தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அவன் பெயர் அனிருத்! (23)

அவன் பெயர் அனிருத்! (23)

அவன் பெயர் அனிருத்! (23)


PUBLISHED ON : ஏப் 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: கோடீஸ்வரர் ஒலிவேராவின் மகனாக வளரும் அனிருத்தை கண்டுபிடித்தனர். நான் அவனில்லை என்று சொல்லி, இளவேனில் மற்றும் சாகித்யாவை சுட்டுவிடுவதாக கூறினான் அனிருத்.

இனி -



'நான் அவனில்லை!' என அனிருத் சாதித்ததும், 'துப்பாக்கியால் சுட்டு விடுவேன்!' என மிரட்டியதை இளவேனிலால் தாங்க முடியவில்லை.

கண்களில், கண்ணீர் பொங்கியது.

கன்னத்தில் ஓடிய கண்ணீரை, துடைத்து விட்டது, பியூ.

''அடுத்து என்ன செய்ய...'' வினவினாள், சாகித்யா.

''நாளை காலை, 'ப்ளைட்' பிடிச்சு, சென்னை போறோம்; அனிருத் உயிரோடு இருக்கிறத, அவனோட பெற்றோர் கிட்ட சொல்லுவோம்; வழக்கறிஞருடன் ஆலோசித்து, சட்ட ரீதியாக மீட்க, நடவடிக்கைகள் எடுப்போம்...''

''ஓ.கே., இளவேனில்...''

இருவரும் உணவு முடித்து, துாங்கப் போயினர்.

நள்ளிரவில், அயர்ந்து துாங்கிய போது, ஒரு உருவம் ஜன்னல் வழியாக, அறைக்குள் குதித்து, விளக்கை உயிர்ப்பித்தது.

காலடி அரவம், இளவேனிலை விழிப் பூட்டியது; வந்த உருவத்தை பார்த்து விட்டான்.

அந்த உருவம் கிசு கிசுத்தது.

''சத்தம் போட்டு பேசாதீர்; நான், உங்களுக்கு உதவவே வந்திருக்கேன்...''

''முதலில், உன் பேரைச் சொல்லு...''

''சந்தீப்... ஒலிவேரா கிறிஸ்டோபரின் கையாளாக, 10 ஆண்டு இருந்திருக்கிறேன்; கிறிஸ்டோபரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வெளியேறி விட்டேன்...''

''காவல்நிலையத்துக்கு போகாமல், எங்களிடம் ஏன் வந்தாய்...''

''நீங்கள் இருவரும் அனிருத்தை தேடி வந்திருக்கிறீர்; அவன் எதற்காக கடத்தப்பட்டான், எப்படி கடத்தப்பட்டான் என்பது, எனக்கு தெரியும்; அந்த 'பிளாஷ் பேக்'கை கூறவே வந்தேன்...''

''உன் பேச்சை நம்பலாமா...''

''நான் கூறுவதெல்லாம் உண்மை...''

''சந்தீப்... முதலில் உங்கள ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்க; கூஜாவில் இருக்கும் நீரை குடிச்சிட்டு, எங்களுக்கு எதிராக உக்காருங்க...''

வந்தவன், நீண்ட பெருமூச்சு விட்டான்; சந்தீப் கூறுவதை, சாகித்யாவின் வீடியோ போன் விழுங்க ஆரம்பித்தது.

நான்கு வயது சிறுவன் ராகுல் கிறிஸ்டோபர், மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு சென்றிருந்தான்.

'இன்டென்சிவ்கேர் யூனிட்'டிலிருந்து, மருத்துவக்குழு வெளியே வந்தது.

தலைமை மருத்துவரை அணுகினார், ஒலிவேரா கிறிஸ்டோபர்.

'என்னோட, 49ஆவது வயசில தான், ராகுல் கிறிஸ்டோபர் பிறந்தான்; எனக்கு, நான்கு மனைவிகள்; ஆனாலும், ராகுலைத் தவிர, எனக்கு மகன் இல்லை; 21 வயது மகள் உள்ளாள்; எத்தனை கோடி ரூபாய் வேண்டுமனாலும், உங்கள் காலடியில் கொட்ட, தயாராக இருக்கிறேன்; என் மகனை காப்பாற்றுங்க டாக்டர்...'

'இன்னும், ஏழெட்டு நாட்களில் ராகுலுக்கு மூளைச்சாவு நிகழ்ந்துவிடும்; அதன்பின், அவனை காப்பாற்றுவது, ஒரு சதவீதம் கூட சாத்தியமில்லை...'

