
அன்பு மிக்க பிளாரன்ஸ்...
நான், 32 வயது இல்லத்தரசி. ஒரே மகன்; வயது, 12; 7ம் வகுப்பு படிக்கிறான்; கிரிக்கெட்டில் அவனுக்கு ஆர்வம் அதிகம்; இந்திய கிரிக்கெட் வீரர்களில் பல பேரை அவனுக்கு பிடிக்கும்.
இருந்தாலும், விராட்கோலி என்றால் உயிர்; எப்ப பார்த்தாலும் விராட் கோலியின் பெருமைகளை, பேசியபடியே இருப்பான்.
அடுத்த மாதம் மகனுக்கு பிறந்த நாள் வருகிறது.
'பிறந்த நாள் பரிசாக, விராட்கோலி உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தி கொள்ள அனுமதியுங்கள்...' என்கிறான்.
கெஞ்சி பார்த்து விட்டேன்; கேட்க மாட்டேன் என்கிறான்; அவனுக்கு தகுந்த அறிவுரை கூறி, பச்சை குத்துதலை தடுத்து நிறுத்த வேண்டும். ப்ளீஸ்... நல்ல அறிவுரை தாருங்கள்.
அன்புள்ள அம்மா...
உலகிலேயே முதன்முதலாக பச்சை குத்தி கொண்டது, 'ஓட்சி' எனப்படும் பனி மனிதன். உடலில் கி.மு., 3250ல் பச்சை குத்தியிருக்கலாம் என கணித்துள்ளனர் வல்லுனர்கள்.
உடலில், அதிகம் பச்சை குத்திக் கொண்ட பெண், அமெரிக்காவை சேர்ந்த சார்லட் கட்டன்பர்க் என வரலாறு கூறுகிறது. அமெரிக்காவில், 30 சதவீதம் பேர் பச்சை குத்தி கொள்கின்றனர்.
இனி வரும் பதில் பகுதியை மகனிடம் படிக்க கொடுக்கவும்.
மகனே... உலகில் பொதுவாக பச்சை குத்திக் கொள்வோர் சமூக விரோதிகளாக குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். பச்சை குத்துவதால், அலர்ஜி, தோல்நோய் மற்றும் ரத்தம் வழி பரவும் நோய்கள் ஏற்படுகின்றன.
இப்போது உனக்கு வயது, 12; இன்னும், 18 ஆண்டுகள் தீவிரமாக கிரிக்கெட் பார்ப்பாய் என வைத்துக் கொள்வோம்; எந்த விளையாட்டிலும் வீரர்கள் சீசனுக்கு சீசன் மாறுவர்.
எதிர் வரும், 18 ஆண்டுகளில், குறைந்த பட்சம், 10 கிரிக்கெட் வீரர்கள் பிரகாசிப்பர். 10 பேர் முகங்களையும், உன் நெஞ்சில் பச்சை குத்தி கொள்ள முடியுமா...
அங்கும் இடம் போதவில்லை என்றால், உட்காருமிடத்திலும், இரு தொடையிலும் குத்திக் கொள்வாயா...
உடல், இறைவன் கொடுத்த பரிசு, அதை நீ விளம்பர தட்டி ஆக்கலாமா...
உன் நண்பர்களில் பலருக்கு, ரஹானே, புஜாரா, ரோகித் சர்மா போன்றோர் விருப்பமானவர்களாய் இருப்பர்.
விராட் கோலியை பச்சை குத்தும் நீ, உன் நண்பர்களுக்கு பரமவிரோதியாகி போவாய். இது தேவையா...
பிறந்த நாளுக்கு, பெற்றோரிடம் ஆயிரம் பரிசுகளைக் கேட்டு பெறலாம்.
இருந்திருந்தும் இதையா பிறந்த நாள் பரிசாக கேட்பாய்... பொதுவாக பச்சை குத்துதல் மேற்கத்திய கலாசாரம். நம் சமூகத்தில் சில பிரிவினர் இடது கையில் பெயரை பச்சை குத்திக் கொள்வர்.
பின்னொரு காலத்தில் நீ ஏதாவது உயரிய அரசு பதவிக்கு போகும் போது, உன் பச்சை குத்தல், ஒரு பிரச்னையாக வெடிக்கலாம். திருமண வயதில், மணப்பெண்ணுக்கு உன் பச்சை குத்தலால் அதிருப்தி வரலாம்.
இப்போது விராட் கோலியை பச்சை குத்தி, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், லேசர் தொழில் நுட்பம் மூலம், பச்சை குத்தியதை அகற்றலாம். வலிக்க வலிக்க இப்போது பச்சை குத்துவானேன்; அதிக பணம் செலவு செய்து அதை அழிப்பானேன்.
ஒரு யோசனை கூறுகிறேன் மகனே...
பச்சை குத்த வேண்டாம்... அதற்கு பதிலாக அழிக்க கூடிய மையால் விராட் கோலி படத்தை உடலில் விரும்பிய இடத்தில் வரைந்து கொள்! எத்தனை உருவங்களை வேண்டுமானாலும் அழிக்கலாம்; பின், மீண்டும் வரைந்து கொள்ளலாம்.
பிறந்த நாள் பரிசாக, 10 ஆயிரம் ரூபாயை, உன் வங்கி கணக்கில் போடச் சொல்; பணம் வளரும்; சேமிப்பு நல்ல பழக்கம்! அன்பு மகனுக்கு ஆசை முத்தங்கள்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

