தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (47)

இளஸ்... மனஸ்... (47)

இளஸ்... மனஸ்... (47)


PUBLISHED ON : ஜூன் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு அம்மாவுக்கு...

கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் படிக்கும் மாணவன் நான். குடும்பத்தில் மூத்தவன். தம்பி, தங்கை இருக்கின்றனர். அப்பா, கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது சம்பாத்தியத்தில் தான் குடும்பம் இயங்குகிறது.

என் படிப்பு நிறைவடையப் போகிறது; அடுத்தது என்ன செய்வது என்று தெரியவில்லை. மேற்படிப்பிற்கு போதுமான மதிப்பெண்ணும் இல்லை; ஆங்கிலமும் சரியாக வராது.

சொந்த திறமை ஏதும் கிடையாது; யாருடனும் அதிகம் பேச மாட்டேன். அமைதியாகவே இருப்பேன். அரசு வேலையில் சுத்தமாக ஆர்வம் இல்லை.

படிப்பு முடியப் போவதால் வாழ்க்கையையே இழந்தது போல் தவிக்கிறேன். ஒரு மகனாக எண்ணி, நல்ல ஆலோசனை சொல்லுங்கள்!

அன்பு மகனே...

ஓடும் பாம்பை மிதிக்கும் வயதில் இருக்கும் நீ, விரக்தியாக பேசலாமா... அதுவும், குடும்பத்தில், மூத்த பிள்ளை நீ. உன்னை நம்பித் தானே, பெற்றோரும், சகோதர, சகோதரிகளும் இருப்பர்.

அவர்களுக்காக இல்லாவிட்டாலும், உனக்கான வாழ்க்கைப் பாதையை நீ தானே தீர்மானிக்க வேண்டும். ஏதோ, கல்லுாரி படிப்பு முடிந்ததும், வாழ்க்கையே முடிந்து விட்டது போல அல்லவா நினைத்து எழுதியிருக்கிறாய்.

படிப்பை முடிப்பது, ஒரு கட்டத்தில் இருந்து, அடுத்த கட்டத்திற்கு மாறும் நிலை மட்டுமே. வாழ்க்கையை எதிர் கொள்ள தன்னம்பிக்கை தருவது தான் கல்வி. மனிதராக பிறந்து விட்டால், இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என, அனைத்தையும் எதிர் கொண்டாக வேண்டும்.

எந்த பொறுப்பும் இல்லாத, மகிழ்ச்சியான கல்லுாரி வாழ்க்கை, ஆயுள் வரை தொடருமா என்ன... எத்தனையோ சவால்களை சந்திக்க வேண்டியது இனிதானே!

தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்; எதையும் சாதிக்கலாம்; வெற்றிப்படிகளில் சுலபமாக ஏறலாம்.

பல மொழிகள் தெரிந்திருந்தும், தன்னம்பிக்கை இல்லாவிட்டால், எந்த பயனும் இல்லை. தமிழ்வழியில் படித்த, அப்துல் கலாம், அணு விஞ்ஞானியாக உயர்ந்து, பின்னாளில், இந்திய குடியரசு தலைவர் பதவியில் அமரவில்லையா... விஞ்ஞானியாக உயர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, 'சந்திரயான்' திட்டத்தை செயல்படுத்தி, நாட்டிற்கு பெருமை சேர்க்கவில்லையா...

'என்னால் முடியாது' என்ற நினைப்பை அடியோடு அகற்றி விடு.

'முடியாதது எதுவும் இல்லை' என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்.

'முயற்சி திருவினையாக்கும்' என்பது முதுமொழி; முயற்சித்தபடியே இரு.

உன்னிடம் திறமை எதுவும் இல்லை என்கிறாய்; அது தவறான கணிப்பு. ஒவ்வொருவரிடமும், ஏதேனும் திறமை ஒளிந்து கிடக்கும். அதை கண்டுபிடித்து விட்டால் முன்னேறி விடலாம்.

குடும்ப நிலை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாவிட்டால் என்ன... கவலையை விடு; கிடைத்த வேலையில் சேர். பொருளாதார சுமை குறைய வழி ஏற்படும்.

அத்துடன் நின்று விடாதே... தொலைதுாரக் கல்வி முறையில், மேற்படிப்பு படிக்க முயற்சி செய்; அது, கூடுதல் மதிப்பையும், மேம்பாட்டையும் தரும்.

மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுது; வங்கிப் பணியாளர் தேர்வுகளில் பங்கு பெறு; முயற்சி இருந்தால் போதும், முடியாதது எதுவுமில்லை.

இந்த வயதில் இல்லாமல், எப்போது முயற்சிக்கப் போகிறாய்; எதிரே இருட்டு என அஞ்சிக் கொண்டிருந்தால், ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். துணிந்து செல்லச் செல்லத் தான், இருள் விலகி ஒளி தெரியும்; பாதை புரியும்!

சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் மகனே.

- இனிய வாழ்த்துக்களுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us