PUBLISHED ON : அக் 24, 2020

அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...
நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி; கூட்டு குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தோம். பின், சிறு பிரச்னையால் பிரிந்தோம்; பெற்றோர், தங்கையுடன் வாழ்கிறேன்.
வாழ்க்கையில் சோகம், சந்தோஷம் என, எது நடந்தாலும் அதை ஏற்கும் விதம் கூட தெரியாது. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை கொண்டவள் நான். இதனால் பெற்றோர் மிகவும் கவலையடைகின்றனர்.
எதையும் கண்டுக்கொள்வதே இல்லை நான்.
அப்பாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை; அம்மா மிகவும் அன்பானவர். எல்லா குறைகளும் என்னிடம்தான் இருக்கின்றன. அது எனக்கே தெரியும்; அதிலிருந்து வெளியேவர முடியாமல் தவிக்கிறேன்.
எனக்கு கணக்கு பாடம், பிடிக்கவே பிடிக்காது; அதனால் குடும்பத்தில் பிரச்னை எழும். குடும்பத்தாருடன் பலத்த சண்டை வரும்.
என் காதணியே அறுந்து விழும் அளவிற்கு பெரும் சண்டையும் கைகலப்பும் வந்துள்ளது! இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இப்படி ஒரு மனநிலையில் வாழ்வது நல்லதா... இந்த மனநிலையிலிருந்து வெளியேறி, கணக்கு பாடத்தில் ஆர்வம் காட்டவும், நல்ல பெண்ணாக சாதிக்கவும், ஒரு வழிச் சொல்லுங்க ஆன்டி!
அன்பு மகளே...
உன் மனச்சஞ்சலம் புரிகிறது; கூட்டுக் குடும்பத்தில் இருந்தவரை நன்றாக இருந்திருக்கிறாய் என ஊகிக்கிறேன்.
ஒட்டிப் பிறந்த உறவுகளோடு ஒன்றாக வாழ்வதில் உள்ள சுகம் தனி. அதில், இன்பம் வரும் போது பகிர்ந்து கொள்ளவும், துன்பம் நேர்கையில் தாங்கிப் பிடிக்கவும் உறவுகள் முன்வருவர்.
தனிக் குடித்தனத்தில், அந்த வசதி கிடையாது; அனைத்து முடிவுகளையும் நாமே எடுக்க வேண்டும். அதில் வரும், நன்மை, தீமைகள் நம்மையே சாரும். கூட்டுக் குடும்பத்தில், சந்தோஷமாக வாழ்ந்த நீ, தனிக் குடித்தனத்தில், பெற்றோரை தவிர யாருடைய ஆதரவும் இன்றி தனித்து விடப்பட்டுள்ளாய்.
இது உனக்குள் ஒரு பாதிப்பையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என கருதுகிறேன்.
அதனால் ஏற்பட்ட விரக்தி, எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்துள்ளது.
நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு வரும் பக்குவம், 16 வயதில் உனக்கு வந்திருக்கிறது. இதில் சாதகமும் உள்ளது; பாதகமும் உள்ளது.
'சித்தன் போக்கு சிவன் போக்கு' என, இருந்து விட்டால், வாழ்க்கையில் எந்த முயற்சியிலும் ஈடுபட மனம் விழையாது. முன்னேறுவதற்கான வழிகளை தேடுவதிலும் கவனம் செல்லாது.
இது, உன்னைப் போன்ற, சிறுமியருக்கு ஏற்றதல்ல; பள்ளி படிப்பு முடித்து, கல்லுாரிக்குச் சென்று, உயர் படிப்புகளை படித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கும்.
அதேசமயம், வெற்றி, தோல்விகளை சமமாக பாவிக்கும் நல்ல மனோநிலை உண்டாகும்.
இந்த ஒரு அம்சத்தை மட்டும் பின்பற்று...
மற்றபடி, 'வாழ்க்கையில் எப்பாடு பட்டாவது முன்னேற வேண்டும்' என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்.
அந்த எண்ணமே கணக்கு பாடத்தின் மீதுள்ள வெறுப்பை போக்கி, ஈர்ப்பை ஏற்படுத்தி விடும்.
'முடியாதது எதுவுமில்லை' என்ற எண்ணத்தை, பசுமரத்தாணி போல பதிய வை. அப்போது, எத்தகைய கடினமான கணக்காக இருந்தாலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும்.
கணக்கின் அடிப்படையை புரிந்து கொண்டால், அதை விட சுலபமான பாடம் வேறு இல்லை என்பது என் அனுபவம்.
கணக்கு பாடத்தில் ஈர்ப்பு வர, ஆசிரியர்களும் ஒரு வகையில் காரணமாக இருப்பர். அவர்கள், மிகக் கடினமான கணக்கையும், சுலபமான வழியில் போடுவதற்கு கற்றுத் தருவர். உன் கணித ஆசிரியர் எப்படிப்பட்டவர் என தெரியாது. இருந்தாலும் நல்ல கணிதப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
ஒரு கணக்கை திரும்பத் திரும்ப போட்டு பழகினால், சுலபமாக வரும்.
எதிலும் விடா முயற்சி தேவை என்பதை புரிந்து கொள்; கணக்குப் பாடம் சரியாக வரவில்லை என்பதால், உன் குடும்பத்தாருடன் சண்டை வருவதாக கூறியிருக்கிறாய். அத்தகைய சூழலுக்கு இடம் தர மாட்டேன் என, மனதில் ஒரு வைராக்கியத்தை கடைபிடி.
'கணக்கு பாடத்தில் தேர்ச்சி பெற்று பாராட்டு வாங்குவேன்' என, மனதில் அடிக்கடி கூறியபடியே இரு. நிச்சயம் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெறுவாய். குடும்பத்திலும் அமைதி ஏற்படும்.
தடைகளை கடந்து முன்னேற வாழ்த்துகள்!
- என்றும் அன்புடன், பிளாரன்ஸ்
