
அன்புள்ள ஆன்டி...
என் வயது 10; பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி; சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார் தந்தை. இல்லத்தரசியாக உள்ளார் அம்மா. என் தந்தையுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளேன். அது, கடந்த ஓராண்டாக அமலில் உள்ளது. அதன்படி, நான் அதிகாலை, 6:00 மணிக்கு தவறாமல் எழுந்தால், மூன்று ரூபாய் கிடைக்கும். இரவு பல் துலக்கினால், மூன்று ரூபாய் உண்டு.
வீட்டுப் பாடங்களை உரிய நேரத்தில் போட்டு முடித்தால், மூன்று ரூபாய்; மிச்சம் வைக்காமல், மதிய உணவை சாப்பிட்டு, காலி டிபன் பாக்ஸ் எடுத்து வந்தால், மூன்று ரூபாய். கீழ்படிந்து நடந்தால், மூன்று ரூபாய் என பணம் கிடைக்கிறது.
இவற்றை கடைப்பிடிப்பதால் ஒப்பந்தபடி பணம் தருகிறார் என் தந்தை. ஒவ்வொரு மாதம் முடிவில், கணக்கு போட்டு, மொத்த தொகையும் என் கைக்கு வந்து விடும். இந்த பணத்தில், சுதந்திரமாக ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடலாம்; பொம்மை வாங்கலாம்; காமிக்ஸ் புத்தகம் வாங்கி படிக்கலாம் என கூறியுள்ளார் அப்பா.
ஆனால், இந்த நடைமுறையை கடுமையாக எதிர்க்கிறார் என் அம்மா. தந்தையுடன் நான் போட்டுள்ள ஒப்பந்தம் சரியா... அல்லது அம்மாவின் கண்டிப்பு சரியா... இறுதியாக ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க ஆன்டி!
இப்படிக்கு,
எம்.வேதிகா.
அன்பு மகளே...
கற்றுத் தந்த வித்தையை, சரியாக செய்து முடித்த குரங்கு, உரிய உணவுப்பொருளை பெறும். தெருவில், சரியான சீட்டை எடுத்துக் கொடுத்த கிளிக்கு, உணவாக நெல்மணிகள் தருவான் ஜோதிடன்.
சாகசம் செய்து, நீர் திரும்பும் டால்பினுக்கு, 'ஷோ' நடத்துபவர், இரு மீன்களைத் தருவார். கூடுதல் பொதி சுமக்கும் கழுதைக்கு, காகிதமோ, கேரட்டோ அவ்வப்போது கிடைக்கும். பாகனுடன் நகர்வலம் செல்லும் யானைக்கு, தேங்காய், பழம் சிறப்பு உணவாக கிடைக்கும்.
குரங்கு, கிளி, டால்பின், கழுதை, யானை போன்ற உயிரினங்கள் ஐந்தறிவுள்ளவை; அவை குறிப்பிட்ட செயலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு கையூட்டு தரப்படுகிறது. நீ, ஆறறிவு உள்ள சிறுமி. நன்றாக படித்தால், உன் எதிர்காலம் பிரகாசமாக அமையும்; சொந்தக்காலில் நிற்கும் வாய்ப்பு தேடி வரும். நன்றாக சம்பாதித்து பொருளாதார சுதந்திரம் அடைவாய்.
இருவேளை பல் துலக்கினால், நேரத்துக்கு உணவு உண்டால், உடல், மன ஆரோக்கியம் தவறாது கிடைக்கும். படிக்கவும், உடலை ஆரோக்கியமாக பேணவும், நீ லஞ்சம் கேட்கிறாய். இது நியாயமா...
நீ மூச்சு விடுவதற்கு தினமும், 100 ரூபாய் கேட்பாயா... உன் தந்தை ஒப்பந்தம் செய்து, பணம் கொடுக்கிறேன் என கூறும் போது, 'வேண்டாம்ப்பா... நான் சுய சுத்தத்தையும், கடமைகளையும் நிறைவேற்ற பலன் எதிர்பார்க்க மாட்டேன்...' என கூறி தடுத்திருக்க வேண்டும்.
இயல்பாகவே, வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை, உன் தந்தையுடன், வெளியில் போவதோ, ஐஸ்கிரீம் வாங்கி தின்பதோ லஞ்சத்தில் சேராது. தந்தை, மகள் உறவு உன்னதமானது; பணம் உள்ளே புகுந்து, உறவின் புனிதத்தை கெடுத்து விடக் கூடாது. இந்த பழக்கம், நாளாக நாளாக, உன்னை சுயநல பேயாக்கி விடும்.
எதை செய்தாலும், பதிலுக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவாய். சிறு வயதில் தேவைக்கு அதிகமாக பணம் புழங்கினால், ஆடம்பர செலவு அல்லது தண்ட செலவு செய்ய ஆரம்பித்து விடுவாய். ஒரு மாதம் அப்பாவின் ஒப்பந்தத்தால், 500 ரூபாய் வருகிறது என்றால், அடுத்த மாதம், 700 ரூபாயாக உயர்த்த, என்ன வழி என யோசிப்பாய்.
பணம் கொடுக்கும் அப்பாவிடம், செயற்கையாக பாசம் காட்டுவாய்; பணம் கொடுக்காத அம்மாவை புறக்கணிக்கவும் செய்வாய். இதனால், உறவு சிக்கல் எழும். உனக்கும், உன் தந்தைக்கும் இடையே எழுத்து பூர்வமான ஒப்பந்தம் இருந்தால், கிழித்து எறி. வாய் வழி ஒப்பந்தம் என்றால், மானசீகமாக துடைத்தெறி!
பொம்மலாட்டத்துக்கு உகந்த பொம்மை அல்ல நீ; சுயமாய் செயல்பட்டு, ஏட்டுக் கல்வியிலும், வாழ்க்கைக் கல்வியிலும், விஸ்வரூபம் எடு! வாழ்த்துகள் செல்லம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

