PUBLISHED ON : ஏப் 13, 2018

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு... ஒன்பதாம் வகுப்பு மாணவன் எழுதிக்கொண்டது. இந்தப் பகுதியின் மூலம், பல விஷயங்களை கற்று வருகிறேன்.
எனக்கு, நிறைய நண்பர்கள் உண்டு; அவர்களுக்கும் சிறுவர் மலர் இதழை அறிமுகப்படுத்தி வருகிறேன். என்னோட பிரச்னை என்னன்னா... நான் பேசினாலே, 'கப்பு' அடிக்குது ஆன்டி. நண்பர்கள் ரொம்ப கேலி பண்றாங்க. எனக்கே, சில நேரங்களில் தெரியுது; நானும், ரெண்டு வேளை, 'பிரஷ்' பண்றேன்... அப்பவும், 'கப்பு' தாங்கல...
ரொம்ப வெட்கமா இருக்கு ஆன்டி... என் தங்கச்சி, 'போடா... 'மிஸ்டர் கப்பு'ன்னு சொல்லி, கேவலப்படுத்துறா... என் வாய் மணக்க, வழி சொல்லுங்க ப்ளீஸ்...
ஹா... ஹா... இந்த காலத்து பசங்களுக்கு, கிண்டல் பண்ண சொல்லித் தர வேண்டியதேயில்ல... கவலைப்படாதே, இன்னும் கொஞ்ச நாள்ல, 'மிஸ்டர் நைஸ் ஸ்மெல்'னு சொல்லப்போறா...
நிறைய பேருக்கு, இந்த பிரச்னை இருக்கு மகனே... நான் சொல்லித் தரும் வழிகளை, தினமும் செய்து வந்தால் போதும்... உன் வாய் நறுமணம் வீசும்.
வாய் நாற்றத்துக்கு முக்கியமான காரணங்கள், சொத்தை பல், உணவு பழக்க வழக்கம், ஈறு நோய், கல்லீரல் பிரச்னை; இவை இருந்தால், வாய் நாறும்... வெங்காயம், பூண்டு சேர்த்த உணவை உட்கொண்ட பின், 'மவுத் வாஷ்' பண்ணணும்.
* காலையில் எழுந்தவுடன், வாயில் நல்லெண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இப்படி, இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், வாய் நாற்றம் போகும்; இது, நம் முன்னோர் செய்து வந்த முறை... எவ்வளவு புத்திசாலிகள் பாரு.
* தினமும், எலுமிச்சை சாறில், உப்பு கலந்து, வாய் கொப்பளி
*புதினா சாறு, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில், வாய் கொப்பளித்து வந்தாலும், துர் நாற்றம் நீங்கும்
* வெது வெதுப்பான நீரில், இரண்டு எலுமிச்சை பழ சாறு, பட்டை பொடி - 1/2 ஸ்பூன், சோடா உப்பு - 1/2 ஸ்பூன், தேன் - 1 ஸ்பூன் கலந்து, வாய் கொப்பளித்து வரலாம்
* இவற்றை தொடர்ந்து செய்து வா. அத்துடன் தினமும், வாயில் ஏலக்காயை போட்டுக்கொள்
* கிராம்பை மென்று, பல்லில் அடக்கிக் கொள்ளலாம். கொத்துமல்லி இலைகளை சாப்பிட்டு வந்தாலும் வாய் நாற்றம் போகும்
* இரண்டு வேளை, 'பிரஷ்' பண்ணு; நாக்கின் மீது உள்ள மாவு படலத்தை சுத்தம் செய்து வந்தாலே, துர்நாற்றம் நீங்கி, வாய் மணக்கும்.
* முக்கியமாக, பல் சொத்தை ஏற்படாமல் பாத்துக்கணும். சாப்பிட்டவுடன், ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளித்து, 'மவுத் வாஷ்' பயன்படுத்தி வந்தால், பற்களின் இடையே தங்கும் உணவுப் பொருட்கள் போய் விடுவதால், பல் சொத்தை ஏற்படாது.
* தண்ணீர் நிறைய குடி; வாய் வறண்டிருந்தாலும் நாற்றம் ஏற்படும். அத்துடன், வயிற்றில் பிரச்னை ஏதும் இருந்தால், மருத்துவரிடம் காண்பித்து, முறையான சிகிச்சை செய்து கொண்டால், வாய் நாற்றமே வராது!
விரைவில், உன், 'வாய்' மணக்க வாழ்த்துகள்!
ஹ... ஹா...
- ஜெனிபர் பிரேம்!
