PUBLISHED ON : ஏப் 13, 2018

நான், ஆறாம் வகுப்பு காலாண்டு தேர்வில், எல்லா பாடத்திலும், 'பெயில்!' வீட்டில், பெற்றோர் , அண்ணன் என்று, அனைவரிடமும் திட்டும், அடியும் வாங்கினேன். மறுநாள், பள்ளிக்கு செல்லும் போது, 'இனி வீடு திரும்பவே கூடாது' என்ற எண்ணத்தோடும், கனத்த இதயத்தோடும் சென்றேன்.
அன்று, வகுப்பாசிரியை ஜெயா, என்னை தனியாக அழைத்து பேசிய விஷயங்கள், என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இன்றும் அவர் பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது.
'நிர்மலா... வகுப்பில் எல்லா பாடத்திலும் நீ மட்டும் தான், பெயில்; இதற்காக, உன்னை, நான் திட்ட மாட்டேன்; ஏற்கனவே, வீட்டில் அனைவரிடமும் திட்டு வாங்கியிருப்பாய்; உன் மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும்.
'நீ, 'பெயில்' ஆனதற்கு காரணங்கள் பல இருக்கலாம்; எதுவாக இருந்தாலும், அந்த காரணத்தை சரி செய்து, 'பாஸ்' ஆக வேண்டியது உன் கடமை. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்...இந்த மண்ணில் பிறந்த நாம், ஏதாவது ஒன்றை சாதித்து விட்டு தான் செல்ல வேண்டும்.
'நம்மை சார்ந்தவர்களுக்கு நற்பெயர் பெற்று தருவதை, குறிக்கோளாக கொள்ள வேண்டும். இனி, உனக்கு பாட சம்மந்தமாக எந்த சந்தேகம் வந்தாலும், என்னிடம் கேள். அடுத்தமுறை, வகுப்பிலேயே முதல் மாணவியாக, உன்னை பார்க்க வேண்டும். என் ஆசையை நிறைவேற்றுவாயா... சத்தியம் செய்து கொடு...' என்று, கையை நீட்டிய போது, அவர் கையை பற்றி, 'ஓ...' என கதறினேன்.
வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த, என் மன பாரம், அவர் கைகளில், கண்ணீராய் கரைந்தது.
பெற்றோரின் நடவடிக்கையால், வீட்டை விட்டோ, உலகை விட்டோ ஓட நினைத்த நான், டீச்சரின் நடவடிக்கையால், வாழ்க்கையில் முன்னேற்றத்தை பிடிக்க, ஓட ஆரம்பித்தேன். ஆறாம் வகுப்பு அரையாண்டு தேர்வில், வகுப்பில் முதல் மாணவியாக வந்தேன். என் மீது நம்பிக்கை வைத்த, என் வகுப்பாசிரியைக்காக, இரவு, பகலாக படித்தேன்.
படிப்பு மட்டும் இல்லாமல், பேச்சு போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரை போட்டி என்று, பரிசுகளை அள்ளிக் குவித்தேன்.
இன்று, நான் ஒரு பள்ளி ஆசிரியை. என் வகுப்பு மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களை பாராட்டுவேன்.
குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியாக அழைத்து, ஊக்கமாக பேசி, அவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணருவேன்; என் வகுப்பில், 'பெயில்' ஆகக் கூடிய மாணவர்களே இல்லை.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவர்; ஆனால், எனக்கோ, என் உயிரை திருப்பிக் கொடுத்த என் குருவே தெய்வம்!
- பி.நிர்மலா, சென்னை.
