PUBLISHED ON : பிப் 26, 2022

அன்புள்ள ஆன்டி...
நான், 14 வயது சிறுமி; பிறந்த ஊர் நாகர்கோவில்; அப்பா பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். எனக்கு மூன்று வயதான போது, ஹைதராபாத்தில் பணிபுரிந்தார் அப்பா.
ஆறு வயது வரை அங்கு, தெலுங்கு மொழி சார்ந்த கல்வி கற்றேன்; அடுத்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு மாற்றலாகி சென்றார். ஒன்பது வயது வரை, அங்கு ஸ்பானிஷ் மொழி படித்தேன்; அடுத்து, அமெரிக்காவுக்கு மாறினார் அப்பா. அங்கு, 12 வயது வரை அமெரிக்க ஆங்கிலம் பயின்றேன்.
பின், பெங்களூருக்கு மாறினார்; இங்கு கன்னடமும், ஹிந்தியும் கற்று வருகிறேன்.
என்ன நாடோடி வாழ்க்கை இது...
என் வயதுள்ளவர்கள் எல்லாம், தமிழ் படித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் இதுவரை, ஐந்து மொழிகளுக்கு தாவியுள்ளேன்.
இந்த வயதில் இந்த பாரம் அவசியம் தானா...
என் வேதனையை புரிந்து, தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.
அன்பு மகளுக்கு...
பன்மொழி வித்தகராக இருக்கும் பாப்பாவுக்கு முதற்கண் வாழ்த்துகள்!
அடிப்படையில், நீ பேசுவதே கலப்படம் நிறைந்த தமிழ். உன் ரத்தத்தில், மலையாளமும், தமிழும் கலந்து ஓடுகிறது.
பெங்களூரில் ஒரு ஆட்டோகாரருக்கு, ஏழெட்டு மொழிகள் தெரியும்.
மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி, பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுவார். மொழிகளைக் கற்று கொள்வது பாரம் அல்ல...
ஒரு மொழி தெரிந்தவர், சட்டைப்பையில் நீலநிற பேனாவை மட்டும் சொருகி வைத்திருப்பார். பலமொழி கற்றவர் சட்டைப்பையில் பல வண்ண பேனாக்களை சொருகி வைத்திருப்பார். தேவையான நேரத்தில், பொருத்தமான நிற பேனாவை எடுத்து உபயோகிப்பார்.
உலகிலே, தமிழும், சீனமும் தான் அதிக எழுத்துகள் உடைய சிரமமான மொழிகள்.
கன்னடம், 36 மில்லியன் மக்களால் பேசப்படும் திராவிட மொழி. தமிழுக்கு அடுத்தபடியாக, மிகப் பழமையான இலக்கியங்களை கொண்டுள்ளது!
இந்தியாவின், 22 தேசிய மொழிகளில் கன்னடமும் ஒன்று!
அது செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது.
உலகில், 7,139 மொழிகள் உள்ளன; அவற்றில், 40 சதவீத மொழிகள், அழியும் நிலையில் உள்ளன. உலக மக்கள் தொகையில், 20.77 சதவீத பேர், ஆங்கிலம் பேசுகின்றனர். உலகில் மிகச்சிறந்த மொழி அவரவருக்கு, அவரவர் தாய்மொழி தான்.
தாய்மொழி மேல் பற்றிருக்கலாம்; வெறி இருக்க கூடாது. ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பிறந்த, ஜியாத் பஜா என்பவர், 59 மொழிகளில் பேச தெரிந்தவர். மொழி பேசுவதில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
உலகிலே கற்றுக்கொள்ள சிரமமான மொழி, நம் அண்டை நாடான சீனாவில் பேசும் மாண்டரின்.
மொழிகளை சந்தோஷமாக கற்றுக்கொள்; தமிழுடன் மற்ற மொழிகளை ஒப்பிட்டு பார்த்து கற்றுக் கொண்டால் சுவாரசியம் கூடும். மொழியின் சிறப்பான அம்சங்களை பாராட்ட பழகு!
'மற்றவர்கள் கற்றுக் கொள்ளவில்லையே... நான் ஏன் கூடுதல் மொழி கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற தவறான சிந்தனைக்குள் குதிக்காதே...
தமிழ் மொழியில் இருந்து தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம் பிறந்தது என கூறுவர்.
தென் மாநிலங்களில் உள்ள மொழிகளில், ஒற்றுமை வேற்றுமைகளை ரசனையுடன் அலசு!
உலகமே கிராமமாய் சுருங்கி வரும் சூழ்நிலையில், அதிக மொழிகள் கற்றுக் கொள்பவர்கள் எளிதில் வெற்றி கோப்பையை கைப்பற்றுவர்.
நாளை, உன் தந்தை மேற்கு வங்கத்துக்கு மாற்றலாகிப் போனால், சங்கீத மொழியான பெங்காலியை கற்று கொள்ளவும் தயாராகு!
- அன்புடன், பிளாரன்ஸ்
