PUBLISHED ON : ஜூலை 08, 2023

அன்பு சகோதரிக்கு...
என் வயது, 45; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகளுக்கு, 17 வயதாகிறது. பிளஸ் 2 இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு மார்க்கெட்டில் கிடைக்கும், 'நம்பர் ஒன்' குளியல் சோப்பும், முக கிரீம்களும், வாசனை திரவியங்களும் தான் வாங்கி தருகிறேன்.
என் மகளுக்கு அவற்றில் திருப்தி ஏற்படவில்லை. இயற்கையாக கிடைக்கும் மஞ்சளின் மகத்துவம் பற்றி பலரும் மிகைப்படுத்தி சொல்வதாகவே எண்ணுகிறேன். உடல் பராமரிப்புக்கு மஞ்சளை என் மகள் பயன்படுத்தலாமா...
உங்கள் கருத்து என்ன... தயவு செய்து விபரங்களை சொல்லுங்கள்.
இப்படிக்கு,
லட்சுமி மணிகுமார்.
அன்புள்ள அம்மா...
மஞ்சளின் அறிவியல் பெயர், 'கர்குமா லோங்கா' என்பதாகும். ஆங்கிலத்தில், 'டர்மரிக்' என்பர். மஞ்சளை, 'இந்திய குங்குமப் பூ...' என்றும் அழைப்பர்.
மஞ்சளின் தாயகம் இந்தியா. இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. மஞ்சளிலுள்ள, 'கர்குமின்' என்ற வேதிப் பொருள் ஆக்சிஜனேற்றத்தையும், அழற்சி எதிர்ப்பையும் ஊக்குவிக்கிறது. உணவில் சிறிதளவு சேர்த்து பயன்படுத்தலாம்.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவை:
முட்டா மஞ்சள், கஸ்துாரி மஞ்சள், விரலி மஞ்சள், குரங்கு மஞ்சள், காட்டு மஞ்சள், மர மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குட மஞ்சள், பலா மஞ்சள், ஆலபுழை மஞ்சள் என்பவை ஆகும்.
மஞ்சள் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்...
* உடலில் வியர்வை நாற்றம் நீங்கும்
* தோல் சுருக்கம் அகன்று மென்மையாகும்
* பித்த வெடிப்புகள் மறையும்
* கர்ப்பபை வாய் புற்றுநோய் வராது
* முகம், கை, கால்களில் வளரும் தேவையற்ற ரோமங்கள் நீங்கும்
* வயிற்று புழு பூச்சிகள் சாகும்
* மூலம் குணமாகும்
* மஞ்சள், புதினா, உப்பு சேர்த்து பல் தேய்க்கலாம். பல் நோய்கள் வராது
* பெருங்குடல் அழற்சி நோய் குணமாகும்
* எலும்பு மஜ்ஜை புற்றுநோய், அல்சைமர் நோய் தடுக்கப்படும்
* தேவையற்ற உடல் எடை குறையும்
* ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும்
* கோரை கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்துாரி மஞ்சள் அரைத்து பச்சை பயிறு மாவு கலந்து பூசி குளித்தால் சருமநிறம் பளிச்சிடும்
* அலர்ஜி, அரிப்பு, தேமல், கரும்புள்ளி நீங்கும்.
பூஜைகளில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைப்பர். மஞ்சள் அரைத்து, வாசல் கதவுகளில் பூசுவர். அம்மை நோய் ஏற்பட்டால், மஞ்சளை கரைத்து குளிப்பாட்டுவர்.
மஞ்சளை, அரன்மசி, கசர்ப்பம், அரித்திரம், கதம்பரம், உத்தரம், கதுப்பு, அரிசக்தி, உரோசிதம் காதரி என்ற பெயர்களாலும் அழைப்பர்.
மகளுக்கு, பள்ளி நாட்கள் தவிர்த்து, விடுமுறையின் போது மஞ்சள் தேய்த்து குளிக்க வை.
பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு கலந்த, 'பேஷியல் பேக்' தயார் செய். இதை பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு தராது.
தொடர்ந்து, மஞ்சள் தேய்த்து குளித்து, மார்பு, அக்குள், இடுப்பு, தொடை இடுக்குகளில் பூஞ்சை தொற்று வராமல் பாதுகாக்கலாம்.
தேவைக்கு அதிகமாய் மஞ்சளை உள்ளும், புறமும் உபயோகிக்க வேண்டாம்.
மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்கள் மதுரை மீனாட்சி அம்மனின் அம்சம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
