
அன்புள்ள பிளாரன்ஸ்...
என் வயது, 36; இல்லத்தரசியாக இருக்கிறேன். இரண்டு மகன்கள்; மூத்தவன், 9ம் வகுப்பு படிக்கிறான். இரண்டாமவனுக்கு வயது, 11; 6ம் வகுப்பு படிக்கிறான்.
பன்னாட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார் என் கணவர்; எப்போதுமே பண சிந்தனையில் இருப்பார். வலக்கையில், ஆறாவது விரலாக எப்போதுமே சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்.
அவர் புகைப்பதை மூத்த மகன் கூர்ந்து கவனிப்பான்; சிகரெட் பிடிப்பது போல, வாயை குவிந்து புகை விடுவது போல் நடிப்பான்; காகிதத்தை சுருட்டி, சிகரெட் போல் வாயில் வைத்திருப்பான்.
ஒரு நாள், என் கணவர் பிடித்து போட்ட சிகரெட் துண்டை, வாயில் வைத்து இழுத்தான் மகன். பதறிப்போனேன். மிகவும் ஆத்திரத்தில் அதைப் பிடுங்கி எறிந்தேன்.
நிதானமாக, 'மகன்கள் முன் சிகரெட் பிடிக்காதீர்...' என்றால், கேட்க மாட்டேன் என்கிறார் கணவர். அவரை பார்த்து மகன்கள் இருவரும் சிகரெட் பிடிக்க கற்று விடுவரோ என அஞ்சுகிறேன்; வருமுன் காக்க வழி சொல்லுங்கள்!
அன்புள்ள அம்மா...
புகைப்பிடிப்பது பரம்பரை பழக்கம் என்கிறது விஞ்ஞானம்! உலகில், சீனர்களே அதிகம் புகை பிடிக்கின்றனர். பெற்றோரிடமிருந்து, நல்லதையும், கெட்டதையும் கற்றுக் கொள்கின்றனர் குழந்தைகள். புகைப்பிடிப்போரில், 90 சதவீதம் பேர், சிறு வயதில் கற்றுக் கொண்டவர்கள்தான் என ஓர் ஆய்வு கூறுகிறது.
ஒவ்வொரு நாளும், அமெரிக்காவில், 3,200 சிறுவர்கள், புதிதாக சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
வாலிபர்கள் போல் கற்பனை செய்யவும், சினிமா நடிகர்கள் போல் தோன்றவும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை சிறுவர்கள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆண்களே அதிகம் புகை பிடிக்கின்றனர்.
உலகில் புகைப் பிடிக்கும் பழக்கத்தால், ஆண்களில், 16.7 சதவீதமும், பெண்களில், 13.6 சதவீதமும், புற்றுநோய், இதயநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்.
உங்கள் மகன்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் தொற்றாமலிருக்க, கணவர் அந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்; அறவே விடுவதே நல்லது. இது பற்றி, தொடர்ந்து பேசி மூளை சலவை செய்யவும்!
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வழிமுறைகளில் சில...
* சிப்லா நிகோடெக்ஸ் என்ற 'பபிள்கம்' தொடர்ந்து, 12 வாரம் உபயோகித்தால், புகைப்பிடிப்பதை நிறுத்திவிடலாம்
* புகை பிடிக்கும் ஆசை வரும் போது, குளிர்நீரை குடிக்கலாம்
* போரடிக்கும் நேரங்களில், பாடலாம், விசிலடிக்கலாம், படம் பார்க்கலாம்
* ஷாஜஹான் என்பவர் எழுதியுள்ள, 'ஆறாவது விரல்' என்ற நுாலை வாசிக்கலாம். இதில், புகைப்பதை நிறுத்தும் வழிமுறைகள், அனுபவப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது
* புத்தகங்கள் படிப்பது, நடைபயிற்சி செய்வது, இரு சக்கர வாகனம் ஓட்டுவது, சூரிய உதயம், அஸ்தமனத்தை ரசிப்பது, கண்ணாடி முன் நின்று சிரிப்பது போன்ற செயல்களையும் செய்யலாம். அப்படி செய்வதால் உடலில், 'என்டார்பின்' என்ற திரவம் அதிகமாக சுரக்கும். இது தரும் உற்சாகத்தால், சிகரெட் மீதான விருப்பம் குறையும்.
உங்கள் கணவரை தனிமையில் இருக்க விடக் கூடாது. காரை சுத்தம் செய்வது, கார் ஷெட், படுக்கையறை சுத்தம் செய்வது, தோட்டம் போடுவது, வீட்டு துணிமணிகளை உலர் சலவை செய்வது, வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்ய ஊக்குவிக்கலாம்.
ஒரு நாளைக்கு, சிகரெட் பிடிக்காமல் இருந்தால், குறைந்தபட்ச சேமிப்பு, 200 ரூபாய் என்றால், ஆண்டு சேமிப்பைக் கணக்கிட்டு சொல்லவும்; அந்த பணத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழலாம்.
எப்போதும் வீட்டில் சிகரெட் வந்துவிடக் கூடாது; நிகோட்டின் இல்லாத சுகாதாரமான வீடாக வேண்டும்; புகைபிடிக்கும் பழக்கம் எதிரி என, மகன்களுக்கு அறிவுரை கூறவும்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

