PUBLISHED ON : ஏப் 13, 2018

ஐரோப்பிய கண்டம், ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள, அயர் எனும் ஊரில், ஜான்லுாதரன் மெக்ஆடம், 1756ல் பிறந்தார். பெரும் செல்வ குடும்பத்தை சேர்ந்தவர்; உள்ளூரில் மிகப் பிரபல பள்ளியில் படித்தார்; 16ம் வயதில், தந்தையை இழந்தார்.
பின், அவரது சிறிய தந்தையுடன், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வாழ்ந்தார்; அங்குள்ள துறைமுகத்தில், 20ம் வயதில் வேலைக்குச் சேர்ந்தார். கப்பல்களை ஏலத்தில் விற்கும் பணியை செய்து வந்தார். நிறைய பணம் சேர்ந்தது; தந்தையின் பணமும் சேர, பெரும் செல்வந்தர் ஆனார்.
குளோரியானா நிக்கல் என்ற அமெரிக்க பெண்ணை, 1781ல் மணந்தார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சான்கியில், பெரிய பங்களா வாங்கி குடியேறி, விவசாய பண்ணை ஒன்றையும் துவங்கினார்.
துறைமுகத்தில், சிறந்த நிர்வாகம் செய்ததால், அவ்வூர் பஞ்சாயத்து தலைவராகவும், ஊரை சீர்திருத்தும் பங்காளராகவும், அரசு அவரை நியமித்தது.
பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றவுடன், கரடுமுரடான பாதைகளை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.
சிறுவயதிலிருந்தே கரடுமுரடான, குண்டும் குழியுமான பாதைகள், அவரை இம்சித்தன. அவற்றை அரசு ஒழுங்காக பராமரிக்காதா என ஏங்கினார்.
பாதைகளில் கூழாங்கற்கள் போட்டிருந்ததால் மக்கள் நடமாட முடியாமலும், வண்டிகள் போக முடியாமலும், அவஸ்தையாக இருந்தது. இதை மாற்றி, தரமான கற்களை போட்டு, அதன் மீது மேல் பூச்சு பூசி, பாதையை சீராக்க யோசித்தார்; பல ரக கற்களை போட்டுப் பார்த்தார்.
ஒரே வகை கற்களை, ஒரே அளவில் நிரப்பி, சரியாக மட்டம் தட்டி, 1789ல் பாதை அமைத்தார். அது, ஓரளவிற்கு சிரமத்தைக் குறைத்தது; வண்டிகள் தடுமாற்றமின்றி வந்து போக ஏதுவாக இருந்தது.
மற்ற ஊர்களிலும் இதே போன்று சாலை அமைக்க பிரசாரம் செய்தார்; யாரும் கேட்கவில்லை. சொத்துக்களை விற்று, தன் ஊரில் நல்ல பாதைகளை அமைத்தார். இதை பயன்படுத்தியவர்கள் அவரை புகழ்ந்தனர்.
விஞ்ஞான முறைப்படி, சாலை அமைக்க ஒரு திட்டத்தை உருவாக்கி, இங்கிலாந்து அரசுக்கு அனுப்பினார். அதாவது, 'பாதைகளில் கற்களோடு, ஒருவித கலவையும் போட்டால், கற்கள் பெயராமல், தரமான சாலை அமையும்; ஆயுள் கூடும்!' என்பதே, அவரது கொள்கை. இங்கிலாந்து அரசு, 1816ல் அவரது திட்டத்தை, ஏற்று செயல்படுத்தியது.
பல முக்கிய சாலைகள், குண்டு குழியுமில்லாமல், ஒரே அளவில், அழகாக போடப்பட்டிருப்பதை கண்டு, இங்கிலாந்து மக்கள் பாராட்டினர்.
சாரட் வண்டியில், இரண்டு மணி நேரம் செய்த பயணம், அரை மணி நேரமாக குறைந்ததை எண்ணி வியந்தனர். அவரின் சாலை அமைக்கும் திட்டங்களுக்கு, அரசு பரிபூரண அனுமதி அளித்தது.
இங்கிலாந்து முழுவதும், 1829க்குள் பாதைகள் அருமையாக போடப்பட்டன; கற்கள் பெயராமல், ஆண்டுகணக்கில் இருக்கும்படி செம்மைப் படுத்தப்பட்டன. அவரின் சாதனையை, அரசு பாராட்டி, புகழ்ந்தது.
தரமான பாதைகளை அமைத்ததால், தொழில்வளம் பெருகி, தொழில் புரட்சி ஏற்பட்டது. அந்த திட்டத்தை, ஜெர்மனி, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கேட்டு செயல்படுத்தின.
சாலை அமைப்பு முறைகளை பாராட்டி, 1825ல் அவருக்கு, 'சாலை தொழிலாளர்கள்' வெள்ளி மண்வெட்டியை பரிசளித்து பெருமைப்படுத்தினர்.
சாலைகளின் பிதாமகன், 1836ல், 80ம் வயதில் மறைந்தார். சொத்து முழுவதையும், சாலைகள் அமைப்பதற்காக பயன்படுத்தினார். அவர் மறைந்த பின், 1860ல் இங்கிலாந்து அரசு, அவரது பிள்ளைகளிடம் வீர விருதையும், பெரும் பரிசு பணத்தையும் அளித்து, கவுர வித்தது. சாலைகளின் மறு பெயர் மெக்ஆடம்; இதை மறக்கமுடியாது.
