
அன்பு பிளாரன்சுக்கு...
என் மகளின் வயது, 14; பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறாள்; இரண்டு ஆண்டுகளாக, தலைவலிப்பதாக கூறி, தலையில் ரிப்பன் கட்டிக் கொள்கிறாள். மஞ்சள் நிற வலி நிவாரணி களிம்பு குப்பியை எப்போதும் கையில் வைத்திருக்கிறாள். அதை அடிக்கடி நெற்றியில் பூசிக் கொள்கிறாள்.
அவள் அருகில் சென்றாலே, வலி நிவாரணி வாசனை தான் வருகிறது. 10 நாட்களில், ஒரு குப்பியை காலி செய்து விடுவாள். சொந்த பந்தங்களும், நட்புகளும் அவளுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கின்றனர். மருத்துவரிடம் போகலாம் என்றால் மறுக்கிறாள்.
என்ன செய்யலாம். நல்ல ஆலோசனை கூறுங்கள்.
அன்புள்ள அம்மா...
தலைவலி நிவாரணி களிம்பில், ப்யூட்டி லேட்டட் ஹைடிராக்சி டோலோன், லவங்க இலை எண்ணெய், சிட்ரனில்லா எண்ணெய், கிராம்பு எண்ணெய், லெமன் கிராஸ் எண்ணெய், யூகலிப்ட்ஸ் எண்ணெய், மைக்ரோ கிரிஸ்டலைன் மெழுகு, பாரபின், பெட்ரோலேட்டம், க்வாநோலின், மஞ்சள், கற்பூரம், மென்தால், மெதில் சாலிசிலேட் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன.
இதை, 12 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே உபயோகிக்க வேண்டும். வெளி உபயோகத்துக்கு உரியது; தற்காலிக வலி நிவாரணி.
உன் மகளுக்கு, 'சைக்கோஜெனிக் பெய்ன் டிசாடர்' என்ற பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வகை மனநோய் உள்ளவர்களுக்கு, உடலில் எந்த பிரசனையும் இருக்காது. சிறிதே மனநிலை பிறழ்ந்தவர்களாக இருப்பர். பள்ளி ஆசிரியை அல்லது மாணவர்களால் எதாவது ஒரு விதத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பர்.
எதாவது ஒரு துக்கம் மனதில் குடியிருக்கும் அல்லது பதின்ம வயதிலேயே காதல் வயப்பட்டிருக்கலாம்.
மகளை, ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்; சைக்கோதெரபியும், ஆன்ட்டி டிப்ரசன்ட்டுகளும் குணப்படுத்தும்.
மனநோய் எதுவும் இல்லை என உறுதியானால், தலைவலிக்கு கீழ்க்கண்டவை காரணங்களாக இருக்கலாம்...
* விளையாடியபோது, தலையில் அடிபட்டு உள்காயம் பட்டிருக்கக் கூடும்
* மைக்ரைன் என்ற ஒற்றை தலைவலி அல்லது மன பதட்டமாக இருக்கலாம்
* காதில் தொற்று அல்லது சைனஸ் பிரச்னையாக இருக்கலாம்
* உணவு மற்றும் குளிர்பானங்களின் ஒவ்வாமையாகவும் இருக்கலாம்.
மூளையில் பிரச்னை இருப்பதாக பட்டால், 'ஸ்கேன்' செய்து பார்க்கலாம். மரபியல் தொடர்ச்சி மற்றும் பார்வைக் கோளாறும் காரணமாக இருக்கலாம். நடுராத்திரி வரை அலைபேசி பார்த்தாலும் இது போல் இருக்கும்.
அவளை கூர்ந்து கவனிக்கவும்...
* நன்கு துாங்கிக் கொண்டிருக்கும் போது, 'திடுக்' என எழுகிறாளா?
* ஆளுமையில் திடீர் மாற்றம் தெரிகிறதா?
* வாந்தி, தலைச்சுற்றல், காய்ச்சல், கழுத்து வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறாளா...
இவற்றில் எதாவது ஒன்று இருந்தாலும், உடனே பெண் மருத்துவரிடம் அழைத்து செல்லவும். முழு உடல் பரிசோதனை செய்யவும்.
நேரத்துக்கு துாங்கி எழுகிறாளா என பார்க்கவும்; துாங்கும் அறை காற்றோட்டமாக இருக்கட்டும்.
காபி குடிப்பதை குறைக்கவும். பதிலாக, தேன் கலந்த பசும்பால் கொடுக்கவும்.
தினமும், எட்டு டம்ளர் வரை தண்ணீர் குடிக்க சொல்லவும்.
பள்ளியில் எதாவது பிரச்னை இருந்தால் ஆராய்ந்து சரி செய்யவும்.
தலையில், பேன், பொடுகு தொந்தரவு இருந்தால், 'கென்ஸ்' உபயோகித்து நீக்கவும். தலைவலியில் இருந்து மகள் நிரந்தரமாய் குணமடைய வாழ்த்துகள்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

