PUBLISHED ON : மார் 05, 2022

வித்யா, 8ம் வகுப்பு படிக்கிறாள். கணித பாடம் என்றால் அவளுக்கு பயம். கொரோனா வைரஸ் பாதிப்பால் பாடங்கள் இணையதளம் வாயிலாக கற்பிக்கப்படுகிறது.
வகுப்பறையில் நடத்துவது மாதிரி, 'ஆன்லைன்' வகுப்பில் கற்றுத் தந்தாலும், வித்யாவிற்கு புரியவில்லை. மாணவியருடன் கூடி படித்த போது இருந்த நிலையில்லை. வகுப்பறையில் என்றால் சிறப்பாக படிக்கும் மாணவியரிடம் புரியாத பகுதியை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தற்சமயம், யாரிடம் கேட்பது என தெரியவில்லை.
கண்களை மூடி சற்று நேரம் யோசித்தாள்.
வீட்டருகே பக்கத்து தெருவில் வசிக்கும் மாலதி நினைவு வந்தது. அங்கு சென்றவள், கணிதப் பாடத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்த கேட்டாள்.
''என் கணினி சரியாக இயங்கவில்லை. ஆன்லைன் பாடங்கள் எதுவும் முறையாக தெரியவில்லை. நானே புரியாமல் தான் வீட்டுப்பாடங்களை செய்கிறேன். வேறு யாரிடமாவது கேட்டுக் கற்றுக்கொள்...'' என, கதவை அடைத்தாள் மாலதி.
வாசலில் நிறுத்தி முகத்தில் அடித்தாற் போல் பேசி அனுப்பியதை எண்ணி வருந்தினாள் வித்யா. சோகத்துடன் வீடு திரும்பினாள்.
அவளை தேற்றி அருகே அமர்த்தி தலையை கோதியபடி, ''புரியாதது என, எதுவுமே இல்லை; நம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்... கணித பாடத்தை உற்று கவனித்தால் முறையான தெளிவு கிடைக்கும்; கணித சூத்திரங்களை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தால் எளிதாகும்...'' என உற்சாகமூட்டினார் அம்மா.
அதன்படி ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், கணக்குகளை சுயமாகப் போட்டாள் வித்யா. மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கியது; முயன்று கற்றதால், தன்னம்பிக்கை அதிகரித்தது; கண்களில், ஆனந்த கண்ணீர் வழிய, ''நன்றி அம்மா...'' என்றாள்.
தமிழ்பாடம் என்றால் மலைப்பு; கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்வாள் மாலதி. ஆன்லைன் வகுப்பில், பாரதியாரின் செந்தமிழ் அந்தாதி என்ற பாடலை படித்து கருத்துக்களை எழுத சொல்லி இருந்தார் ஆசிரியர்.
தட்டுத்தடுமாறியபடி படித்த மாலதிக்கு எதுவும் புரியவில்லை. சட்டென தமிழில் முதன்மை வகிக்கும் வித்யா ஞாபகம் வந்தது.
'தேர்வில், 95 மதிப்பெண் பெறுபவள்; எது கேட்டாலும் முறையாக சொல்லித் தருவாள். கணித பாடத்தில் உதவி கேட்டு வந்தபோது, முகத்தில் அடித்தது போல் பேசி அனுப்பிவிட்டேனே... அவளிடம் எப்படி போவது' என தவித்தாள் மாலதி.
பின், தயக்கத்துடன் வித்யா வீட்டு கதவை தட்டினாள்.
மகிழ்வுடன் வரவேற்று, பாரதியார் பாடலை மனதில் பதியும் வண்ணம் ராகமாக பாடி கற்று தந்தாள் வித்யா.
'கரும்பைப் போல் இனிமையானது தமிழ் மொழி...' என்று அதன் பொருளை உணர்த்தினாள். தெரிந்ததை, தயக்கமின்றி கற்று தருவதில் இன்பம் உண்டு என புரிந்து கொண்டாள் மாலதி. கற்றுத் தரும்போது அறிவுச் செல்வம் பெருகும் என்பதை அனுபவமாக அறிந்தாள் மாலதி.
குழந்தைகளே... முடிந்த அளவு உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும்.
பா.செண்பகவல்லி
