
விவசாயி தினமும் வயல்வேலை செய்வதற்காக விடியற்காலை யில் எழுந்து செல்வான். பொழுது புலர்ந்து விட்டது என்பதை சேவல் கூவும் குரலில் இருந்தே அறிந்து எழுந்து கொள்வான். இதனால் சேவலுக்கு ஒரு கர்வம் வந்தது.
'இந்த விவசாயி நம்மை விட எவ்வளவு பெரிய ஆள். இருந்தும் ஒரு நாளாவது நான் கூவுவதற்கு முன்பாக எழுந்திருக்கிறானா? தினமும் நான்தான் கூவி எழுப்ப வேண்டி யிருக்கு... வெட்கம் கெட்ட மனுஷன்... சுய புத்தி வேணாம்... அப்படி என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு...?'என்று தனக்குள்ளே திட்டித் தீர்த்தது.
ஒரு நாளைக்காவது கூவாமல் இருந்து இந்த விவசாயியை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்த சேவல் திட்டமிட்டபடியே மறுநாள் விடியற்காலை நேரத்தில் கஷ்டப்பட்டு, தன் இயல்பை அடக்கி, கூவாமல் இருந்தது.
கொஞ்ச நேரத்திற்குப் பின், வீட்டிற்குள் இருந்து மின் விளக்கு வெளிச்சம் பரவியது. சிறிது நேரத்தில் விவசாயி வெளியில் வந்து, முகம் கழுவிக் கொண்டு வயல்காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான்.
சேவலுக்கு ஒரே சந்தேகம்... 'இவன் எப்படி எழுந்தான்... நாம்தான் தெரியாத்தனமாக கூவித் தொலைத்து விட்டோமா அல்லது தூரத்தில் வேறு சேவல் ஏதும் கூவி எழுந்து விட்டானா?' குழப்பத் துடன் இருந்தது.
மடிலை வீடு திரும்பிய விவசாயி தன் மனைவியிடம், ''வழக்கமாக சுவர் கடிகாரம் அடிச்சு ஓஞ்ச கொஞ்ச நேரத்துல நம்ப சேவலும் கூவ ஆரம்பிச்சிடும். ஆனா இன்னிக்கு கூவலே. நோய் ஏதாவது தாக்கி இருக்கான்னு தெரியலே. எதுக்கும் இன்னிக்கு ஒருமுறை பார்த்துட்டு, அது கூவலேன்னா பேசாம புடிச்சி அறுத்திடு... நல்லா இருக்கும் போதே வாய்க்கு ருசியா நாலுத்துண்டு கறியாவது தின்போம்...!'' என்றான்.
விவசாயியின் பேச்சைக் கேட்ட சேவலுக்கு, 'பகீர்' என்றது.
'ஐயோ கடவுளே... நம்மால்தான் எல்லாம் நடக்கிறது என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு' என்று உணர்ந்து, மறுநாளில் இருந்து மழை, புயல், இடி ஏன் உடம்பே சரியில்லா விட்டாலும், கூவுவதை நிறுத்தவே இல்லை.
***

