PUBLISHED ON : ஜன 22, 2016

இதுவரை யாரும் வெள்ளை யானையை பார்த்ததாகச் செய்தியில்லை. யானையின் வழக்கமான கரும்பழுப்பு நிறம் சில நிறமி களின் மாற்றத்தால் வெளுத்து விடும் போது, அதை வெள்ளை யானை என்பர் போலும்.
இதுபோன்ற நிறம் வெளுத்த யானைகளை முன்பு மக்கள் புனிதமானதாகக் கருதினர். இவை, சில இடங்களில் தெய்வங்களாகவே வழிபாடும் செய்யப் பட்டன. இவை, மிக உயர்வானதாகக் கருதப்பட்டு அரசன் ஒருவன்தான் இதை வைத்திருக்கத் தகுந்தவன் என்ற கருத்தோடு அவற்றை அரசனுக்கு வழங்கி விடுவர்.
இப்படிப்பட்ட அரண்மனை யானை அதுவும் பட்டத்து யானை சொகுசாகப் பராமரிக்கப்படும் யானைகள் செய்யும் எந்தப் பணியையும் செய்யாது. நன்றாக பயிற்சி யளிக்கப்பட்ட பாகன்களால் பராமரிக்கப் படும். சில நேரங்களில் இந்த அரண்மனை யானைகளுக்கு உணவு வெள்ளி தொட்டி களிலும், தூய வெள்ளைத் துணிகளிலும் பரிமாறப்படும்.
பராமரிப்புச் செலவு மற்ற யானைகளை விட பல மடங்கு ஆனாலும் அவை செய்யும் செயல் மற்ற யானைகள் செய்வதில் சிறிதுதான். செலவு மட்டுமே பிடிக்கும் சில பெரிய அரசு துறைகளை வெள்ளை யானைக்கு ஒப்பிடுவர்.
