PUBLISHED ON : மார் 05, 2022

அன்பிற்குரிய பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 16; பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி. பள்ளி படிப்பை முடித்த பின், நவீன மங்கையாக வலம் வர வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு இப்போதே முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என் சீனியர் மாணவியர் பலர் பல விதமாய், 'ஹேர் கலரிங்' செய்து, வண்ணத்து பூச்சிகளாய் பறக்கின்றனர். நானும், 'ஹேர் கலரிங்' செய்து கொள்ள விரும்புகிறேன். பெற்றோர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்க மாட்டார்கள். நான் என்ன விதமான, 'ஹேர் கலரிங்' செய்து கொள்ளலாம் என, 'டிப்ஸ்' கொடுங்கள் ஆன்டி.
அன்பு மகளே...
அலங்காரத்துக்காகவும், நரை கேசத்தை கருப்பாக்கவும், நவநாகரிக அபிலாஷைகளுக்காகவும், தலைகேசத்துக்கு சாயம் பூசுவது வழக்கமாக உள்ளது.
அழகு நிலையங்களில், நுாற்றுக்கணக்கான வணிக பெயர்களில், தலைச்சாயம் பூசப்படுகிறது. அவை, சிவப்பு, பர்கன்டி, பர்பிள், காரமல், பழுப்பு, வானவில், சாக்லேட், புருனெட், ஹனி பிளாண்டு, கிளாசி சைனிங், காப்பர் ரெட், செஸ்நட் பிரவுன், டாபி டோன், சில்வர், ஸ்ட்ரீக் ஹைலைட், சின்னமன், ரஸ்ட்டி ரெட், ஆபர்ன், ஆம்பூர், யூனிக், சிங்கிள் ஸ்ட்ரீக், ஆஷ் பிளாண்டு என அழைக்கப்படுகின்றன.
இந்த சாயபூச்சுகளை வாங்க, சம்பாதித்த சொத்துகளையே எழுதி கொடுக்க வேண்டி வரும். சில நிரந்தர சாயபூச்சுகளால், பூசப் பட்ட தலைமுடி உதிரும் வரை நிலைக்கும்.
சில சாயபூச்சுகள், எட்டு வாரம் வரை தாக்கு பிடிக்கும்; இவ்வகை சாயபூச்சுகளால், ஒவ்வாமை, கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை, ஆஸ்துமா, புற்றுநோய், கண்நோய், முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.
இயற்கையான சாயபூச்சுகள் ஆபத்தில்லாதவை; காபி, தேயிலை துாள், பீட்ரூட், கேரட் சாறு, மருதாணி, உணவு நிறங்கள் வைத்தும், எலுமிச்சை, தேன் வைத்தும், தலைகேசத்துக்கு சாயம் ஏற்றலாம்.
நீ விரும்பி கேட்டதால், செயற்கை சாயபூச்சுகளை பற்றி விலாவாரியாக கூறினேன். தனிப்பட்ட முறையில் அவற்றுக்கு எதிரானவள் நான்.
தலைகேசத்தை உள்ளதை உள்ளபடியே பராமரிக்க...
முட்டையின் வெள்ளைக் கரு, கடலைமாவு, தேங்காய் பால், ஒமேகா 3 சத்துள்ள ஆலிவ் விதை, எலுமிச்சை சாறு, வேப்பிலை, சின்ன வெங்காயம் இவைகளை தேய்த்து குளிக்கலாம்.
மேலை நாட்டவர், நம் நாட்டு ஆண், பெண்களின் கருங்கூந்தலை பார்த்து, வெகுவாய் பொறாமைப்படுகின்றனர். உண்மை அப்படியிருக்க, வான் கோழியைப் பார்த்து நடனத்தை மாற்றலாமா மயில்.
தலைகேசம் உதிராமல், பளபளப்பாக வளர, கீழ்க்கண்ட எண்ணெய்களை தேய்க்கலாம்...
பாதம் எண்ணெய், நெல்லி எண்ணெய், முருங்கை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வைட்டமின் - ஈ சத்து அதிகமுள்ள, ஆலிவ் எண்ணெய், மொராக்கோ நாட்டு ஆர்கன் எண்ணெய், நல்லெண்ணெய்.
தலைகேசத்தை, ஈறு, பேன், பொடுகு, சிக்கு, சிடுக்கு இல்லாமல், குட்டையாகவோ, நீளமாகவோ வைத்துக் கொள்வதே ஆரோக்கியம் தரும்.
சாதனை புரிந்த பெண்களே, உலகின் மிக அழகிய முகங்களைக் கொண்டுள்ளனர் என்பதை புரிந்து கொள். அதற்கு ஏற்ப உன் நடத்தையை மாற்றிக்கொள்ளவும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.
