தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கொல்லா விரதம்!

கொல்லா விரதம்!

கொல்லா விரதம்!


PUBLISHED ON : டிச 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசி வாட்டியதால் இரை தேடி அலைந்தது ஒரு ஆடு. எதுவும் கிடைக்காததால் களைத்து, அழகாபுரி காட்டு பக்கம் வந்தது. அங்கு, அலைந்து திரிந்த நரி, 'ஆஹா... கொழுத்த ஆடு; எப்படியும், மடக்கி விட வேண்டும். இன்று நல்ல விருந்து' என, எண்ணியதும் நாவில் எச்சில் ஊறியது.

ஆட்டை வீழ்த்துவது பற்றி தீவிரமாக யோசித்தது. நேரடியாக மோதினால், பாய்ந்து முட்டி, கொன்று விடும் ஆடு. அதனால், சூழ்ச்சியால் வெல்ல திட்டமிட்டது. நல்லவன் போல் நடித்து உறவாடி, சந்தர்ப்பம் வாய்க்கும் போது, வீழ்த்தும் முடிவுடன் நெருங்கியது.

செயற்கையாக பல்லைக்காட்டிய நரி, 'நண்பா... நலந்தானா...' என, போலியாக உருகியது. நரியின் உறவாடுதலை சற்றும் எதிர்பார்க்காத ஆடு, 'எனக்கு நீ நண்பனா... உன்னை யாரென்றே தெரியாதே...' என்று கூறி விலக முயன்றது.

சற்றும் அசராத நரி, 'நண்பனே... நட்பு முன்னரே தெரிந்திருந்தால் மட்டும் தான் வருமா... புதியவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாதா... ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உன் போன்ற சாதுவான பிராணியுடன் நட்பு கொள்வது தான் பேரானந்தம் தரும். என் நட்பை ஏற்பாயா...' என, பசப்பியது.

சுதாகரித்த ஆடு, 'சூழ்ச்சியும், தந்திரமும் நிறைந்தவன் நீ; நானோ மிகவும் எளியவன்; தாவர உண்ணியான என் நட்பால் உனக்கு என்ன கிடைக்கும். இந்த அன்பும், பாசமும் சாத்தியமாகுமா...' என்று அப்பாவியாக கேட்டது.

'நண்பனே... என் துர் குணத்தை எல்லாம் விட்டு, வெகு காலமாகி விட்டது. அத்துடன், கொல்லா விரதமும் கடைப் பிடிக்கிறேன். அதனால் தான், துஷ்டப் பிராணிகளிடமிருந்து விலகி, என் கொள்கைக்கேற்ப நண்பர்களைத் தேடி வந்தேன். நீ அதற்கேற்றவன் என்பதால் நேசிக்கிறேன்...'

'அது சரி... உன் நட்பால், எனக்கு என்ன கிடைத்து விடப் போகிறது...'

'நீ, என்னுடன் நட்பு கொண்டால், உன்னைப் பட்டினி கிடக்க விட மாட்டேன்! புல் உள்ள இடங்களுக்கு, அழைத்துச் சென்று, மேய விட்டு, காவல் இருப்பேன். உன் சந்தேகம் தீர வேண்டுமானால், இப்போதே வா... புற்கள் நிறைந்த இடத்திற்கு அழைத்து செல்கிறேன். அப்போது நம்புவாயல்லவா...' என்று நயமாக பேசியது நரி.

'சரி... அழைத்து போ... நீ கூறியது உண்மை என்றால் நம்புகிறேன்...' என்றது ஆடு.

சிறிது துாரத்தில், பசுமை பொங்கிய நெல் வயலைக் காட்டி, 'முடிந்தவரை மேய்ந்து கொள்...' என்றது நரி. பசியாக இருந்த ஆடு, பச்சைப் பயிரைக் கண்டதும், ஆவலாக மேய ஆரம்பித்தது.

ஆட்டின் பின்புறம் ஒளிந்து நின்ற நரி, 'இதுதான் சரியான சந்தர்ப்பம், ஆட்டின் கவனம் புல் மேய்வதில் இருக்கிறது. அதன் முதுகில் பாய்ந்து, கழுத்தை கடித்து கொல்ல வேண்டும்' என, எண்ணியபடி, அதிவேகமாக பாய்ந்தது.

அந்த நேரம், வயலுக்கு உரிய விவசாயி அங்கு வந்தான். ஆடு மேய்வதைக் கண்டதும் ஆத்திரமடைந்தான். ஒரு தடியை எடுத்து, குறி வைத்து வீசினான். அது, ஆட்டின் மீது பாய்ந்த நரியை பயங்கரமாக தாக்கியது. வலி தாங்காமல் மயங்கி சாய்ந்த நரி, துடிதுடித்து உயிரை விட்டது.

இதைக் கண்டு மிரண்ட ஆடு, 'நமக்கு வந்த ஆபத்து நரியோடு போயிற்று... நல்ல வேளை, தப்பினேன்' என்று, பயந்து அலறி ஓட்டம் பிடித்தது.

குட்டி மலர்களே... நல்லவர் போல் நடித்து, யாருக்கும் கெடுதல் செய்ய எண்ணக்கூடாது; அப்படி எண்ணினால், நரிக்கு கிடைத்த தண்டனை தான் கிடைக்கும்!

சு.சங்கரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us