தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (132)

இளஸ் மனஸ்! (132)

இளஸ் மனஸ்! (132)


PUBLISHED ON : பிப் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புமிக்க பிளாரன்ஸ்...

என் வயது 60; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பேரனுக்கு, இரண்டரை வயது. அவன், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய விரும்புகிறான். நடைப்பயிற்சிக்கு செல்லவும் பிரியப்படுகிறான்; ஆனால், வெளியே அழைத்து சென்றால், 'வீடு திரும்ப மாட்டேன்...' என, அடம் பிடிக்கிறான்.

அவனை பள்ளியில் சேர்க்க நினைக்கிறோம். அது வீட்டின் அருகே இல்லை; பள்ளி வாகனம் அல்லது ஆட்டோவில் தான் அனுப்ப வேண்டும். அதில் செல்பவன், மீண்டும் வீடு திரும்ப மறுத்து பிடிவாதம் செய்தால், என்ன செய்வது...

இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்!

அன்புள்ள ஐயா...

பொதுவாக, குழந்தைகளுக்கு வாகனங்களில் பயணிக்கும் ஆசை அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு, வாகனங்களின் மீது அளப்பரிய காதல் பொங்கி வழியும். மானசீகமாக, 'குர்ர்ர்ர்... பீப்பீ...' என, சத்தம் எழுப்பியபடி, வாகனம் ஓடுவதாக நினைத்து, குழந்தைகள் ஓடுவதை பார்த்திருப்பீர்கள்.

கற்பனையை விட, வேகமாய் பயணிப்பது மனிதனை ஆட்டி படைக்கும் பேராசைகளில் ஒன்று. எனக்கு தெரிந்தவரின் பேரன், சாலையில் செல்லும் வாகனங்களின், 'பிரான்ட்' பெயர்களை மிகத்துல்லியமாக கூறுவான். வாகனம் மீதுள்ள பற்றால் தான் இப்படி நடக்கிறது.

வீட்டுக்கு வந்த நண்பருடன், நான்கு சக்கர வாகனத்தில், வெளியூர் பறப்பட்டார் என் நண்பர் ஒருவர். அவரது நான்கு வயது மகன், வாகனத்தில் அழைத்து செல்லாததால், விடாமல் அழுதுள்ளான். நான்கு மணி நேர அழுகைக்கு பின், நண்பரின் மனைவி, ஒரு ஆட்டோவில் அமர்த்தி நகர்வலம் அழைத்து சென்று திரும்பியபின், அழுகையை நிறுத்தியுள்ளான் சிறுவன்.

நான்கு சக்கர வாகன படம் வரையும் போட்டி ஒன்றில், ஆறு வயது ஹாரி இன்கிராம், '3டி' அமைப்பில், எதிர்கால வாகனத் தோற்றத்தை வரைந்துள்ளான். அது இறக்கை கட்டி பறக்கும்; காற்றில் மாசை உறிஞ்சும்; ஏழைகளுக்கு உணவை வாரி வழங்கும்.

உங்கள் பேரனை, தாராளமாக பள்ளியில் சேருங்கள்; ஆட்டோவில் சென்று வரட்டும். அவனை ஈர்க்க, சில வேலைகளை செய்யுங்கள்.

* பொம்மை வாகனங்களை விளையாடுவதற்கு வாங்கி கொடுங்கள்

* வீட்டுக்குள் ஓட்ட, எலக்ட்ரானிக் காரை பரிசளியுங்கள்

* அக்கம் பக்கத்து சிறுவர்களை நட்பாக்குங்கள்

* விளையாடும்போது, எக்கசக்க கேளிக்கை பொங்கட்டும்.

அவை உங்கள் பேரனை அமைதிப்படுத்தும்; பதற்றம் தணிக்கும்; உடல் இயக்க திறனை மேம்படுத்தும்; நுண்ணறிவை அதிகரிக்கும்.

பேரனுக்கு கல்வி தொடர்பான பொம்மை, உணவு சம்பந்தமான பொம்மை மற்றும் புதிர் பொம்மைகளை வாங்கி பரிசளியுங்கள். அவன் விளையாடும் போது தொந்தரவு செய்யவேண்டாம். பேரனின் விளையாட்டை, நீங்கள் திட்டமிடாமல் இருங்கள்.

வாகனங்களுக்கு சமமான அல்லது மேலான பொழுதுபோக்குகள், சந்தோஷங்கள், விளையாட்டுகள், வீட்டுக்குள் இருக்கின்றன என்பதை, செயல்கள் மூலம் சொல்லாமல் சொல்லுங்கள்; நடுநடுவே தின்பண்டங்களையும் கொடுங்கள்.

பேரனுக்கு, கற்பனையுடன், செயல்திறன் வளரும்.

பிடிவாத குணத்தை, இணக்கமான மாற்றுவழிகள் மூலம் அகற்றுங்கள்.

அவனது வாகன ஆசையை முறைப்படுத்தினால், பின்னாளில், விமான பைலட்டாகவோ, நான்கு சக்கர ஓட்டுனராகவோ, பி.எம்.டபிள்யு., கார் உரிமையாளராகவோ உயர்வான்!

வாலுப்பையனுக்கு அன்பு முத்தங்கள்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us