தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (133)

இளஸ் மனஸ்! (133)

இளஸ் மனஸ்! (133)


PUBLISHED ON : பிப் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 12; பிரபல பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி. எந்த காரியத்தை செய்தாலும், கனக்கச்சிதமாய் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவள்.

நான்கு மற்றும் இரட்டைக் கோடு நோட்டுகளில் பயிற்சி மேற்கொண்டு, தமிழையும், ஆங்கிலத்தையும், அழகாக எழுத கற்றுக் கொண்டேன்.

என் எழுத்துக்களை யார் பார்த்தாலும், கண்களில் ஒற்றிக்கொள்வர். ஆனால், என் அம்மா, 'அழகான கையெழுத்து உள்ளவருக்கு தலையெழுத்து படுமோசமாக இருக்கும்...' என்கிறார். இதனால் மனம் உடைந்துவிட்டது. என் கையெழுத்தை, கோழி கிறுக்கல் போல் மாற்றி கொள்ளவா ஆன்டி... நல்ல ஆலோசனை கூறுங்கள்!

அன்பு மகளே...

உன் அம்மாவின் கூற்று, 'வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற பொய் புனைவை போன்றது. கடந்த, 10 ஆண்டுகளாக, கையால் எழுதுவது குறைந்து வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில் எங்கும் கணினி மொழி தான் ஆட்சி செய்யும்.

உன் அம்மா போன்றோரின் மூட நம்பிக்கை, முயற்சியுடன் எழுதும் கரங்களை முற்றிலும் முடக்கி விடும். அதனால், அவரது பேச்சை பொருட்டாக கருத வேண்டாம்.

கையெழுத்து, சந்தோஷமாக இருக்கும் போது ஒரு விதமாகவும், கோபமாக இருக்கும் போது மற்றொரு விதமாகவும் அமையும். பேனாவால் எழுதும் போது, ஒரு விதமாகவும், பால் பாயின்ட் பேனாவால் எழுதும் போது மற்றொரு விதமாகவும் இருக்கும். ஜெல் பேனாவால் எழுதும் போது மாறும்.

ஒரு நாளைக்கு, 100 நோயாளிகளை பார்க்கும் மருத்துவர், 'பிரிஸ்கிரிப்ஷன்' பேடில் கிறுக்கலாய் மருந்து எழுதுவர்.

அந்த கிறுக்கல் எழுத்துகளை சரிவர புரிந்து கொள்ளாமல், மருந்தகங்களில் தவறான மருந்துகளை கொடுத்து, நோயாளிகளுக்கு, பல நேரங்களில் உயிராபத்து ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க, சில மருத்துவர்கள், 'கேபிட்டல்' எழுத்துக்களில் மருந்து குறிப்பு எழுதி கொடுக்கின்றனர்.

மனிதர்களின் கையெழுத்தை ஆராய்ச்சி செய்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளனர் அறிஞர்கள்.

கை எழுத்து...

* பெரிதாய் இருந்தால், எழுதியவர் தன்னம்பிக்கை மிக்கவர்

* சிறிதாய் இருந்தால் எழுதியவர் தன்னம்பிக்கை இல்லாதவர்

* நெருக்கமாய் இருந்தால், எழுதியவருக்கு நண்பர்கள் அதிகம்

* வலதுபுறம் சரிந்து இருந்தால், எழுதியவருக்கு திறந்த மனது

* இடதுபுறம் எழுத்து சரிந்து இருந்தால், எழுதியவருக்கு கூச்ச சுபாவம் அதிகம்

* அழுத்தி எழுதினால், எழுதியவருக்கு ஊக்கம், உற்சாகம், பிடிவாதம் அதிகம்

* பூப்போல மெதுவாக எழுதினால், எளிதில் நட்பு பாராட்டும் குணம் உண்டு என்ற முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

சிலர், வாக்கியத்தின் ஒரு எழுத்தை வலப்புறமும், ஒரு எழுத்தை இடப்புறமும் நீட்டி எழுதுவர். அவர் நிலையற்ற மனம் உடையவர்.

அழகான கையெழுத்து உடையவர் அழகுணர்ச்சி மிக்கவர்; விடைத்தாளில் கையெழுத்து அழகாக இருந்தால், திருத்தும் ஆசிரியர் அதிக மதிப்பெண் போடுவார்.

வங்கி கணக்கு ஆரம்பிப்போர், மூன்று மாதிரி கையொப்பங்கள் இட வேண்டும்; தீர்க்கமான ஆளுமை இருப்போரின் கையொப்பம் பல ஆண்டுகளானாலும் மாறாது.

அறியாமையில், உன் தாய் பேசுவதற்காக, முத்தான கையெழுத்தை கோழி கிறுக்கல் ஆக்கி கொள்ளாதே... அழகான கையெழுத்துடன், நன்கு படித்து, மருத்துவர், மாவட்ட ஆட்சி தலைவர், சார்ட்டர் அக்கவுன்டென்ட் அல்லது இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக முயற்சி செய்; உன் வெற்றி, உன் தாயின் அறியாமை கருத்துகளை தவிடு பொடியாக்கட்டும்!

கையெழுத்தை ஆராயும் கலையை, 'கிராபாலஜி' என்பர். கி.பி., 1782ல் மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலை சேர்ந்த, அன்னா கோரன் கையெழுத்தை ஆராயும் நிறுவனத்தை நிறுவினார்.

உன் அழகான கையெழுத்து, கிராபாலஜிக்கு மகுடம் சூட்டட்டும்!

பெண்களே... அனைவரும் உயர்கல்வி கற்று, இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி, பொன்னெழுத்துக்களாய் செதுக்குங்கள்! அழகான கையெழுத்து, ஒரு மொழியின் உயிர் மூச்சாக விளங்கும்.

பிளாரன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us