தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (161)

இளஸ் மனஸ்! (161)

இளஸ் மனஸ்! (161)


PUBLISHED ON : செப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 15; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன்; தினமும் செய்தி தாள் வாசித்து வருகிறேன். அன்றாடம், 'டிவி'யில் செய்திகள் கேட்டு நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறேன்.

சுற்றி நடக்கும் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. எங்கும், 'கச...கச...' என கூட்டம். காதை கிழிக்கும் இரைச்சல்; புதுப்புது வியாதிகள்; எல்லா துறையிலும் லஞ்சம், ஊழல் என வெறுப்பு ஏற்படுத்துகிறது.

ஜாதி, மத சண்டைகள் சகிக்க முடியவில்லை. எல்லா வம்பு தும்புகளையும் தலை மூழ்கி, எங்காவது ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் வீடு கட்டி வசிக்க ஆசைப்படுகிறேன்.

என் ஆசை நியாயமானதா... இது நடக்க சாத்தியம் உண்டா... இந்த செயல் நன்மை பயக்க கூடியதா என்பதை தயவுசெய்து சொல்லுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

ஆ.யாகேஷ்.


அன்பு மகனுக்கு...

முதலில், காட்டுக்குள் தனி வீடு கட்டிக் கொள்ள அரசு அனுமதி தருமா என்பதை சிந்தித்து பார். அப்படி அனுமதி கிடைத்தால் காட்டுக்குள் வீடு கட்ட குறைந்தபட்சம், 20 லட்ச ரூபாய் தேவை. அதற்கு உரிய பணம் வைத்திருக்கிறாயா...

அப்படி பணம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்... வீடு கட்ட தேவைப்படும் பொருட்களை, காட்டுக்குள் எப்படி எடுத்து செல்வாய்...

வீடு கட்ட கொத்தனார், சித்தாள் மற்றும் பணியாளர்கள் தேவை; அவர்களுக்கு எங்கே போவாய்... அப்படி வீடு கட்டிவிட்டால், நீ தனியாக குடியேறுவாயா அல்லது பெற்றோருடன் குடியேறுவாயா...

நீ மட்டும் குடியேறுகிறாய் என்றால், பின்னாளில் திருமணம் செய்து கொள்வாயா அல்லது தனி ஆளாக வாழ்வாயா...

காட்டில் வசிக்கும் உன் வீட்டுக்கு மின்சாரம் தேவைப்படும்; அதற்கு சூரிய சக்தி மின்சாரம் தயார் செய்து விடலாம்.

உணவு தேவைக்கு, சுய விவசாயம் செய்து, ஆடு, மாடு, கோழி வளர்க்கலாம்; மருத்துவர் உதவி அவசியம் என்றால், மூலிகை வைத்தியம் செய்து கொள்ளலாம்.

மேலும், 'டிவி' பார்க்க, 'டிஷ் ஆன்ட்டென்னா' பொருத்தலாம்; காட்டு மிருகங்கள் மற்றும் திருடர்களிடமிருந்து தப்ப துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

எல்லாம் சரி... மனித கூட்டத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது முறை தானா என விவாதிப்போம்...

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான் மனிதன். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நுாறுக்கும் மேற்பட்ட உறவுமுறை இணைப்புகள் உள்ளன.

கல்வி, மதம், அரசியல், நீதித்துறை, சட்டத்துறை, மருத்துவம், போக்குவரத்து, கட்டுமானம், சுற்றுலா, ராணுவம் என, எல்லாமே, நவீன மனிதருக்கு தேவைப்படும் அத்தியாவசியங்கள்.

எல்லா மருந்துகளுக்கும் உப விளைவுகள் உண்டு; எதுவுமே இல்லாதிருந்தால், கற்கால மனிதராகி விடுவோம். இரைச்சலும், சச்சரவும், கூட்டங்களாய் வாழும் மனிதரின் எச்சங்கள்.

உலகில், 700 கோடி மக்கள் இருக்கின்றனர்; எல்லாரும் சுயநலமாய் யோசித்து, காடுகளிலும், மலைகளிலும் வசிப்பது என்பது சாத்தியமே இல்லை. நல்லதோ, கெட்டதோ சேர்ந்து தான் வாழ வேண்டும். காற்று மாசு, நீர் மாசுகளை கூடியவரை குறைத்து, ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும்.

வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உலகின் கடைசி மனிதன் ஜீவிக்கும் வரை, உடன் வாழும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, மருத்துவ தரத்தை உயர்த்தி, வியாதிகளை தற்காலிகமாக ஜெயிக்க வேண்டும்.

உனக்கு, 15 வயதாகிறது. உயர் கல்வி படித்து, நல்ல வேலைக்கு செல்; மன மொத்த பெண்ணை திருமணம் செய்து கொள். உனக்கான வீட்டை கட்டி கொள்; பெற்றோரை பேணு; பணியில் நீ லஞ்சம் வாங்காதே... மத பூசல்களிலிருந்து விலகி நில்.

காற்று மாசு, நீர் மாசுகளை செய்யாதே. ஆண்டிற்கு, 10 நாள் கோடை வாச ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்; உலகமே மோசம் என கூறி, வாழ்வின் இருண்ட பக்கம் நிற்காதே. உலகின் பெரும்பாலானோர், நல்லவர்கள் என கூறி, வாழ்வின் வெளிச்ச பக்கம் நில்.

கடலின் ஒரு துளியாக கரைந்து போ. வானத்தின் நட்சத்திரங்களில் ஒன்றாகு. பாலை வன மணலின் துகளாகு. மனித கூட்டத்தில் விரும்பி தொலைந்து போ; நந்தவனத்தில் ஒரு பூவாக மலர்ந்து மணம் வீசு!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us