PUBLISHED ON : செப் 18, 2021

நான்காம் வகுப்பு படித்து வந்தான் ராமு. ஒரு நாள், பள்ளி முடிந்து, வீடு திரும்பிய போது, கீழே ஒரு மணிபர்ஸ் கிடந்தது. ஆர்வத்தோடு எடுத்து பார்த்தான்.
அதில், ரூபாய் நோட்டுகள், புகைப்பட அடையாள அட்டை மற்றும் ஒரு ஏ.டி.எம்., அட்டை இருந்தன. அதைக் கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தது மனம்.
அந்த பர்ஸை, வீட்டிற்கு எடுத்து சென்றான்.
குடும்பத்தில் யாரிடமும், இதுபற்றி தெரிவிக்கவில்லை. பர்ஸில் இருந்த பணத்தையே மனம் சுற்றியது. அந்த சிந்தனையை மாற்றமுடியாமல், 'என்ன செய்யலாம்' என, யோசித்து கொண்டிருந்தான்.
தினமும் அந்த மணிபர்ஸை எடுத்து, பணத்தை பார்த்து, மீண்டும் புத்தகப்பையில் மறைத்து விடுவான் ராமு.
அன்று வெள்ளிக்கிழமை -
மாலை 6:00 மணிக்கு, ராமுவின் அப்பா வேலை முடித்து திரும்பினார். வழக்கம் போல் மகிழ்ச்சியாக இல்லை; மிகவும் சோர்வாக காணப்பட்டார். அதற்கான காரணத்தை விசாரித்தார் அம்மா.
''ஒன்றுமில்லை; இன்று மதியம், என் மணிபர்ஸை, யாரோ பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க; அதனுள், 500 ரூபாய் பணம் வெச்சிருந்தேன்...'' என சோகமாக கூறினார். ''இதுக்காக கவலைப்பட்டு உடம்பை கெடுத்துகாதீங்க; போனா போகுது... பார்த்துக்கலாம்...'' என ஆறுதல் கூறினார் அம்மா.
அதை, அவரால் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மறுநாளும் கவலையுடன் காணப்பட்டார். யாருடனும் சகஜமாக பேசவில்லை. யோசித்து ஒரு முடிவு செய்தான் ராமு.
கண்டெடுத்த மணிபர்ஸில் இருந்த பணத்தில், 500 ரூபாயை அப்பாவிடம் நீட்டியபடி, ''கவலைப்படாதீங்க அப்பா...'' என்றான்.
இதை சற்றும் எதிர்ப்பாராத அப்பா அதிர்ச்சியடைந்தார்.
உடனே, ''உனக்கு ஏது, இந்த பணம்...'' என கேட்டார்.
மணிபர்ஸ் கிடைத்த விஷயத்தை கூறினான் ராமு.
''ஏன்டா... நீ செய்றது நல்லா இருக்கா... அந்த பர்ஸை, தொலைத்தவர் எவ்வளவு கவலையுடன் இருப்பார்; நான் பர்ஸை தொலைச்சதுக்காக, அடுத்தவர் பணத்தை தந்தால் சரியாகி விடுமா...
''அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படலாமா... அது தப்பில்லையா... 500 ரூபாய் பணத்தை தொலைச்ச நானே கவலைப்படுறேன் என்றால், 5000 ரூபாயை தொலைச்சவர் எவ்வளவு கவலைப்படுவாரு...'' என்றார்.
தவறை உணர்ந்தான் ராமு.
''மன்னிச்சுடுங்க அப்பா... பர்ஸை, உரியவரிடம் ஒப்படைச்சுடுங்க...'' என்றான்.
பர்ஸில் இருந்த அடையாள அட்டையில் குறிப்பிட்டிருந்த விலாசத்தை தேடி கண்டுபிடித்து, ராமுவுடன் அங்கு சென்றார் அப்பா.
பர்ஸை ஒப்படைத்தார்.
அது கிடைத்ததால் மகிழ்ந்தவர், ''ரொம்ப நன்றிங்க...'' என நெகிழ்ந்தார்.
ராமுவை கட்டியணைத்து, ''எப்போதும் நேர்மையா இருக்கணும்...'' என வாழ்த்தினார். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
''நேர்மையாகவே இருப்பேன்...''
சொல்லால் அல்ல செயலால் சபதம் ஏற்றான் ராமு.
தங்கங்களே... பிறர் பொருளுக்கு எப்போதும் ஆசைப்படக்கூடாது.
- ஆர்.வி.பதி

