும் அமைச்சர் சொன்னதையே ஆமோதித்தனர். அச்சமயம் தெனாலி அங்கு இல்லை. விடுப்பில் சென்றிருந்தார்.
அமைச்சர் எழுந்து, ''அரசே! தெனாலி ராமன் எதற்கும் முட்டுக்கட்டை போடுவான். ஆகவே, வரி உயர்வு அறிவிப்பை அவன் வருவதற்கு முன்னதாகவே செய்து விடுங்கள்...'' என்றார்.
அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டு, வரியை உயர்த்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு, தெனாலி அரசவைக்கு வந்தார்.
அப்போது அரசர், ''தெனாலிராமா! சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் மக்களின் மீது கொஞ்சம் வரியை உயர்த்தினோம். அதுபற்றிய மக்களின் கருத்து என்ன? அறிந்து வந்து சொல்...'' என்றார்.
அதற்குத் தெனாலிராமன், ''அரசே! வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, நான் கிராமத்தில் இருந்தேன். விஜயநகர மக்கள் உங்களைப் புகழ்ந்து பேசச் சளைப்பதே இல்லை. வேண்டுமானால் நீங்களே சென்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
மகிழ்ச்சி அடைந்த அரசர், ''நல்லது! அப்படியானால் நாளையே கிளம்புகிறேன். நீயும் உடன் வா...'' என்றார்.
மறுநாள் இருவரும் மாறுவேடத்தில் கிளம்பினர்.
ஓரிடத்தில் கிராமத்து விவசாயக் கூலிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சுவர் மறைவில் நின்று இருவரும் பேச்சை ஒட்டுக் கேட்டனர்.
''நம் அரசர் மிகவும் நல்லவர். அரச சபையினர் யாரோதான் அரசருக்குத் தவறான யோசனை கூறியிருக்கின்றனர்,'' என்றார் ஒருவர்.
''முதலில் மக்கள் வருடத்துக்கு இரண்டு ஜோடி உடை வாங்கினர். இனி ஒன்றுதான் வாங்க முடியும்... அதை ஈடு செய்யத் துணியை ஒட்டுப் போட்டுத் தைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்...'' என்றார் இன்னொருவர்.
''முன்பெல்லாம் எப்போதாவதுதான் பாலும், நெய்யும் கண்டனர்... இனிமேல் அதுவும் இல்லை,'' என்றார் மற்றொருவர்.
அதையெல்லாம் கேட்ட அரசர், மிகவும் மனம் இளகினார். தெனாலி ராமனை அழைத்துக் கொண்டு அரண் மனை திரும்பி, முதல் வேலையாக 'உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்து, பழையபடியே வசூலிக்கப்படும்' என்று உத்தரவிட்டார்.
மக்கள் அரசரைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டினர். அரசர் தன் பங்குக்குத் தனது கண்களைத் திறந்த தெனாலி ராமனைப் புகழ்ந்து பாராட்டினார்.
***
