PUBLISHED ON : செப் 14, 2018

அன்பு ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 1 மாணவி எழுதுவது. நன்றாக படிப்பேன்: அழகாகவும் இருப்பேன்.
'இளஸ் மனஸ்' பகுதி, எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு. தோழிகளுடன், 'என்ஜாய்' பண்ணி படிப்பேன்; சிறுவர்மலர் புத்தகத்திற்காக, 'ஸ்நாக்ஸ்' லஞ்சமாக கொடுத்து, வாங்கி படிப்பர்.
ஆன்டி... என்னோட பிரச்னையை கேட்டு சிரிக்காதீங்க... மீன் வாங்க சொல்லிக் கொடுத்தீங்க அல்லவா... அதனால், என் தோழிகள் தான் கூறினர், 'வேண்டுமானால் ஜெனி ஆன்டி கிட்ட கேட்டுப்பாறேன்...' என்று. என்னோட பிரச்னைக்கும் பதில் சொல்லி, தோழிகள் மத்தியில், என் கவுரவத்தை காப்பாத்துவீங்கன்னு நெனைக்கிறேன்.
எனக்கு, விரல்களில், நீளமாக நகம் வைத்து, கலர் கலரா, 'நெயில் பாலிஷ்' போட ஆசை. ஆனா, எனக்கு நகம் வளரவே மாட்டுது ஆன்டி. உடைந்து உடைந்து போயிடுது... என்னுடைய தோழிகள், நீள நகங்களில், கலர் கலரா, 'நெயில் பாலிஷ்' போட்டு, வித விதமா, 'நெயில் ஆர்ட்' பண்ணி, 'சீன்' விடும் போது, எனக்கும் ஆசையா இருக்கு.
நான், நகத்தை கடித்து விடுவேன். இப்போது தான், அந்த பழக்கத்தை கஷ்டப்பட்டு, 'கன்ட்ரோல்' பண்ணி, நகம் வளர்க்க ஆரம்பித்துள்ளேன். அப்படியும், என் ஆசை நிறைவேறவில்லை. நகம் நன்கு வளர என்ன செய்யணும் என்று ஆலோசனை சொல்லுங்க ஆன்டி...
தயவு செய்து, என் கடிதத்தை கிழித்து போட்டுடாதீங்க. இந்த காலத்து, 'டீன் ஏஜ்ஜர்ஸ்'க்கு இது எவ்வளவு முக்கியமான கவலை என்பதை, உங்களால் மட்டுமே புரிஞ்சிக்க முடியும் ஆன்டி ப்ளீஸ்...
ஹா... ஹா... ஹா... அன்பு மகளே... நாட்டுல இது எவ்வளவு முக்கியமான பிரச்னை. இதுக்கு பதில் சொல்லாம இருக்க முடியுமா என்ன... சொல்றேன்...
நகம் என்பது, நம்முடைய எலும்புகளின் அமைப்பைப் பொறுத்தது. எலும்புகள், நீளமாக இருந்தால், நகங்களும் நீளமாக இருக்கும்; எலும்புகள், அகலமாக இருந்தால், நகங்களும் அகலமாக இருக்கும்.
விரல் நகம், வாரத்திற்கு, ௧ மில்லி மீட்டர் தான் வளரும். முழு நகமும் வளர, ஆறு மாதம் ஆகும்; கால் நகம், இன்னும் தாமதமாக வளரும்.
கால்ஷியம், புரோட்டின், வைட்டமின் சத்துகள் குறைபாடுதான், நகம் சரியாக வளராமல் இருப்பதன் காரணம். நகத்தை கடிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, பாத்திரங்களின் மூடிகளை திறக்க, நகங்களை பயன்படுத்துவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இதனால், நகங்களின் ஆரோக்கியம் கெட்டுப் போகும்.
நகங்களின் வளர்ச்சிக்கு, பால், தயிர், முட்டை, பச்சை காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், காட்லிவர் ஆயிலில் நக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. நிறைய ஜெல்லி சாப்பிடலாம்; ஜெலாட்டினில் நகங்கள் மூழ்கும்படி, இரண்டு நிமிடம் வைப்பது, பாலில் நகங்கள் மூழ்கும்படி வைத்திருப்பது நல்ல வளர்ச்சி கொடுக்கும்.
சோப்பு கலந்த தண்ணீரில், அடிக்கடி நகத்தை சுத்தம் செய்வது நல்லது. தொடர்ந்து, 'நெயில் பாலிஷ்' போடுபவர்கள் சில நாட்கள் அதை போடாமல் விடுவது நகங்களுக்கு நல்லது. தரமான, 'நெயில் பாலிஷ்'களையே பயன்படுத்த வேண்டும்;
இவற்றை செய்து வந்தால், நகம் நன்றாக வளரும். அதன்பின், அழகா வெட்டி, 'ஷேப்' பண்ணி, 'நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட்' பண்ணி, நீயும், தோழிகளைப் போல், 'சீன்' விடு. ஓகே..வா கண்ணா!
என்றும் அன்புடன், ஜெனிபர் பிரேம்.
