PUBLISHED ON : மார் 26, 2022

அன்புள்ள அம்மா...
நான், 12 வயது சிறுவன்; 7ம் வகுப்பு படிக்கிறேன். தந்தை, ரெவின்யூ இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அம்மா அரசு மேல்நிலைப் பள்ளியில், உயிரியல் ஆசிரியையாக உள்ளார்.
எனக்கு, 17 வயதில் அண்ணன், 15 வயதில் அக்கா உள்ளனர். இரு தரப்பு தாத்தா, பாட்டிகளும், கிராமங்களில் உள்ளனர்.
இந்த உலகம் தோன்றி, லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கும்; இன்னும், லட்சக்கணக்கான ஆண்டுகள் உலகம் இருக்கவே செய்யும்.
வெறும், 60 ஆண்டுகள் உயிர் வாழும் நாம், நம்மை விட, ஐந்து வயது அதிகமுள்ள ஆணை அண்ணன் என்றும், 20 ஆண்டுகள் அதிகமுள்ள ஆணை அப்பா என்றும், 45 ஆண்டுகள் அதிகமுள்ள பெண்ணை, பாட்டி என்றும், செயற்கை மரியாதை கொடுத்து அழைப்பது ஏன்...
ஆணோ, பெண்ணோ வெறும் பெயர் சொல்லி அழைத்தால் என்ன... பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா, மாமி, சித்தப்பா, சின்னம்மா, பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணன் ஆகியோரை, சார், ஐயா, மேடம் என மரியாதைகள் வைப்பது எதற்கு; தகுந்த விளக்கம் தாருங்கள்!
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத சிறுவன்.
அன்பு மகனுக்கு...
உன் வயது சிறுவர் சிறுமியரை, 'தலைமுறை, 'இசட்' அல்லது டிஜிட்டல் குடிமக்கள்' என அழைப்பர். நீங்கள் எல்லாம் இப்படி தான் யோசிப்பீர்கள்.
உலகம், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதை பார்த்தாயா...
நீ பிறந்த போது, உலகம் பிறந்தது; நீ இறக்கும் போது உலகம் இறக்கிறது.
அதிகபட்சம், 80 வயது வரை உயிர் வாழ்கிறாய் என வைத்துக் கொள்வோம். 25 வயது வரை படிப்பாய். பின், திருமணம், குழந்தைகளை படிக்க வைப்பாய். 50 வயதில், மகன், மகளுக்கு திருமணம். அதன்பின், பேரன், பேத்திகள். அவர்கள் பெரியவர்களாவதற்கு முன் மரணம்!
உனக்கும், உன் ஆசிரியருக்கும் இடையே, 10 வயது வித்தியாசம்; உனக்கும், உன் தந்தைக்கும் இடையே, 20 - 25 வயது வித்தியாசம்.
மனித வாழ்க்கையில், ஒரு ஆண்டு என்பதே பெரியதொரு காலத்துண்டு. 80 ஆண்டுகள் வாழும் ஆண், வாழ்நாளில், நுாற்றுக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் உறவுகளாக, நட்புகளாக சந்திக்கிறான்.
எல்லாரையும் பெயர் சொல்லி அழைக்க முடியுமா...
அவரவர் வகிக்கும் ஸ்தானத்தை வைத்து தான், அது அதற்குரிய மரியாதையை கொடுப்பது சமூக நியதி!
பக்கத்து வீட்டு பல் மருத்துவம் படிக்கும் மாணவன், தனக்கு ஒரு ஆண்டு சீனியர் மாணவனை வாய் நிறைய அண்ணா என்று அழைக்கிறான்.
ஒருவர், முதுகலை படித்து முடித்து, அடுத்த ஆண்டே படித்த, அதே கல்லுாரியில், ஆசிரியராக சேருகிறார்.
முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் அவரை, 'சார்...' என்று அழைப்பானா அல்லது 'வாடா வாத்தி மச்சி...' என்பானா...
ஒருதலைமுறை என்பது, 20 - 25 ஆண்டுகள்; ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும், ஒரு மொழி, ஒரு சதவீதம் வார்த்தைகளை இழக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், சட்டைகளை உரித்து, புதிய சட்டை அணிந்து கொள்கின்றன.
இரட்டைக் குழந்தைகளில், சில நிமிடங்கள் முன்னதாக பிறந்தது அண்ணனாகிறது; பின்னதாக பிறந்தது தம்பியாகிறது.
பெற்ற தாயும், சாலையில் செல்லும் அதே வயது பெண்ணும் ஒன்றா... உன் தந்தை, உன்னை, 'மகனே...' என அழைக்காமல், அந்நியனை விளிப்பது போல, பெயர் சொல்லி அழைத்தால், உன் மனம் ஒப்புக் கொள்ளுமா...
பெற்றோர், மாமா, பெரியம்மா எனும் உறவு வார்த்தைகளில், 10 கிராம் அன்னியோன்யமும், 1 கிராம் ஆன்மாவும் கலந்திருக்கும்.
உன் மனம் பக்குவப்படவில்லை; அனுபவரீதியாய் உறவுகளின் வெளிப்பாடுகளை உணரும் நாள் வெகு சீக்கிரம் வரும்.
கேள்வி கேட்கும் சிறுவனான உன்னை, 'மகனே...' என வாஞ்சையாய் அழைக்கிறேனே... அந்த வாஞ்சை தான், உன் கேள்விக்கு ஆத்மார்த்தமாய் பதில் கூறும் உரிமையை தந்தது.
- அன்புடன், பிளாரன்ஸ்.
