
ஜன., 26 - இந்திய குடியரசு தினம்
உலக அளவில் பரப்பளவில் இந்தியா, 7ம் இடத்தை பெற்றுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உலகில், 2ம் இடத்தில் உள்ளது. சிந்து சமவெளி, ஹரப்பா - மொகஞ்சதாரோ போன்ற பழமையான நாகரிகங்கள் இங்கு தோன்றியுள்ளன. மக்களாட்சி தத்துவத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகிழ்கிறது நம் நாடு.
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த இந்தியா, ஆகஸ்ட் 15, 1947 அன்று விடுதலை பெற்றது. அதை நினைவில் பதிக்கும் விதமாக சுதந்திரதினம் கொண்டாடுகிறோம். குடியரசு மலர்ந்த நாளாக, ஜனவரி 26 கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும், மூவர்ண கொடியை நெஞ்சில் ஏந்தி மகிழ்கிறோம். மக்களாட்சியின் சிறப்புகளை உலகுக்கு உரைக்கிறோம்.
குடியரசு தினத்தன்று...
* நாட்டின் பலத்தை நிரூபிக்கும் விதமாக முப்படை அணிவகுப்பு நடத்தப்படுகிறது
* அல்லும் பகலும் நாட்டை காக்கும் வீரர்களின் சாகசம் நடைபெறுகிறது
* ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்துகின்றன
* சிறந்த சேவை புரிந்தோருக்கு விருது, பாராட்டு, பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இப்படி மகிழும் குடியரசு தினம் மலர்ந்த விதம் பற்றி பார்ப்போம்...
தற்போது, பாகிஸ்தானில் உள்ளது லாகூர். நாட்டின் விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் மகாசபை அகில இந்திய மாநாடு, டிசம்பர், 1929-ல் இங்கு கூடியது. அதில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
'பூரண சுயராஜியமே உடனடி லட்சியம்' என்பதே அந்த தீர்மானம். அதை அகிம்சை வழியில் பரப்ப முடிவு செய்தனர் தலைவர்கள். அதற்கு உரிய வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பை, காந்திஜிக்கு வழங்கியது காங்கிரஸ் மகாசபை.
இதை கவனமாக மனதில் கொண்டார் காந்திஜி. நாட்டின் அப்போதைய நிலையை அலசி ஆராய்ந்து, சில உண்மைகளை கண்டறிந்தார்.
அவை...
* நாடு முழுதும் பொருளாதார மந்தம் நிலவியது
* வறுமையில் வாடிய மக்கள் கொந்தளிப்புடன் இருந்தனர்
* தேசியத்தை அடையும் ஆர்வத்தால் தீவிரவாதக் குழுக்கள் தலை துாக்கியிருந்தன.
இந்த சூழ்நிலையில் சட்ட மறுப்பு போன்று தீவிர போராட்டம் நடத்தினால், வன்முறை அதிகரிக்கும் என உணர்ந்தார் காந்திஜி. மக்கள் எழுச்சியை அகிம்சை பாதையில் திருப்பி இயக்கம் நடத்த உறுதி கொண்டார்.
அதன் முதற்கட்டமாக, நாடு முழுதும் ஜனவரி 26-, 1930ம் நாளை அமைதி வழியில், சுதந்திர தினமாக கொண்டாட வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இந்திய சுதந்திர பிரகடன தினமாக கடைபிடித்தது காங்கிரஸ் மகாசபை.
நாடு முழுதும் கூட்டம் நடத்தி, காந்திஜி வழங்கிய சுதந்திர பிரகடன தீர்மானத்தை எடுத்துரைத்தனர் தலைவர்கள். அப்போது ஒரு உறுதி மொழியை ஏற்றனர்.
அதில், 'தாய் நாட்டிற்கு நான்கு விதங்களில் கேடு விளைவித்து வரும் ஆங்கிலேயர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும், இறைவனுக்கும் செய்யும் துரோகம்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில், பொருளாதாரம், அரசியல், கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தில் ஏற்பட்டிருந்த சீரழிவை சுட்டிக்காட்டியது அந்த உறுதிமொழி.
சுதந்திரம் பெற்றவுடன், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்த குழு கடுமையாக முயன்று, அரசியல் அமைப்பு சட்ட வரைவை சமர்ப்பித்தது.
அது பற்றி நீண்ட விவாதம் நடத்தினர் நம் தலைவர்கள். பின், ஒப்புதல் வழங்கியது நாடாளுமன்றம்.
அதைத் தொடர்ந்து ஜனவரி 26, 1950ம் நாள் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திரம் பெறுவதற்கு, 17 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26ம் நாள் சுதந்திர பிரகடனத்தை அறிவித்திருந்தார் காந்திஜி. அந்த நாளை நினைவூட்டி கவுரவிக்கும் வகையில் அதே தேதியில், குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளே... இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதித்து அதன்படி நடப்போம். மக்களாட்சியை மேலும் மாண்புடன் உயர்த்த உறுதி ஏற்போம்!
- ம.வ.நிகிதா