தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (61)

இளஸ்... மனஸ்... (61)

இளஸ்... மனஸ்... (61)


PUBLISHED ON : செப் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்சுக்கு...

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் நான்; மகளுக்கு, 12 வயதாகிறது. 7ம் வகுப்பு படிக்கிறாள்; இரண்டு ஆண்டுகளாக வினோதமாக நடந்து கொள்கிறாள். நேரங்கடந்து வீடு திரும்புகிறாள்; கேட்டால், 'தோழியுடன் விளையாடி வரேன்...' என்கிறாள்.

அவள் குறிப்பிடும் தோழியரை ஒரு முறை கூட பார்த்ததில்லை; விசாரித்தால், பதில் சொல்லாமல் மழுப்புகிறாள்; பெரும் சந்தேகமாக இருக்கிறது.

'மகளின் விளையாட்டு தோழியர் யார்' என்ற கேள்வி மனதை குடைகிறது. மகளின் தோழியர் அடுத்த கிரகத்து வாசிகளா... ஆவிகளா... வறுமையில் வாடும் ஏழைகளா... எதையும் புரிந்து கொள்ள முடியாமல் வாடுகிறேன். இந்த புதிரை விடுவிக்க ஏதாவது வழியிருந்தால் சொல் பிளாரான்ஸ்.

ஐயத்தில் தவிக்கும் அம்மா...

மகள், 'காமிக்ஸ்' புத்தகங்கள் அதிகம் படிப்பாள் என நம்புகிறேன்; அவளுக்கு, கதை, கவிதை எழுதும் படைப்புத்திறன் அதிகமாக உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால், விளையாட உண்மை தோழியர் கிடைப்பதில்லை. அதனால், கற்பனையில் தோழியரை உருவாக்கி விளையாடுவதாகப்படுகிறது.

மகளிடம், 'உன் தோழியர் எப்படி இருப்பர்... கொஞ்சம் வர்ணியேன்...' என அன்புடன் கேட்டுப்பாருங்கள். அவள், 'உருவமா முக்கியம்; குணம் தான் முக்கியம்...' என்று பதில் கூறுவாள்.

பொதுவாக, மூன்று முதல், ஐந்து வயதுக்குள் கற்பனையாக தோழர், தோழியரை உருவாக்கி விளையாட ஆரம்பித்து விடுகின்றனர் குழந்தைகள்.

அது பற்றிய விவரம்:

* உலகில், 65 சதவீத குழந்தைகளுக்கு கற்பனையாக தோழர், தோழியர் உண்டு

* இப்படி உருவாக்கி விளையாடும் குழந்தைக்கு, மன ரீதியாக பிரச்னைகள் இருக்கக் கூடும்

* ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், கற்பனை தோழர்களுடன் விளையாடுவர்.

மகளின் விளையாட்டு தோழியர், தனித்தன்மை வாய்ந்த கற்பனையாக இருப்பர். அவளுக்கு தனிமையை போக்குவதே ஒரே குறிக்கோளாக இருக்கும். குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தை இருந்தால், கற்பனை தோழமையுடன் விளையாடுவர். குடும்பத்தில் முதலில் பிறக்கும் குழந்தையும் இதே மனநிலையை பெற்றிருக்கும்.

ஒரு பொருள் தொலைந்து விட்டாலோ, உடைந்து விட்டாலோ, கற்பனை தோழர், தோழியர் மீது பழி போடுவர் குழந்தைகள். இது போன்றவர்கள், பிறர் மனதை கணிக்கும் வல்லமை பெற்றிருப்பர். தங்களை புரிந்து கொண்டிருப்பர். மனதில் இருப்பதை எளிதில் வெளிபடுத்த மாட்டார்கள்.

சொந்தமாய் கதை புனையும் அளவு, கற்பனை திறன் அதிகம் இருக்கும். பிறருடன் ஒத்துபோகும் குணாதிசயம் அதிகம் இருக்கும்.

இன்னொரு விஷயம்... பெரியவர்களுக்கும், கற்பனை தோழர், தோழியர் உண்டு; எழுத்தாளர்களுக்குத்தான் அதிகம். கதையின் கதாபாத்திரங்களாக மாறிவிடுவர்.

மகளின் கற்பனை தோழியரை அங்கீகரிக்கவும்; விளையாடிய கதைகளை கூறும் போது, சுவாரசியம் குன்றாமல் கேட்கவும். இன்னும் சில ஆண்டுகளில், கற்பனை தோழியர் சகவாசத்தை மறந்து விடுவாள். வாலிப வயது அடையும் போது, ஹார்மோன் மாற்றம் நிகழும். அப்போது, கவனம் வேறு பக்கம் தாவி விடும்.

மகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும்; வகுப்பிலோ, அக்கம் பக்கத்திலோ தோழியருடன் பழகி விளையாட வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்யவும்.

மகள் படிக்கும் பள்ளியிலும், விளையாட்டு தோழியரை ஏற்படுத்திக் கொடுக்கவும்; மகளுடன் நெருங்கி பழகி, நல்ல அறிவுரைகள் கொடுக்கவும்! தேவைப்பட்டால் நல்ல மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம்.

- பிராத்தனைகளுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us