PUBLISHED ON : டிச 21, 2019

அன்புள்ள மெடோஸ் ஆன்டிக்கு...
நான், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி; 'இளஸ்... மனஸ்...' பகுதியை, தவறாமல் படித்து வருகிறேன்.
பள்ளியில், 'பயோமேத்ஸ்' என்ற கணித உயிரியல் பாடப்பிரிவில் படிக்கிறேன்; ஓரளவு நன்றாக படிப்பேன். அடுத்து கல்லுாரியில் சேரவேண்டும். என்ன படிப்பது என்று முடிவு செய்வதில் குழப்பமாக உள்ளது. மருத்துவம் படிக்க ஆர்வமில்லை. ஏதாவது, வித்தியாசமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் சூழ்ந்துள்ளது.
பட்டப்படிப்பில் எவ்வளவோ துறைகள் இருக்கின்றன; அவை பற்றி, தகவல்களை கூறுங்கள் ஆன்டி. தேர்ந்தெடுத்து கல்லுாரியில் சேர உதவியாக இருக்கும். உங்கள் அன்பான அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.
புதிய துறைகளை தேடும் அன்பு மருமகளே...
மேலான உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன். மேல்நிலை கல்வியில் உயிரியலுடன், கணக்குப்பாடத்தையும் படித்து வருகிறாய். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரே நேரத்தில், பொறியியல், மருத்துவ நுழைவு தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். எதிலும் திறமையைக் காட்டி வெல்லலாம்.
ஆங்கில மருத்துவம் என்ற அலோபதி மருத்துவம் படிக்க விருப்பமில்லை என்றால், ஆயுர்வேதம், ஓமியோபதி, சித்தா, கால்நடை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, இயன் மருத்துவம், செவிலியர் பயிற்சி, எக்ஸ்ரே டெக்னிஷியன் படிப்பு என, ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
மருத்துவம் சார்ந்த எந்தபடிப்பும் வேண்டாம் என, முடிவெடுத்தால், கீழ்கண்டவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
* மருந்தியல் இளங்கலை பட்டபடிப்பு
* நச்சூட்டாய்வியல்
* அணுத்திரண்மம் உயிரியல்
* மரபுவழிபண்பியல்
* உயிரியல் பவுதிகம்
* கணினி உயிரியல்
* நுண்ணுரியல் துறை
* சூரிய சக்தி பொறியியல்
* இதழியல்
* பேஷன் டெக்னால்ஜி
* பயணம் மற்றும் சுற்றுலா
* ஓட்டல் நிர்வாகம்
* விண்வெளி பவுதிகம்
* ஹோம் சயின்ஸ்
* எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்
* டெய்ரி டெக்னாலஜி
* சுற்றுப்புறவியல் விஞ்ஞானம்.
இவற்றில் ஏதாவது ஒரு பாடத்தில், இளங்கலை, முதுகலை முடித்து, முனைவர் பட்டம் பெற்று, கல்லுாரிகளில் விரிவுரையாளர் ஆகலாம்.
இவையும் வேண்டாம் என்றால்...
* தொல்பொருள் அகழ்வாராய்ச்சி
* விவசாயம் மற்றும் தோட்டக்கலை
* சி.எஸ்., புரோகிராம்கள்
* வழக்கறிஞர் படிப்பு
* கல்வியியல்
* தடய அறிவியல்
* வழிகாட்டல் மற்றும் மனநல ஆலோசனை
* ஹெல்த் விசிட்டர்
* பி.ஓ.டி. ஆக்குபேஷனல் தெரபி
* நுாலக விஞ்ஞானம்
* ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
இவற்றில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம்.
இந்திய தரைப்படை, கடற்படை, விமானபடையில் சேர நுழைவு தேர்வுகளை, தேசிய பாதுகாப்பு அகாடமி, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்துகிறது; இந்த தேர்வை எழுதி சேரலாம்.
ஏதாவது, ஒரு பட்டப்படிப்பை, கலை அறிவியல் கல்லுாரியில் முடித்து, தமிழக அரசு நடத்தும், 'குரூப் ஒன்' தேர்வு எழுதலாம் அல்லது சிவில் சர்வீஸ் என்ற, ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வு எழுதலாம்.
கடல் போல் வாய்ப்புகள் உன் முன் கொட்டி கிடக்கின்றன; அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் வெற்றி பெறலாம். வாழ்த்துகள்!
- அன்புடன், மெடோஸ்.
