
அன்புள்ள ஜெனி ஆன்டி... என் பெயர் XXX நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். போன மாதம் வரை என் வாழ்க்கை இன்பமோ இன்பம். வசதியான பெற்றோருக்கு ஒரே மகன்; நன்கு படிப்பேன். கேட்டதெல்லாம் கிடைக்கும். என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தேன். எங்களது தூரத்து சொந்தமான மாமாவை சந்திக்கும் வரை.
நான் ஆதரவற்றோர் ஆசிரமத்தில், நான்கு வாரக்குழந்தையாக இருக்கும்போது, என் பெற்றோர் என்னை தத்து எடுத்தனர், என்று அவர் சொன்னார். அதிர்ந்து போனேன். பெற்றோரிடம் மீண்டும், மீண்டும் கேட்ட பிறகே உண்மையை ஒத்துக் கொண்டனர்; கதறி அழுதனர். ஆனால், என்னால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.
இந்த உண்மையை தாத்தா, பாட்டி கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு. இது என்னோட பிறப்புரிமை அல்லவா? என்னிடம் விஷயத்தை மறைத்த பெற்றோரிடம், எனக்கு பேசவே பிடிக்கவில்லை.
வளர்ப்பு பெற்றோர் என்றதும் அந்த உண்மையான பாசம் என்னை விட்டு அகன்றது போல் உள்ளது. என்னுடைய உண்மையான பெற்றோர் யாராக இருக்கும் என்று அறிய என் மனம் துடிக்கிறது. சந்தோஷமாக இருந்த வீடு, துக்க வீடுபோல் உள்ளது. நன்றாக படித்து வந்த எனக்கு தற்போது படிப்பில் ஆர்வமே போய்விட்டது. இன்னும் என்னென்ன விஷயங்களை என்னிடம் இவர்கள் மறைத்தனர் என நினைக்க தோன்றுகிறது.
ஆசிரமத்தில் இருப்பவர்களும் என்னை யார் கொண்டு வந்து கொடுத்தது என்றே தெரியாது என்கின்றனர். என்னோட உண்மையான பெற்றோரை நான் எப்படி பார்ப்பது? நான் என்ன செய்யட்டும் ஜெனிபர் ஆன்டி?
ஓ டியர்! உன்னோட வேதனை, அதிர்ச்சி எல்லாமே எனக்குப் புரியுது? ஆனால், பிறந்த உடனேயே நீ தங்களுக்கு வேண்டாம் என்று நினைத்து உன்னை தூக்கி எறிந்த பெற்றோரை நீ பார்க்கத் துடித்து, நான்கு வாரக் குழந்தையாகிய உன்னை தூக்கி வந்து சீராட்டி, பாராட்டி பணக்கார பள்ளியில் படிக்க வைத்திருக்கும், உன் வளர்ப்பு பெற்றோரை தினம், தினம் துடிக்க வைக்கிறாயே... இது எந்த விதத்தில் நியாயம்...
இப்படி ஒரு நன்றி கெட்ட மனது உனக்கு இருக்கவே கூடாது.
உன் பெற்றோர், தங்களை விட்டு உன்னை தூக்கி எறிந்ததைப் போல, அவர்களையும் உன்னுடைய மனதை விட்டுத் தூக்கி எறி.
ஒரு குழந்தையை பெற்றதால் மட்டும் பெற்றோர் ஆகிவிட முடியுமா? உன்னை எந்த சூழ்நிலையில், எப்படி பெற்றார்கள்... உன்னை வளர்க்க முடியாத அளவிற்கு அவர்களது பிரச்னை என்ன என்பது நமக்குத் தெரியாது.
கண்ணனை பெற்ற யசோதாவை விட வளர்த்த தேவகிதான் சிறந்தவளாக கருதப்படுகிறாள். அதுபோல, ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை விட வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது நீ, 'டாடி' யாகும் போதுதான் உனக்கு புரியும்.
உன்னை பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைத்து, நீதான் அவர்களது எதிர்காலம் என்று நினைத்து, தங்களது சொந்த மகனாக உன்னை நினைத்ததால்தான், இந்த விஷயம் உனக்கு தெரியக்கூடாது என்று ரகசியமாக வைத்திருந்துள்ளனர். இந்த மாதிரி அதிகப் பிரசங்கி உறவினரால் வந்த வினை இது.
உன்னை வளர்த்தவர்களை முதலில் கட்டியணைத்து முத்தம் கொடு; மன்னிப்பு கேள். எத்தனையோ குழந்தைகளுக்கு கிடைக்காத வசதி வாய்ப்பு, படிப்பு எல்லாமே கொடுத்திருக்கும் அவர்கள் தான் உன்னுடைய உண்மையான பெற்றோர் என்று அவர்களிடம் சொல்; அவர்களை மகிழ்ச்சிப்படுத்து. நன்கு படித்து வேலைக்கு சென்று வயதான காலத்தில், அவர்கள் உனக்கு செய்த நன்றியை மறக்காமல், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்.
இதுதான் நீ செய்யக்கூடிய முக்கியமான காரியம். புரியுதா?
கண்ண துடைச்சிகிட்டு தேவையில்லாத காரியங்களை யோசிச்சி உன் சந்தோஷத்தையும் கெடுத்து, அவங்க சந்தோஷத்தையும் கெடுக்காம உங்க வீட்டை மீண்டும் கலகலப்பான வீடாக மாற்ற வேண்டியது உன் கையில்தான் உள்ளது.
இப்படி ஒரு அருமையான வளர்ப்பு பெற்றோரை உனக்கு கொடுத்ததற்காக உன்னை படைத்த கடவுளுக்கு அப்படியே மறக்காமல் நன்றி சொல்லு... ஒ.கே!
உங்களை,
நல்வழிப்படுத்த நினைக்கும்,
ஜெனிபர் பிரேம்.