தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்...! (28)

இளஸ் மனஸ்...! (28)

இளஸ் மனஸ்...! (28)


PUBLISHED ON : ஜன 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்சுக்கு...

அரசு பல்கலைக்கழகத்தில், துப்புரவு பணியாளராக பணிபுரிகிறேன்; மனைவி இல்லத்தரசி. எங்களுக்கு, மூன்று குழந்தைகள். மூத்தவன், 9ம் வகுப்பு படிக்கிறான்; இரண்டாம் மகன், 7ம் வகுப்பு படிக்கிறான். மூன்றாவதாக மகள், 3ம் வகுப்பு படிக்கிறாள்.

இரண்டாம் மகனுக்கு, இளவயது நீரிழிவு நோய். நான்கு ஆண்டுகளாக நோயுடன் போராடுகிறான்.

தினமும், என் கையால் தான், இன்சுலின் ஊசி போட்டு விடுகிறேன். அவனுக்கு, உணவுக்கட்டுப்பாடும் உண்டு. உடலில் காயம் ஏற்படும் என பயந்து, விளையாட போக மாட்டான். அண்ணன், தங்கையுடன் ஒட்டி உறவாட மாட்டான். ஆயுட்காலத்துக்கும் சிகிச்சையை தொடர வேண்டும் என்கிறார் மருத்துவர்.

வீடே நரகமாகி விட்டது. இந்த நோய் குணமாக ஏதேனும் வழி உண்டா... நல்ல பதிலை சொல்லுங்கள் சகோதரி.

அன்புள்ள சகோதரருக்கு...

உங்கள் மகன் மருத்துவ பிரச்னையை படித்து, இதயம் கனக்கிறது. சிறு வயது நீரிழிவு நோயை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்; இதை, மற்ற பெற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

* அதீத தண்ணீர் தாகம்; அடிக்கடி சீறுநீர் கழித்தல்

* கொடூர பசி

* தாறுமாறாய் எடை குறைவு

* மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு

* எரிச்சலுாட்டும் நடத்தை

* பழவாசனை சுவாசம்

* பார்வைக்கோளாறு

* காளான் தொற்று

இது போன்ற அறிகுறி தெரிந்தால், விழிப்புடன் மருத்துவ ஆலோசனை பெறவும்.

இளவயது நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது என, துல்லியமாக கண்டுபிடிக்கப்படவில்லை. உடலின் நோய் எதிர்ப்புசக்தி, பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழிப்பதற்கு பதிலாக, கணையத்தின் இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்து விடுவதால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மரபியல் தொடர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதிப்பும் கூட, இளவயது நீரிழிவு நோய்க்கு காரணங்களாக அமைகின்றன. குழந்தை பிறந்தவுடன், தாய்ப்பால் ஊட்டாமல் தவிர்ப்பதும் ஒரு காரணம்.

இந்த நோய், இதயம் மற்றும் ரத்த குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நரம்புகள் சேதமடைகின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது; கண்கள் பாதிக்கப்படுகின்றன; தோல் நோய்கள் வருகின்றன; எலும்பு பலமிழந்து போகிறது.

சரி... உங்கள் மகனுக்கு செய்ய வேண்டியவற்றை பார்ப்போமா...

* ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுங்கள்

* ஆரோக்கிய உணவை உண்ணவும், உடல் ரீதியான செயல்பாட்டை அதிகரிக்கவும் கற்றுக்கொடுங்கள்

* ஆண்டிற்கு ஒருமுறை, கண் பரிசோதனை செய்து கொள்ளவும்

* கொழுப்பு அளவு, தைராய்டு செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கண்காணிப்பது அவசியம்

* பழம், காய்கறி, தானிய உணவு கொடுக்கலாம்; உட்கொள்ளும், 'கார்போஹைடிரேட்' என்ற மாவு சத்தின் அளவை, சீராக பராமரிக்கவும்

* உடற்பயிற்சிகள் மூலம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்

* நோய் தொற்று ஏற்படாமல் கவனிப்பது நல்லது

* பருவ வயதை அடையும் போது, இன்சுலின் தேவை மாறுபடும்; அதை, மருத்துவர் அறிவுரைப்படி சீரமைக்கவும்

* ஆயுர்வேதம், சித்தா போன்ற இந்திய மருத்துவ முறைகளில், நீரிழிவுக்கு தகுந்த மருத்துவம் உண்டு; ஆங்கில மருத்துவத்துடன், அந்த மருந்துகளையும், மருத்துவர் ஆலோசனையுடன் எடுக்கலாம்

* யோகா பயிற்சி வகுப்பில் மகனை சேர்க்கவும்

நீரிழிவு நோயிலிருந்து, நிரந்தரமாக குணமடைவது சாத்தியமில்லை; வெளிப்புறம் பூட்டிய வீட்டுக்குள் பாம்புடன் வாழும் நிலை தான் இது. பாம்பிடம் கடி படாமல் சமாளித்து வாழ கற்றுக்கொடுங்கள் சகோதரரே!

மருத்துவம் பார்க்காத நீரிழிவுநோய், கோமா வரை கொண்டு சென்று, மரணத்தை பரிசளிக்கும்; தகுந்த மருத்துவம் பார்த்து, இந்திய சராசரி வயது வரை, மகனை வாழ வைக்க பிரார்த்திக்கிறேன்.

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us