தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சீனி சர்க்கரை கட்டி!

சீனி சர்க்கரை கட்டி!

சீனி சர்க்கரை கட்டி!


PUBLISHED ON : ஏப் 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரியான வெயில். காலையிலிருந்து, காட்டில் அலைந்து திரிந்து அலுத்து விட்டது அன்பரசுக்கு. அவன் தேடி வந்தது கண்ணில் படவில்லை. 'தட தட' வென்று மரங்கள் முறியும் ஓசை கேட்டது. சட்டென்று துள்ளிக் குதித்து, ஒரு புதர் மறைவில் விழுந்தான்.

கானகத்திலேயே பிறந்து வளர்ந்தவன். அங்கு உண்டாகும் சிறு ஓசையும், சலனமும் அத்துப்படி.

அன்பரசுவின் இமைக்காத விழிகள், சற்று துாரத்தில் மரம், கிளைகளை ஒடித்து, மிதித்து, துவைத்து, பூதாகாரமாக வரும் அந்த மிருகத்தையே பார்த்தது.

மூர்க்கமாக, ஒரு பெரிய மரத்தை முட்டி தள்ளியது . இப்போது, அன்பரசுவால், அதை நன்றாக பார்க்க முடிந்தது.

'சீனி... நம்ம சீனி தான்' என்று, அவனை அறியாமலே, வாய் முனகிற்று. எதை தேடி, காலை முதல் அலைகிறானோ அதே யானை; சீனி சக்கரைக்கட்டி என்று அவனால், செல்லமாக அழைக்கப்படும் யானை .

காட்டிலாகாவுக்கு சொந்தமான பழகிய யானை தான் சீனி. மாணிக்கத்தின் பொறுப்பில் உள்ள பல யானைகளில், சீனிக்கு தனி சலுகை உண்டு. ஏனென்றால், மாணிக்கத்தின் ஒரே மகன் அன்பரசுவின் அன்புக்கு பாத்திரமான யானை. எப்போதும் அதனுடனே இருப்பான்.

அப்படிப்பட்ட சீனியை, நான்கு நாட்களாக காணவில்லை. வெட்டி போட்ட மரங்களை இழுத்து வர சென்ற சீனி, திரும்பவில்லை. மாணிக்கமும், காட்டிலாகா அதிகாரிகளும் கவலை அடைந்தனர். சீனியை தேடி, பல திசைகளில், பலர் சென்றிருந்தனர். அன்பரசும், சீனியை தேடி காட்டில் அலைந்தான்.

அவன் விழிகள் வியப்பால், அகலமாகி, பீதி அடைந்தது. 'என் சீனியா இது... மூர்க்கமாக மரங்களை துவைக்கிறது. சாதுவான என் சீனியின் கண்களில் ஏன் இந்த வெறி...'குழம்பி போனான் அன்பரசு.

“சீனி... சீனி... நான் இங்கிருக்கேன்; உன் அன்பரசு. வாடா சீனி... என் சக்கரைக் கட்டி...” என்று, அன்பு ததும்ப அழைத்தான்.

ஆனால், வெறி பிடித்த யானை, அவனை பார்த்ததாகவே தெரியவில்லை. முன்பை விட, மூர்க்கமாக மரங்களை ஒடித்து, அழித்து கானகத்துக்குள் ஓடி மறைந்தது.

'சீனிக்கு என்ன வந்தது... ஏன் இப்படி மாறினான்.இதன் காரணம் அப்பாவுக்கு தெரிந்திருக்கும்...' என்ற நம்பிக்கை, அவன் நடையின் வேகத்தை அதிகரித்தது.

''அப்பா... அப்பா... சீனியை கண்டுபிடிச்சிட்டேன். அது பயங்கரமா பிளிறி கிட்டு, என்னை கண்டும் காணாதது போல காட்டுக்குள்ளே ஓடிடிச்சி...” என்றான்.

“கோபமாவா... உன்னைப் பார்த்தும், உன் கிட்ட வரலையா...” என்றார், மாணிக்கம்.

தான் கண்டதை, அப்படியே விவரித்தான். அவன் சொல்ல சொல்ல, அவர் முகம் வெளுத்தது.

“சீனிக்கு மதம் பிடிச்சிடிச்சி; உடனே, ஆபீசர் கிட்ட சொல்லிட வேண்டியது தான்; நீ சொல்றபடி இருந்தா, அதை சுட்டுக் கொல்ல வேண்டி இருக்கும்...” என்றார், மாணிக்கம்.