கிறிஸ்டோபரின் அருகில், கை கட்டி நின்றிருந்தான், சந்தீப்.

'பாஸ்... ஒரு சின்ன யோசனை...'

'என்ன...'

'எனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவர், தமிழகத்துல உள்ளார்; அவர் பெயர், சித்தானந்த ஸ்வாமிகள்; அவர வரவழைச்சி ஆலோசிச்சா, பல உபாயங்கள் கூறுவார்...' தலையாட்டினார் கிறிஸ்டோபர்.

'உடனே அவரை வரவழை...'

நட்சத்திர ஓட்டல் சூட்!

சித்தானந்த ஸ்வாமிகள் குளித்து, பூஜை செய்து, ஜவ்வாது வாசனை அடித்தார்.

அறைக்கதவை தட்டியபடி, கிறிஸ்டோபரும், சந்தீப்பும் அறைக்குள் பிரவேசித்தனர்.

'என்னை ஆசிர்வதிங்க ஸ்வாமி...' கால்களில் விழுந்து, நமஸ்காரம் செய்தார், கிறிஸ்டோபர்.

'மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும், உன் மகனின் ஜாதகத்தைக் கொண்டா...'

நீட்டினார் கிறிஸ்டோபர்.

வாங்கி, பல கணக்குகள் போட்டார் ஸ்வாமி; சோழிகளை சுழற்றிப் போட்டார்; ஸ்வாமிஜியின் முகத்தில் இருள் படர்ந்தது.

'உன் மகனின் ஆயுள் முடிந்து விட்டது; இனி, உலகின் எந்த தெய்வத்தாலும், அவன காப்பாற்ற முடியாது; இன்னும், பத்தே நாட்களில், உன் மகன் இறந்து விட்டால், உன்னை நிரந்தரமாக ஜென்ம சனி பிடித்துக் கொள்ளும்; மிக விரைவில் சொத்துகளை எல்லாம் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து விடுவாய்...'

'ஸ்வாமிஜி... எதவாது பரிகாரம் உண்டா...' பதறினார், கிறிஸ்டோபர்.

'உன் மகன் பிறந்த அதே ஆண்டில், பிறந்த சிறுவன் அனிருத் என்பவன் சென்னையில் உள்ளான்; அவனது பெற்றோர் பெயர், ஈஸ்வரி - ஜோதிலட்சுமி. அனிருத் மிலேனிய ஆண்டில் பிறந்தவன்...

'சதய நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்கினத்தில் உதித்தவன்; அவனது கையில், சக்கர ரேகை உள்ளது; குரு மேடும், சுக்கிர மேடும் உச்சத்திலுள்ள, அபூர்வ குழந்தை; அவனை கடத்தி வந்து, உங்கள் மகனின் ஸ்தானத்தில் பொருத்தி விட்டால், மகனுக்கு மகன் கிடைப்பான்; உங்களின் பொருளாதார நிலை வானம் உடைக்கும்...'

'கடத்தி தான் வர வேண்டுமா... பெற்றோருக்கு பணம் கொடுத்து, மகனை, நமக்கு கொடுக்க சம்மதம் பெறலாமே...'

'பெற்றோர், குழந்தையை கொடுக்க, ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்கள்; அப்படியே சம்மதித்து, அனிருத்தை கொடுத்தால், அவனது ராசி உங்களுக்கு உதவாது...'

'கடத்தி வந்து அவனை சட்டப்படி தத்தெடுக்கலாமா...'

'தத்துக் கூடாது; அவன் உங்களது சொந்த மகனாகதான் சமூகத்தில் உலவப் போகிறான்; உங்கள் மகனின் புகைப்படத்தை கொடுங்கள்...'

கொடுத்தார் கிறிஸ்டோபர்.

ராகுலின் புகைப்படத்தையும், அனிருத்தின் புகைப்படத்தையும் உயர்த்தி பிடித்து ஒப்பிட்டார்.

'பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை; அனிருத்தை கடத்தி வந்த, சில நாட்களுக்கு, அவனை பிறர் கண்களில் படாமல் பாதுகாருங்கள்; அத்துடன், அனிருத்துக்கு ராகுலைப் போன்றே, ஒப்பனை செய்யுங்கள்...'

'சரி...'

'அத்துடன் நில்லாது, அனிருத்தின் பழைய ஞாபக சக்தியை மழுங்கடிக்கும் விதமாய், மருந்துகள் செலுத்துங்கள்...'

