தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (137)

இளஸ் மனஸ்! (137)

இளஸ் மனஸ்! (137)


PUBLISHED ON : மார் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்டி...

நான், 15 வயது சிறுவன்; 10ம் வகுப்பு படிக்கிறேன்; எனக்கு, 10 வயதில் தம்பியும், 6 வயதில் தங்கையும் இருக்கின்றனர்.

எந்த ஊருக்கு, எந்த வாகனத்தில் சென்றாலும், ஜன்னலோர இருக்கை தான் எனக்கு வேண்டும். ஜன்னலோரத்தில் இருக்கை கேட்கும் தம்பி, தங்கையுடன் பேய்த்தனமாக சண்டை போடுவேன்.

என் நடத்தையைப் பார்த்து, பெற்றோர் தலையில் அடித்துக் கொள்கின்றனர். என் ஜன்னலோர இருக்கை பிடிவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஆன்டி...

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத சிறுவன்.


அன்புமிக்க மகனே...

ஒரு ரகசியம் சொல்லட்டுமா... என் வயது, 35; இன்னும் ஜன்னலோர இருக்கையில் தான், விரும்பி பயணம் செய்கிறேன்.

ரயிலில் உட்காரும் வசதி உடைய பெட்டியில், பயண முன்பதிவு செய்யும்போது, இருக்கை எண்ணை, ஆறால் வகுத்துப் பார்ப்பேன். விடை, 'சைபர்' அல்லது, 'ஒன்று' என வந்தால் ஜன்னலோர இருக்கை; விடை, 'இரண்டு' அல்லது, 'ஐந்து' என வந்தால் நடு இருக்கை.

வேண்டி விரும்பியும் ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை என்றால், ஜன்னலோரம் அமர்ந்திருப்பவரிடம் கெஞ்சி, மாற்றி உட்காரச் சொல்வேன். அப்படி ஓர் மனோபாவம்.

விமானங்களில், ஜன்னலோர இருக்கையில் அமர்பவர்கள், ஓய்வான விடுமுறை மனோபாவம் உடையவர்கள். ஓர இருக்கையில் உட்காருபவர்கள், வியாபார ரீதியாய் பயணிப்பவர்கள். எந்த தள்ளு முள்ளுவும் இல்லாமல், எளிதில் வசதியாக, காத்திருக்கமால் இறங்கி விடுவர்.

ஜன்னலோர இருக்கையில் இருப்பவர்கள், 83 சதவீத பேர், வெளியே வேடிக்கை பார்க்க ஆசைப்படுகிறவர்கள்; 64 சதவீத பேர் ஜன்னலோர இருக்கைக்காக, கூடுதல் பணம் செலுத்த தயாராக இருக்கின்றனர்; 44 சதவீதம் பேர், அடுத்தவர் தொந்தரவு இல்லாமல், பயணங்களில் வசதியாக துாங்க, ஜன்னல் ஓரம் இருக்கை தேர்ந்தெடுக்கின்றனர்.

விமானம், கார் மற்றும் ரயிலில் ஜன்னலோர இருக்கையில் பயணிப்பவர்கள், பொதுவாக, சுயநலமானவர்கள். வசதியையும், பாதுகாப்பையும் விரும்புபவர்கள்.

காரில், 13 வயதுக்கு உட்பட்டோர், நடு இருக்கையில் பயணிப்பது தான் பாதுகாப்பானது. ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையை மரண இருக்கை என கூறுவர்; சாலை விபத்துகளில் இந்த இருக்கையில் அமர்ந்திருப்பவரே அதிகமும் பாதிக்கப்படுவர்.

பேருந்துகளில், முதல் மூன்று வரிசைகளுக்கும் பின்னிருக்கும் ஜன்னலோர இருக்கை பாதுகாப்பனது. பேருந்தில், பின்னிருக்கைகளை தவிர்ப்பது நல்லது.

ஜன்னலோர இருக்கையில் பயணம் செய்வோர், கையோடு, மினி தலையணை, குட்டி சோபா அல்லது மேட்ரஸ் எடுத்து சென்றால், சவுகரியமாக உட்காரலாம்.

உனக்கு ஒரு யோசனை கூறுகிறேன்...

உன் பெற்றோரிடமோ, சக பயணியரிடமோ, சகோதர சகோதரிகளிடமோ, ஜன்னலோர இருக்கையை கேட்கும் போது, குரங்கு பிடிவாதம் செய்யாதே!

அன்பாக, பண்பாக கேள்... பயண நேரம் ஆறு மணிநேரம் என்றால், முதல் பாதியில், நீ ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, பின் பாதியில், தம்பி, தங்கை உட்கார அனுமதி.

சில நேரம், 'எனக்கு ஜன்னலோர இருக்கை வேண்டாம்; யாராவது உட்கார்ந்துக் கொள்ளுங்கள்...' என கூறி நடி!

'அட பையன் நல்லவன் ஆகி விட்டானே...' என யோசித்து, 'இல்லப்பா... நீயே உக்காரு...' என விட்டு கொடுப்பர்.

இளமையில் தான் ஜன்னலோர இருக்கை பித்து இருக்கும்; உன் தாத்தா, பாட்டியை பார். அவர்களுக்கு பயணம் செய்வதே பிடிக்காது. சிலருக்கு வாகனங்களில் ஏறிய உடன் அசுர துாக்கம் வந்து விடும்; அவர்கள் பக்கத்து இருக்கை பயணியர் மீது சாய்ந்து, ஜொள்ளு விட்டு படுத்தி எடுப்பர். அவர்களுக்கு சாய்ந்து கொள்ள தோள் கிடைத்தால் போதும்.

- அன்புடன், பிளாரன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us