“என் சீனியை சுட்டு கொல்ல போறீங்களா...” என்று கத்தினான், அன்பரசு.

“யானைக்கு மதம் பிடிச்சுட்டா, ரொம்ப கஷ்டம்; இனிமே நமக்கு அடங்காது; எல்லாத்தையும் அழித்து நாசமாக்கும்; அதை உயிரோடு விடமுடியாது...” என்றார், மாணிக்கம்.

“அப்பா... அப்படின்னா ஆபீசர் கிட்ட எதுவும் சொல்லாதீங்க; என் சீனி எத்தனை சாது தெரியுமா...” என்ற, அன்பரசுவின் கண்களிலிருந்து, கண்ணீர் உருண்டது.

“அன்பரசு... நீ அதுகிட்ட வைச்சிருக்கிற அன்பை பத்தி, எனக்கு தெரியாதா... ஆனா, சீனிக்கு மதம் பிடிச்சுட்டுது; இதை ஆபீசருக்கு தெரியப்படுத்தியாகணும்; அது என் கடமை...” என்றார்.

ஆபீசரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்குமே அந்த செய்தி வியப்பாக இருந்தது.

“சீனிக்கா மதம் பிடுச்சிடிச்சி... ஏதோ ஒரு முரட்டு காட்டு யானை கிராமங்களில் புகுந்து, ரொம்ப தொந்தரவு தருவதாக புகார் வந்திருக்கு. ஆனா, உயிர் சேதம் ஏதுமில்லை. அது நம்ம சீனிதான்னு நினைக்கவே இல்ல... ம்... நாளை காலையில அதை கவனிப்போம்...” என்றார், காட்டிலாகா அதிகாரி.

அப்பா சொன்னது போலவே, அந்த அதிகாரி , நாளைக்காலையில், சீனியை சுட்டுக் கொல்ல போகிறார் என்று அறிந்தஅன்பரசுக்கு, அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

'சீனி, சீனி...' என்று, அவன் உள்ளம் புலம்பியது.

அன்று முழுவதும் சாப்பிடவில்லை; பட்டினியாகவே படுத்திருந்தான்; துாக்கமும் வரவில்லை. மதம் பிடித்த யானைகளை பற்றி, அப்பா எத்தனையோ கதைகள் சொல்லியிருக்கிறார். அனைத்தும், அவன் கண்முன் வந்தன.

சட்டென்று ஒரு முடிவுடன், எழுந்து உட்கார்ந்தான்.

'என் சீனிக்கு மதம் பிடிச்சாலும் சரி, அதை என்னால் இழக்க முடியாது; எப்படியும் அதை காப்பாற்றுவேன்!' என்ற உறுதியுடன், ஓசைப்படாமல், வீட்டை விட்டு வெளியே வந்தான்.

கானகம் ஆழ்ந்து உறங்கியது. 'கொர்... கொர்...' என்ற தவளைகளின் ஓசையும், 'கூ... கூ' ஆந்தையின் குரலும் தவிர, எங்கும் ஒலியுமில்லை; ஒளியுமில்லை.

உறுதியோடு, வேகமாக நடந்தான். குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், ஒரு மரத்தின் மீதேறி காத்திருந்தான். சீனியின் பார்வையில், படுமுன், அது வருவதை உணர்ந்தான் அன்பரசு.

முதல் நாள் பார்த்த போதிருந்த அதே கோபம், மூர்க்காவேசம். அன்பரசு, 'சட்'டென்று தான் ஏறியிருந்த மரத்தின் உச்சிக்குப் போனான். நெஞ்சு, 'தடதட'வென்று அடித்தது. சீனியின் செய்கை அவனுக்கு பயத்தை கொடுத்தது. ஆனாலும், நண்பனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடிருந்தான்.

“சீனி... என் அருமை சீனி... இதோ பார், உன் தோழன் அன்பரசு. என்னை மறந்துட்டியா... முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதே... அப்புறம் உன்ன சுட்டுக் கொன்று விடுவர்...” உருக்கமாக, உரிமையோடு கெஞ்சினான் அன்பரசு.

ஒரு நிமிடம் நிமிர்ந்து, நிதானித்து அவனை பார்த்தது சீனி; அன்பரசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அடுத்த வினாடி, தன் துதிக்கையை உயர்த்தி, காற்றை முகர்ந்து மூர்க்கமாக சுழற்றியது. பின்,பயங்கரமாக பிளிறியபடி,அன்பரசு ஏறியிருந்த மரத்தை நோக்கி மிக வேகமாகக் காடே கிடுகிடுக்க ஓடி வந்தது.

