PUBLISHED ON : ஜூலை 29, 2023

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
நான், 10 வயது சிறுமி. பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறேன். தினமும், காலையிலும், இரவிலும் பல் துலக்குகிறேன். இதை தவறாமல் செய்து வருகிறேன்.
கைகளால் பல் துலக்குவது நல்லதா... பிரஷால் பல் துலக்குவது நல்லதா... பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும். எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் ஆன்டி...
இப்படிக்கு,
ஆர்.சையது அலி பாத்திமா.
அன்பு மகளே...
பல் சுத்தம் என்பது, ஒட்டு மொத்த வாயை சுத்தமாக்குவதாகும். இது, வாயில் இருக்கும், 32 பற்கள், நாக்கு, ஈறுகள், மேல் அண்ணம், கீழ் அண்ணம், தொண்டைப்பகுதி ஆகியவை இணைந்தது.
பல் சுத்தத்துக்கு கை விரல்கள் மட்டும் போதாது. சந்தையில் விற்கும், 'டூத் பிரஷ்' எனப்படும் பல் துாரிகை மிக மிக தேவை.
இதில் பல வகைகள் உள்ளன...
* மின்சாரத்தில் இயங்கும் பல் துாரிகை
* பபிள் கம் போல் மெல்வதால் சுத்தம் செய்யும் துாரிகை
* குடுமிகள் போல, குச்சங்கள் உள்ள சல்கா பல் துரிகை
* பற்களுக்கிடையே சிக்கி இருக்கும் உணவு துகள்களை அகற்றும் துாரிகை
* அல்ட்ரா சவுண்ட் ஒலி துாரிகை
* குழந்தைகளுக்கான பல் துாரிகை
* சுழலும் பல் துாரிகை
* பல் தோற்றம் மற்றும் பல் சீரமைப்பு செய்யும் துாரிகை
* எதிர்மறையாய் மின்னேற்றம் செய்யப்பட்ட அயனி பல் துாரிகை
* பாடும் பல் துாரிகை.
பொதுவாக, பல் துாரிகையில், மென்மையான, மத்திமமான, கடினமான என, மூன்று ரகங்கள் உள்ளன.
மென்மையான துாரிகையே சிறந்தது என, பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். வேப்பங்குச்சி அல்லது பெரு விளா மரக்குச்சியை சுவைத்தும், வாயை சுத்தப்படுத்தலாம். பெரு விளாமரக் குச்சியை, 'மிஸ்வாக்' என கூறுவர்.
மிஸ்வாக் குச்சிகள், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியம் தரும்.
பல் துாரிகையை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.
மார்க்கெட்டில், பிளாஸ்டிக் அல்லது உலோகத்தால் ஆன, நாக்கு வழிப்பான்கள் கிடைக்கும். அதை வாங்கி, தினமும் காலையில் நாக்கை முழுமையாக வழிக்கலாம். பல் துலக்குதலை குறைந்தது, இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும்.
'டென்டல் பிளாஸ்' எனப்படும் பல் நாடா நைலான் அல்லது காட்டன் கயிறால் ஆனது. அதை பற்களுக்கிடையே நுழைத்து, உணவு துகள்களை அகற்றலாம்.
பற்குச்சிகளை வைத்து, பற்களுக்கிடையே சிக்கி இருக்கும் மாமிச துண்டுகளை அகற்றும் போது, கவனமாய் இருக்க வேண்டும். முறையாக பயன்படுத்தாவிட்டால் ஈறுகளில் குத்தி ஆபத்து ஏற்படுத்தும்.
எந்த உணவை சாப்பிட்டாலும், வாயை முழுமையாக நீரில் அலசி கொப்பளித்தால், பற்களில் உணவுத்துகள் சிக்காது. காலையில் பல் துலக்குவது எளிதாய் இருக்கும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
