PUBLISHED ON : ஏப் 07, 2017

ஒரு அடர்ந்த காட்டில், சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பார்வையில் எந்த மிருகம் பட்டாலும், அதை அடித்து கொன்று தின்று விடும். ஆகையால், பிற மிருகங்கள் சிங்கத்தின் பார்வையில் படுவதேயில்லை.
மிருகங்களின் இந்த உஷார் தன்மையின் காரணமாக, பசியால் வாட நேர்ந்தது சிங்கம். இங்கும், அங்கும் இரை தேட அலைந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பார்வையில், கழுதை ஒன்று பட்டது. உடனே சிங்கம், கழுதையின் அருகில் சென்றது.
'சிங்கத்திடம் வசமாக மாட்டிக் கொண்டோமே...' என்று கழுதை நடுங்க ஆரம்பித்தது. அதன் கண்களில் நீர் வடியத் துவங்கியது.
“என்னைக் கொல்லாதே விட்டுவிடு,” என்று கெஞ்சியது.
“நான் உன்னை கொல்லாமல் இருக்க வேண்டுமானால், நீ, நான் சொல்லும்படி செய்ய வேண்டும்,” என்று கூறியது சிங்கம்.
“சிங்கராஜாவே! நீங்கள் என்னவெல்லாம் செய்ய சொல்கிறீர்களோ, அவற்றையெல்லாம் செவ்வனே செய்யச் சித்தமாக உள்ளேன்,” என்று பணிவுடன் கூறியது.
“கழுதையே... சொல்கிறேன் கேள். இப்போது நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன். உன்னை ஒரே அடியில் கொன்று தின்ன என்னால் முடியும். ஆனால், உன்னை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்த காட்டில் வாழும் மிருகங்களை, துரத்தி சென்று, அடித்து கொன்று தின்பதில் தான் எனக்கு அலாதி பிரியம்.
''என் கையில் கிடைத்த உன்னை ஓட விட்டு பின் துரத்தி பிடித்துக் கொன்று தின்பது என் வீரத்துக்கு இழுக்கு. அதனால் தான் உன்னைக் கொல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன். அதற்காக நீ செய்ய வேண்டியதெல்லாம்...” என்று கூறிய சிங்கம் பாதியில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டது.
“என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?” என்று மிக மிக ஆவலுடன் கேட்டது கழுதை.
“உனக்கு வாய் பெரிதாக உள்ளது. அதற்கேற்ப தொண்டை அமைப்பும், குரலும் உன்னிடம் உண்டு. நீ வாயை திறந்து, உன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி, இந்தக் காடே அதிரும்படி கத்த வேண்டும்.
''உன்னுடைய அந்த பயங்கரமான குரலைக் கேட்டவுடன், ஆங்காங்கே ஒளிந்து கொண்டிருக்கிற மிருகங்கள் என்னவோ, ஏதோ என்று நினைத்து, மறைவிடத்தை விட்டு வெளியே வந்து, ஓட ஆரம்பிக்கும். அதன்பின் அவற்றை துரத்தி பிடித்து, கொன்று தின்பது எனக்கு சுலபமாக இருக்கும். எனவே, நீ மிக பலமாக கத்த வேண்டும். மறுத்தால்... உன்னை நார் நாராகக் கிழித்து விடுவேன்,” என்று மிரட்டியது சிங்கம்.
அது முதல் சாதாரணமாக கத்திக் கொண்டிருந்த கழுதை சிங்கத்திடமிருந்து தப்பிப்பதற்காக அன்று தன் வாயை அகலமாக திறந்து பலமாக விட்டுவிட்டு, தொடர்ச்சியாக கத்தியது. கழுதையின் கத்தல் கேட்டு, ஒளிந்து கொண்டிருந்த மிருகங்கள் ஓட துவங்கின. சிங்கமோ தன் பசியை தீர்க்க அவற்றை துரத்தி சென்றது.
அதன்பின், கழுதை தன் வாயைத் திறக்க ஆரம்பித்த போதெல்லாம் சிங்கத்தின் பயம் நினைவுக்கு வரவே, பலமாக கத்த துவங்கிவிட்டது. பின் அதுவே அதன் குரலாகி விட்டது.
ஓ... இது தான் சங்கதியா... ஓ.கே., ஓ.கே.,