'நல்ல யோசனை...'

'அனிருத்தை, என்றைக்கு, எப்படி கடத்த வேண்டும் என்பதை, சென்னை திரும்பியவுடன் போனில் தெரிவிக்கிறேன்...'

'நல்லது ஸ்வாமிஜி...'

'என்னுடைய தட்சணை, பத்து லட்சத்தை, என் வங்கி கணக்கில் போட்டு விடுங்கள்; அனிருத் கடத்தலில் வரும் லாப, நஷ்டத்துக்கு நீங்களே பொறுப்பு...'

'சரி ஸ்வாமிஜி...'

'உன் மகன் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்கு, என்னை கூட்டிப் போ; அங்கு, சில பூஜைகளை நான் செய்ய வேண்டும்...'

ஸ்வாமிஜி, சென்னையிலிருந்து, கிறிஸ்டோபருக்கு தொலைபேசினார்; ஸ்வாமிஜிக்கும், கிறிஸ்டோபருக்கும் இடையே, மொழி பெயர்ப்பாளராக நின்றான், சந்தீப்.

'உனக்கு என் ஆசிர்வாதம்; அனிருத்தின் பெற்றோர், அனிருத்தை நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு, டிசம்பர் 25, 2004ல் கூட்டிச் செல்கின்றனர். இந்திய நாட்டின் ஜாதகத்தை பரிசீலித்து பார்த்தேன்; மறுநாள், கடற்கரையில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு நடக்க இருக்கிறது; அல்லோல கல்லோகத்தில் அனிருத்தை கடத்துங்கள்...'

'எந்த வாகனத்தை பயன்படுத்தட்டும்...'

'தரைவழி பயணம் சரிப்பட்டு வராது; ஹெலிகாப்டர் வைத்து கடத்துங்கள்; சொந்த ஹெலிகாப்டர் வேண்டாம்; வாடகைக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துங்கள்...'

'சரி...'

'கடத்தலின் போது, ஒரு துளி ரத்தமும் சிந்தக் கூடாது; பல்லி, இரை எடுப்பது, தவளை இரை எடுப்பது போல, அனிருத்தை கபளீகரம் செய்ய வேண்டும்...'

'பிரமாதமாக யோசனை கூறுகிறீர்; நீங்கள் சாமியாராக இருப்பதை விட, என்னிடம் பார்ட்னராக சேர்ந்து விடலாம்...'

'வீண் புகழ்ச்சி வேண்டாம்; அனிருத்தை கடத்தி வந்த பின், அவனை மனோதத்துவ நிபுணர் வைத்து, அவன் தான், ராகுல் கிறிஸ்டோபர் என, நம்ப வைக்கும் மன வசியம் நிகழ்த்தப்பட வேண்டும்...'

'செஞ்சிடுறேன் ஸ்வாமி...'

'அனிருத் கடத்தலுக்கு பின், நீ யாரோ, நான் யாரோ...' எக்காரணத்தைக் கொண்டும், என்னை தொடர்பு கொள்ள கூடாது...'

'உத்தரவு ஸ்வாமிஜி...'

கிறிஸ்டோபரின் ஆட்கள் கைக் கடிக்காரத்தை உன்னித்தனர்.

சுனாமி வர காத்திருந்தனர்.

ஆழிப்பேரலைகள், கடற்கரையை வாரி, சுருட்ட கிளம்பின.

அனிருத்தை, மயக்கப்படுத்தி, துாக்கி சென்று; காரில் ஏற்றினர்; ஒரு பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது கார்.

காத்திருந்த ஆழிப்பேரலைகளின் ஊழி தாண்டவத்தை, கண்ணார கண்டபடியே, பனாஜிக்கு பறந்தது ஹெலிகாப்டர்.

மகன் ராகுல் கிறிஸ்டோபருக்கு அருகில், அனிருத்தை படுக்க வைத்து, தாயத்தை கட்டி, சில மந்திரங்களை முணு முணுத்தார் ஸ்வாமி. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, ராகுல் மரித்தான்; மயக்கத்திலிருந்து எழுந்தான், அனிருத்.

அவனது நெற்றிப் பொட்டை தடவி, சில மந்திரங்களை ஓங்கி, உச்சரித்தார், ஸ்வாமிஜி.

விழித்தெழுந்த அனிருத்தை, 'மகனே...' என, விளித்தார் கிறிஸ்டோபர்.

- தொடரும்...

- ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us