அன்பரசுவின் உடலில், 'குப்'பென்று வியர்வை வழிய, நடுங்கி போனான். தாழ்த்திய தலையோடு, தானுள்ள மரத்தை நோக்கி வந்த யானையின் காதருகே அவன் பார்வை சென்றது.

'அங்கே... அதென்ன, அத்தனை பெரிய காயம். ஐயோ, என் சீனியை யாரோ சுட்டிருக்கின்றனர். குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்து ரணமாகியிருக்கிறதே... சீனி, என் அருமை சீனி கட்டி, உன்னை யார் இப்படி காயப்படுத்தினர்...' அன்பரசுவின் மனம் அழுதது.

அதே வேளையில், துப்பாக்கி குண்டின் ஒலியும் அதிர்ந்தது; ஆனால், குறி தவறி வீணாகியது. துாரத்தில், இரண்டு பேர் துப்பாக்கிகளை உயர்த்தி, மறுபடியும் சீனியை சுட தயாராவதை கண்டான்.

ஏதாவது செய்து தடுக்காவிடில், அவர்களுடைய குறி நிச்சயம் சீனியின் உயிரை குடித்து விடும்.

அன்பரசுவுக்கு வெறி ஏற்பட்டது. மரத்தின் மீதிருந்தவாறே உரக்க கத்தினான்.

“சுடாதீங்க... சுடாதீங்க... சீனி படுகாயம் அடைந்திருக்கு; அதுக்கு மதம் பிடிக்கல. சுடாதீங்க... சுடாதீங்க... சுடாதீங்க...”

அன்பரசுவின் உச்ச குரலை கேட்டு, 'சட்'டென்று, துப்பாக்கியை தாழ்த்தினார் காட்டிலாகா அதிகாரி.

அவரிடம் எப்போதுமே ஒரு கைத்துப்பாக்கி இருக்கும். அதால் சுட்டால், பிராணிகளின் உயிர் போகாது. அதிலிருந்து வெளிப்படும் ஒரு வகை குண்டு, பிராணிகளின் உடலில் மயக்க மருந்தை செலுத்தி, நினைவிழக்க செய்யும்.

நோயுள்ள காட்டு விலங்குகளின் அருகே சென்று, ஊசி போட முடியுமா... அதற்காகத்தான் இப்படியொரு வழி வைத்திருந்தனர். அந்த மயக்க மருந்து குண்டை இப்போது, இரண்டு மடங்காக சீனியின் உடலில் பாய்ச்சி சுட்டார். சில வினாடிகளில், தள்ளாடியபடி கீழே சாய்ந்தது சீனி.

காட்டிலாகா அதிகாரியும், மாணிக்கமும் ஓடோடி வந்தனர். உடனே, மரத்திலிருந்து இறங்கி, ஓடி வந்தான் அன்பரசு.

யானையின் காதருகில் குண்டு பதிந்து, ரத்தம் வழிவதை கண்டனர்; குண்டை லாகவமாக வெளியேற்றி, மருந்து வைத்து கட்டினார் அதிகாரி.

“யானை தந்தங்களை கடத்தும் கொலைக்கார கூட்டத்தினர் யாரோ, சீனியை சுட்டிருக்கின்றனர். அதனால், ஏற்பட்ட வலியால் தான், வெறி கொண்டிருக்கிறது...” என்று விளக்கினார் அதிகாரி.

கண்ணீர் வழிய நின்றான் அன்பரசு.

“கவலைப்படாதே... இன்னும், இரண்டு மணி நேரத்துல, உன் தோழனுக்கு நினைவு திரும்பிடும்; அதுக்கப்புறம், பழைய, யானையாவே இருக்கும்...” என்றபடி, அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார், அதிகாரி.

இரண்டு மணி நேரம் கவலையோடு, அருகிலேயே அமர்ந்திருந்தான், அன்பரசு.

கண் விழித்த சீனி, துதிக்கையால் அன்பரசுவின் முகத்தை அன்போடு வருடியது. அதன் காயத்தில், இப்போது வலி இல்லை என்பதை உணர்ந்து கொண்டான் அன்பரசு. வாஞ்சையோடு துதிக்கையை கட்டி கொண்டான்; சாந்தமாக, எழுந்தது சீனி.

துதிக்கையை சீனி சுருட்டிக்கொள்ள, அதில் ஏறி அமர்ந்து, சந்தோஷமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றான் அன்பரசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us