PUBLISHED ON : நவ 13, 2021

அன்புள்ள அம்மாவுக்கு...
நான், 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி; என் வயது, 11; பெற்றோருடன் சென்னை நகரில் வாழ்கிறேன். இந்த நகரத்தில் எவ்வளவோ பிடித்த நல்ல விஷயங்கள் உள்ளன. சில செயல்கள் வெறுப்பின் உச்சத்துக்கு செல்ல வைக்கின்றன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் வெறுக்கும் முக்கியமான விஷயம், பொது இடங்களில் எச்சில் துப்புதல்; வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் துப்புகின்றனர்; மூக்கை சிந்துகின்றனர். பான் பராக்கை போட்டு துப்புகின்றனர்.
எந்த இடத்தில் எச்சில் துப்பப்படவில்லை என கவனித்து, கங்காரு போல குதித்து நடக்க வேண்டியிருக்கிறது.
'பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது' என, அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்தால் என்ன... தினமும் அவஸ்தையாக இருக்கிறது.
அன்பு மகளுக்கு...
சிறு வயதிலேயே, உனக்கு இருக்கும் குடிமை உணர்வை கண்டு வியக்கிறேன். 65 லட்சம் மக்கள் தொகை உள்ள சிங்கப்பூர் குடியரசில், கீழ்க்கண்ட கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
* மோசமான பொருள் தரும் பாடல்களை, பொது இடத்தில் பாடினால், மூன்று மாதம் சிறை தண்டனை
* பிறரின், 'வைபை'யை திருட்டுத்தனமாக பயன்படுத்தினால், மூன்று ஆண்டுகள் தண்டனையுடன் கூடிய அபராதம்
* பொது கழிப்பறையில், சிகரெட் புகைத்தால் அபராதம்
* வீட்டுக்கு வெளியே நிர்வாணமாக நடந்தால் அபராதம்
* பொது இடத்தில் குப்பையை வீசினால் அபராதம்
* பபிள் கம் விற்றால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை
* பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்த வேண்டும்.
நம் நாட்டின் மக்கள் தொகை, 130 கோடி; உலக அளவில் மக்கள் தொகையில், இந்தியா, இரண்டாம் இடம் வகிக்கிறது. நகரங்களில் மக்கள் நெரிசல் அதிகம்.
இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், 15 கோடி பேர். கல்வியறிவு பெற்றவர்கள், 74.04 சதவீதம்.
அரசும் சரி, மக்களும் சரி பொது சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை; மக்களின் பிரதான பிரச்னை, உணவு தான்.
இந்தியாவில் சட்டங்கள் அதிகம்; ஆனால், அவற்றை முழுமையாக நடைமுறை படுத்துவதில்லை.
பொது இடத்தில் துப்பினால், ஆறு மாதத்திலிருந்து, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்க வகை செய்கிறது, ஒரு இந்திய சட்டம்; ஆனால், எனக்கு தெரிந்து ஒருவர் கூட அந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை.
இதற்கு அரசியல்வாதிகள் பயப்படுவதே காரணம். எந்த சட்டத்தையும் கடுமையாக பயன்படுத்தினால், தேர்தலில் ஓட்டு போடாமல் தோற்கடித்து விடுவரோ என அஞ்சுகின்றனர்.
எல்லா இந்திய தண்டனை சட்டங்களிலும் ஓட்டை இருக்கிறது. வலிமை உள்ளவர்கள் தப்பித்து விடுகின்றனர்; அப்பாவிகள் மாட்டிக் கொள்கின்றனர்.
மகளே... நீ வசிக்கும் சென்னையின் தற்சமயம் மக்கள் தொகை, 1 கோடி; நீ கோடியில் ஒருத்தி. பொதுவாக, மக்களிடம் தனிமனித ஒழுக்கம் அறவே இல்லை.
அடுத்தவர் பார்த்தால் ஒன்று செய்கின்றனர்; பார்க்காவிட்டால் ஆயிரம் செய்கின்றனர். அறிவுரை எல்லாம் பிறருக்கு தான்; தனக்கில்லை என்றிருக்கின்றனர்.
பிரச்னையை உன்னிலிருந்து தீர்க்கப் பார்...
'பொது இடத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் எச்சில் துப்ப மாட்டேன்' என உறுதி எடுத்துக்கொள்.
அடுத்து, உன் வகுப்பு மாணவ, மாணவியர், பொது இடத்தில் துப்ப மாட்டோம் என உறுதிமொழி எடுக்கவும். அதற்கு துாண்டுகோளாக இருக்கவும்.
அடுத்து, குடும்ப உறுப்பினர்களை, தெரு மக்களை உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைக்கலாம். இந்த உறுதி, நகரம் முழுக்க பரவும்; அடுத்து இந்தியா முழுக்க பரவும்; மொத்தத்தில், பிரச்னைக்கான தீர்வை உன்னிலிருந்தே ஆரம்பிக்கவும்.
எப்போதும் தனி மனித உறுதி, மேம்பாட்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன சீர்திருத்தங்கள்.
நாளை நமதே மகளே!
- அன்புடன், பிளாரன்ஸ்
